November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈழத் தமிழர் விவகாரத்தை’ எப்படி கையாளப் போகின்றது பைடனின் அமெரிக்கா?

-குகா

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக “அமெரிக்க வரலாற்றின் சிங்கம்” என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் வர்ணிக்கப்பட்ட, அவருடன் 8 வருடங்கள் உப ஜனாதிபதியாக பயணித்த – ஜோசப் ரொமினட் பைடன் தெரிவாகியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தயாராக இருக்கும் 77 வயது ஜனாதிபதியின் எதிர்கால கொள்கைகளை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அமெரிக்க வரலாற்றில் துணை ஜனாதிபதியாகும் முதல் பெண்மணியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அம்மையார்  பதவியேற்கப் போகிறார்.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சி வேட்பாளராகவும் ஜே பைடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகவும் களம் இறங்கினார்கள்.

தேர்தல் முடிந்து அதேநாள் முடிவுகள் வெளிவர வேண்டிய நிலையில், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவான தபால் வாக்குகளாலும், சில மாநிலங்களில் நிலவிய கடிமையான போட்டி காரணமாகவும் நீண்ட தாமதத்தின் பின்னரே பைடன் ஜனாதிபதியாகத் தெரிவான செய்தி உறுதி செய்யப்பட்டது.

எனினும் தோல்வியை ஏற்க மறுத்துள்ள ட்ரம்ப் தொடர்ந்து தேர்தல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டிருக்கிறார். சில மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் தொடர்பில்  ட்ரம்ப் தொடர்கின்ற வழக்குகளின் முடிவு தெரியாமல் வெள்ளை மாளிகையை விட்டு அவர் வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

அமெரிக்க அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட பைடன் எப்படி அமெரிக்காவை ஆளப்போகின்றார், எந்தவகையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருக்கிறார், வெளிநாடுகளுடன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

2009 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா உலக நாடுகளுடன் கடைப்பிடித்த நட்புறவு போக்கை பைடனும் கையில் எடுப்பாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

ஒபாமாவுடன் துணை ஜனாதிபதியாக 8 ஆண்டுகள் பயணித்த பைடன், அவர் கொண்டு வந்த நல்லுறவை மீண்டும் அமெரிக்காவுக்கு பெற்றுக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் பேரவை

ஈழத் தமிழர்களின் நலன்களில் அதிக அக்கறை காட்டியவராக பார்க்கப்பட்ட ஒபாமாவின் பாதையில் பைடனும் பயணிப்பாரா என்பதே இன்று அவர்கள் மத்தியில் எழுந்து நிற்கும் கேள்வியாகும்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த காலகட்டத்தில் பதவியேற்ற ஒபாமா நிர்வாகம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை கொடுத்திருந்தது.

ஐநா மனித உரிமைகள் பேரவை- ஜெனிவா

குறிப்பாக, யுத்தத்தின் போது நடந்த குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் 2014 ஆம் ஆண்டில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் ஒபாமா நிர்வாகம் முக்கிய பங்கு வகித்தது.

ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்து அவர் சென்ற பின் பதவிக்கு வந்த ட்ரம்ப், ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறக் காரணமாக இருந்தார்.

அதன்பின்னர் இலங்கை மீதான தீர்மானம் தள்ளாடிய நிலையிலேயே நிற்கிறது. அமெரிக்காவுக்கு பதிலாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகள் களம் இறங்கி இருந்தாலும் அந்தத் தீர்மானம் தொடர்பான செயற்பாடுகளில் தொய்வு நிலையே காணப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து முக்கிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு, பைடன் கைகொடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஜனாதிபதிகள் மாறினாலும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் மாறுவதில்லை என்பது தான் ஆய்வாளர்களின் கருத்து.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு கூறிச்சென்ற செய்திகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் வெளிப்பாடாக அமைந்தது.

என்றாலும், ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருக்கும் பைடனின் எதிர்கால செயற்பாடுகள், சீர்திருத்தங்கள் தமக்கு நீதி வழங்குவதாக அமைய வேண்டும் என்பதே போரில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாகும்.

பைடனின் வெற்றிக்கு டுவிட்டரில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

“வரலாற்று ரீதியிலான உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஜோ பைடன். எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி உங்களுடன் பணியாற்ற எதிர்பார்க்கிறேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பைடனின் ஆட்சியில் அமெரிக்க- இலங்கை உறவு எவ்வாறு அமையப் போகின்றது – இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்காலத்தில் அது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது போன்ற கேள்விகளுக்கு வரும் காலமே பதில் சொல்லும்.