ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடெல்ஸ் அணி பிளே ஒப் சுற்றுக்கு இரண்டாவது அணியாகத் தெரிவாகியுள்ளது.
அபுதாபியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் முதல் விக்கெட் 25 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. ஜோஸப் பிலிப் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தெவ்தத் படிக்கால் 50 ஓட்டங்களையும், அணித்தலைவர் விராத் கோஹ்லி 29 ஓட்டங்களையும், ஏபி டிவிலியர்ஸ் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும் ஏபி டிவிலியர்ஸ், சிவம் டுடே ஆகியோரின் துடுப்பாட்டத்தின் மூலம் பெங்களுர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.
அன்ரிச் நொட்ஜி 3 விக்கெட்டுகளையும், ககிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கான 153 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணி 19 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பிரித்வ் ஷோ 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஆனாலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷிகர் தவான் மற்றும் அஜின்கெயா ரஹானே ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றிபெறும் நம்பிக்கைக்கு உயிரூட்டியது. ஷிகர் தவான் 54 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து வந்த அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ஓட்டங்களுடனும், அஜின்கெயா ரஹானே 60 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க டெல்லி அணி 17.2 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
என்றாலும், அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதுடன், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ஆவது ஓவரில் 10 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து வெற்றியை உறுதிசெய்தார். டெல்லி அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்து பிளே ஒப் சுற்றையும் உறுதிசெய்துகொண்டது.
பெங்களுர் அணி இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் தொடரின் கடைசி லீக் ஆட்டமாக 3 ஆம் திகதி நடைபெறும் மும்பை மற்றும் சன்ரைசஸ் அணிகளின் மோதலின் முடிவு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற்றால் பெங்களுரும், கொல்கத்தாவும் பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறலாம்.
சன்ரைசஸ் வெற்றிபெற்றால் அது பிளே ஒப் சுற்றுக்கான எஞ்சிய இரண்டு அணிகளையும் தீர்மானிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். பெங்களுர், கொல்கத்தா அணிகள் தலா 14 புள்ளிகளுடன் சமநிலை வகிப்பதுடன், சன்ரைசஸ் அணியும் 14 புள்ளிகளைப் பெற்றுவிடும் என்பதே அதற்குக் காரணமாகும். அப்போது நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் இந்த மூன்று அணிகளில் முன்னிலையில் இருக்கும் இரண்டு அணிகள் பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறும்.