May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இம்முறை குருபெயர்ச்சி தீய பலன்களை உண்டாகுமா?

இலங்கையின் பிரபல ஜோதிடர்
தெஹிவளை ஆயர்பாடி ராமகிருஷ்ணன்

வாக்கியப் பஞ்சாங்கப்படி நவம்பர் 15-ம் திகதியும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 20-ம் திகதியும் குருபெயர்ச்சி நிகழ்கின்றது.

இதுவரை தனு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வியாழன் தற்போது மகர ராசிக்கு வந்திருக்கிறது. மகரம் வியாழனுக்கு நீசம் உண்டாக்கும் ராசியாகும்.

இதுவரை தனுவில் சொந்த வீட்டில் ஆட்சிப் பலத்துடன் இருந்த சுபக்கிரகம் வியாழன் இனி பலமிழக்கப் போகிறது என்பதால் இனிமேல் மக்களுக்கு தீய பலன்கள் உண்டாகுமா? என்று அனைவரும் பயப்படுவது இயல்பானதே. ஆனால் அப்படி பயப்படத் தேவையில்லை என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கிரகங்களது பலம்-பலவீனம் இவைகளை ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் என்று ஐந்து வகையாக குறிப்பிடலாம். இவற்றில் நட்பு, பகை என்பவைகளை அவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

மற்றைய ஆட்சி, உச்சம் இரண்டும் நல்ல பலன்களை தருபவை. நீசம் என்பது கிரகம் பலமிழந்த நிலையாகும். சுபம் தரும் கிரகம் பலமிழந்தால் நன்மை கிடைக்காது. ஆனால் தீமை தரும் கிரகம் பலமிழந்தால் நன்மை கிடைக்கும். இதைக் கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள்.

சுபக் கிரகங்களான வியாழன், சுக்கிரன், புதன், சந்திரன் இவைகள் பலமிழக்கக்கூடாது. அசுபக் கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது கிரகங்கள் பலம் அதிகரிக்கக்கூடாது. ஒன்பது கிரகங்களில் நான்கு சுபக் கிரகங்கள்; ஐந்து அசுபக் கிரகங்கள் என்பதால் உலகில் நன்மையை விட சிரமம் தான் அதிகமாக உள்ளது.

கிரகத்தை ஓர் அதிகாரி என்று எடுத்துக்கொண்டால் அவர் தனது அலுவலத்தில் உள்ளபோது அவருக்குள்ள அதிகாரம் உச்ச பலம் எனலாம். அவர் தனது வீட்டில் இருக்கும்போது அவருக்குள்ள சுதந்திரம் ஆட்சிப் பலம் எனலாம்.

அவர் சுகவீனமாகி வைத்தியசாலையில் இருக்கும் போது அவருக்குள்ள பலவீனம் நீசம் பெற்ற நிலை எனலாம். அவர் நோய் தணியப் பெற்று வைத்தியசாலையில் இருந்தபடியே தனது உத்தியோக அதிகாரத்தை நிறைவேற்றும் நிலையை நீசபங்க ராஜயோகம் என்று கூறலாம்.

தற்போதைய அசைவினால் சுபக்கிரகம் நீசம் என்கின்ற பலவீனமான நிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் அது இடையிடையே நீசபங்க ராஜயோகத்தையும் பெறவிருப்பதால் நன்மையும் கிடைக்கப்போகிறது என்தை மறுக்க முடியாது.

ஜோதிட விதி பின்வருமாறு கூறுகிறது; ஒரு கிரகம் நீசமானால் அவ்வீட்டுக்குரிய உச்சக் கிரகம் அல்லது ஆட்சிக் கிரகம் சந்திரனுக்கு அல்லது லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 01, 04, 07, 10, இடங்களில் வரும் போது நீசம் பெற்ற கிரகம் நீச பங்கம் பெற்று ராஜயோக பலனைத்தரும்.

எனவே தற்போது வியாழன் நீசம் பெறும் மகரம் வீட்டுக்குரிய ஆட்சிக் கிரகம் சனி, உச்சக் கிரகம் செவ்வாய் இந்த இரண்டு கிரகங்களுக்கும் சந்திரன் கேந்திரங்களில் வரும் போது வியாழன் நீசபங்க ராஜயோக பலனைத்தரும்.

சந்திரன் ஒரு ராசியில் 2 நாள் இருப்பதாக கொண்டால் சனிக்கு கேந்திரம் 8 நாள். செவ்வாய்க்கு கேந்திரம் 08 நாள். மொத்தம் ஒரு மாதத்தில் 16 நாட்கள் வியாழன் நீச பங்க ராஜயோகம் பெற்று சுப பலனை மக்களுக்கு தரப்போகிறார்.

இவற்றையும் விட லக்ன கேந்திரம் நாளொன்றிற்கு 16 மணித்தியாலங்கள் வரும் இதுவும் நீச பங்க ராஜயோக பலனையே தரவிருக்கிறது. உச்சம் பெறும் போது இருக்கும் பலத்தை விட நீச பங்கத்திற்கு அதிக பலம் கிடைக்கிறது.

எனவே இனிமேல் மக்களுக்கு ஆத்ம பலம் அதிகரிக்கும். இறைவனது ஆசிர்வாதம் கிடைக்கும், இயற்கை மனிதர்களை காப்பாற்றும், கொவிட்-19 தொற்று கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.