January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெங்களூரை வீழ்த்தி பிளே ஒப் சுற்றை நெருங்கியது ஹைதராபாத்

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்ஜர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றதால் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் எதிர்பார்ப்பு பிரகாசமாகியுள்ள அதேநேரம், பெங்களூர் ரோயல் செலஞ்ஜர்ஸ் அணி பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாவதில் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.

சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்தாடிய பெங்களூர் ரோயல் செலஞ்ஜர்ஸ் அணி வழமைக்கு மாறாக விக்கெட்டுகளை இழந்து சிரமத்துக்குள்ளானது. தெவ்தத் படிக்கால், அணித்தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் 10க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றமளித்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏ பி டி வில்லியர்ஸினால் 24 ஓட்டங்களையே பெறமுடிந்தது. அதிரடி வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ஆடியவிதம் டெஸ்ட் ஆட்டத்தைவிட மந்தமாக இருந்தது. ஜோசப் பிலிப் 32 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 21 ஓட்டங்களையும் பெற்று அணியை தலைநிமிர வைத்தனர்.

பெங்களூர் ரோயல் செலஞ்ஜர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டது. சந்திப் சர்மா, ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

121 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலளித்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 10 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அணித்தலைவர் டேவிட் வோனர் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விருத்மன் ஷஹா 39 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் பெற்று ஹைதராபாத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றிக்கு அமைவாக ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் நான்காம் இடத்துக்கு முன்னேறியது. அடுத்ததாக அவர்கள் எதிர்வரும் மூன்றாம் திகதி மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். அதிலும் வெற்றிபெற்றால் பிளே ஒப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும்.