லா லிகா கால்பந்தாட்டத் தொடரில் 5 போட்டிகளின் பின்னர் பார்ஸிலோனா கழக அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
போட்டியில் ரியல் பேடிஸ் கழக அணியை 5-2 எனும் பாரிய கோல் வித்தியாசத்தில் பார்ஸிலோனா கழக அணி வெற்றிகொண்டது.
லா லிகா கால்பந்தாட்டத் தொடர் ஸ்பெய்னில் நடைபெறுகிறது. இதில் பார்ஸிலோனா மற்றும் ரியல் பேடிஸ் கழக அணிகள் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு போட்டியில் மோதின.
போட்டியின் 22 ஆவது நிமிடத்தில் பார்ஸிலோனா அணி வீரரான டெம்பேலே முதல் கோலைப் போட்டார். 45 ஆவது நிமிடத்தில் ரியல் பேடிஸ் அணி தரப்பில் சனபிரியா கோலொன்றைப் போட முதல் பாதியில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
இரண்டாம் பாதியில் பார்ஸிலோனா அணி வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. கிறீஸ்மன் 49 ஆவது நிமிடத்தில் கோலடிக்க பார்ஸிலோனா அணி முன்னிலைப் பெற்றது.
ரியல் பேடிஸ் அணியின் மேன்டி 60 ஆவது நிமிடத்தில் கோலடித்த போதிலும் அவரது விதிமுறை மீறிய செயற்பாட்டால் நடுவரால் சிவப்பு அட்டைக் காட்டப்பட்டது.
நட்சத்திர வீரரான லியோனல் மெஸி 61 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாகப் பூர்த்தி செய்தார்.
கோலடிக்க கடும் பிரயத்தனம் எடுத்த ரியல் பேடிஸ் அணி சார்பாக மோரொன் 73 ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆறுதல் கொடுத்தார்.
மீண்டும் திறமையை வெளிப்படுத்திய லியோனல் மெஸி 82 ஆவது நிமிடத்தில் கோலடிக்க கொன்சாலெஸ் 90 ஆவது நிமிடத்தில் கோட்டு அசத்தினார். பார்ஸிலோனா அணி 5 கோல்களைப் போட்டு ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது.
ரியேல் பேடிஸ் அணியால் மேலதிகமாக கோலடிக்க முடியாது போக போட்டியில் 5-2 எனும் கோல் கணக்கில் பார்ஸிலோனா கழக அணி வெற்றிபெற்றது.
லா லிகா கால்பந்தாட்டத் தொடரில் பார்ஸிலோனா கழக அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 11 புள்ளிகளைப் பெற்று எட்டாமிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.