சைவ சமய அடியாருள் காலத்தால் முந்தியவர் திருமூல நாயனார். அவரின் குருபூசை தினம் ஐப்பசி அச்சுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருமூல நாயனார் வரலாறு:
திருக்கைலாய மலையில் சிவபெருமானுக்கு காவலாக நிற்பவர் நந்திதேவர். திருநந்திதேவருக்கு பல மாணாக்கர்கள் இருந்தும் அவரது திருவருள் பெற்ற மாணாக்கர்களுள் அட்டமா சித்திகளும் கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவரது பெயர் சுந்தரநாதர்.
அகத்திய முனிவரிடம் சிறந்த நட்பு கொண்டிருந்ததால், சுந்தரநாதர் அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலைக்குப் புறப்பட எண்ணினார். திருக்கைலையிலிருந்து புறப்பட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.
திருக்கேதாரம், நேபாளம், திருசைலம் வழியாக திருக்காளத்தி மலையை அடைந்தார். அங்கிருந்து திருவாலங்காடு, காஞ்சி, தில்லை முதலிய திருத்தலங்களிலுள்ள சிவாலயங்களை வழிபட்டு திருவாவடுதுறை என்னும் புண்ணிய தலத்தை அடைந்தார்.
திருவாவடுதுறை உமாதேவியார் பசுக் கன்று வடிவம் பூண்டு சிவனை நினைத்து தவம் செய்த பெருமை மிக்க திருத்தலம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் பசுபதியார். காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் திருவாவடுதுறை நல்ல செழிப்பும் வளமும் நிறைந்து காணப்படுகிறது.
இத்தலத்து இறைவனை வழிபட்ட சுந்தரநாதர் அங்கு சிலகாலம் தங்கினார். ஒருநாள் சுந்தரநாதர் காவிரி ஆற்றங்கரை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்பொழுது சாத்தனூரைச் சேர்ந்த மூலன் என்னும் பெயர் கொண்ட இடையன் அவ்வழியாக ஆநிரைகளை மேய்த்து வந்துகொண்டிருந்தான்.
மூலன் கருணை உள்ளம் படைத்தவன். பசுக்களை துன்புறுத்தாமல் நல்ல நிழல் உள்ள இடமாக பார்த்து மேய விடுவான். பாதுகாப்புடனும் அன்புடனும் பேணி வளர்ப்பான். இதனால் அவனுக்கு நல்ல ஊதியம் கிடைத்தது. மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
மூலன் ஆநிரை மேய்க்கும் அழகான காட்சியை யோகியார் சுந்தரநாதர் கண்டு தம்மை மறந்த நிலையில் நின்றார்.
அப்பொழுது எதிர்பாராத சம்பவம் ஒன்று அங்கே நிகழ்ந்தது. பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டு நின்ற மூலன் திடீரென கீழே விழுந்து இறந்து விட்டான். மூலனைச் சுற்றி பசுக்கள் கூடின.
அவைகளின் கண்களில் நீர் தாரையாக வழிந்தது. மூலனை தம் நாக்கால் நக்கியும் உடம்பினால் உராய்ந்தும் ஆநிரைகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தின. ஒன்று சேர்ந்து கதறின. ஓடித் திரிந்தன.
பசுக் கூட்டங்கள் படும் காட்சியைக் கண்ட யோகியார் சுந்தரநாதர் இரங்கினார். எம்பெருமான் திருவருளால் ஆநிரைகளின் துயரைத் துடைப்பேன் என்று தமக்குள் எண்ணினார். தன் முடிவில் உறுதி கொண்டார்.
யோகியார் சுந்தரநாதர் மூலனின் உடலுக்குள் தம் உயிரைப் புகுத்தினார். இதனை கூடுவிட்டு கூடு பாய்தல் (பரகாய பிரவேசம்) என்று சொல்வார்கள்.
மூலன் உறங்குபவன் போல் கண் விழித்து திருமூலராய் எழுந்தான். ஆநிரைகள் ஆனந்தமடைந்தன. சித்தருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. மாலை வந்தது. பசுக்கூட்டத்துடன் திருமூலரும் புறப்பட்டார்.
பசுக்கள் எல்லாம் தங்கள் வீடுகளுக்குச் சென்றன. ஆனால் திருமூலர் மட்டும் வீட்டிற்கு போக விரும்பவில்லை. அவர் தனது ஞான சிருஷ்டியால் மூலனூக்கு திருமணமாகி விட்டதை உணர்ந்தார். வீட்டிற்கு செல்லாமல் தனியான ஒரு இடத்தில் அமர்ந்து சிந்தித்தார்.
மூலனின் மனைவி கணவன் வரவை எதிர்பார்த்து ஏமாந்தாள். கணவனை தேடிப் புறப்பட்டாள். ஓரிடத்தில் கணவன் இருப்பதைக் கண்டாள். வீட்டிற்கு வரும்படி அவரை அழைத்தாள். திருமூலர் மௌனம் சாதித்தார்.
கணவரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கணவரின் கரங்களைப் பிடிக்கச் சென்றாள். திருமூலர் அவளது செயலைக் கண்டு எட்டி நின்றார். அவளும் வருத்தத்துடன் “என்ன நடந்தது?, கூறுவீர்களாக” என்று கேட்டாள்.
திருமூலர் அவளிடம் “என்னால் உன் வீட்டிற்கு வர முடியாது எனக்கும் உனக்கும் எவ்வித உறவும் கிடையாது”. அரனை வணங்கி அமைதி பெறுவாயாக என்று கூறினார். கூறிவிட்டு திருமடம் ஒன்றுக்கு சென்று தியானத்தில் அமர்ந்தார்.
மனைவியும் கவலையுடன் வீடு சென்றாள். கணவனின் நிலையை கண்டு பதறினாள். தூங்க முடியவில்லை. அடுத்த நாள் காலை அயலவர்களை அழைத்துக் கொண்டு அவர் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.
தன் கணவருக்கு பித்து பிடித்து விட்டது என்று அவள் கூறி புலம்பினாள். அயலவர்களும் அவரைக் காணச் சென்றார்கள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் அந்த முகத்தில் தெய்வ சக்தி தாண்டவமாடுவதை உணர்ந்தார்கள்.
இவர் முற்றும் துறந்த முனிவர் ஆகிவிட்டார். இவர் இனி இல்லற வாழ்க்கைக்கு உதவ மாட்டார் என்ற உண்மையை ஊரவர்கள் மனைவிக்கு எடுத்துக் கூறினர். அவளும் அவர்களுடன் வீடு திரும்பினாள்.
சற்று நேரத்தில் யோகநிலை தெளிந்த திருமூலர் மறைவாக வைத்திருந்த தன் திருமேனியை தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. மீண்டும் யோக நிலையில் அமர்ந்து தனது திருமேனியின் உண்மைப் பொருளை உணரும் எண்ணம் கொண்டார். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.
அதே உடலுடன் நடமாடினார். திருவாவடுதுறை பெருமானைப் பணிந்தவாறு மேற்குப் பக்கமாக அமைந்துள்ள அரச மரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகத்தில் திளைத்தார். சிவ யோகத்தில் நிலைத்து இதயக் கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார்.
உலகோர் உய்யும் பொருட்டு நான்கு நெறிகளை வகுத்தும் தொகுத்தும் விரித்தும் கூறும் திருமந்திர மாலையினை ஓர் ஆண்டிற்கு ஒரு மந்திர பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்து மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய முறையை பாடினார்.
ஐப்பசி மாதம் அச்சுவினி நட்சத்திரத்தில் இறைவனடி சேர்ந்தார்.
திருமந்திரம்:
திருமூல நாயனார் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவர். இவர் எழுதிய திருமந்திரம் பன்னிரு சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாகும். இது சாத்திர நூலாகவும் தோத்திர நூலாகவும் விளங்குகின்றது. ஒன்பது தந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
திருமந்திரம் முன்னுரையாய் அமைந்த பாயிரத்தையும் தந்திரம் என்ற பிரிவில் ஒன்பது பிரிவுகளையும் கொண்டது. தந்திரம் என்பது ஆகமத்தை குறிக்கும் ஒரு சொல்லாகும். ஒன்பது ஆகமங்களின் சாராம்சங்கள் ஒன்பது தந்திரங்களிலும் அமைந்துள்ளன.
இந் நூலின் முதல் நான்கு தந்திரங்கள் சிவ ஞானத்தை பெற விரும்புவதற்கு உரிய வழிகளை கூறுகின்றன. ஐந்தாவது தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை விளக்குகிறது.
6 முதல் 9 வரையான தந்திரங்கள் ஞானம் பெறும் நிலையை உணர்ந்து நல்ல பயன்களை பற்றி விளக்குகின்றது. இந்நூல் தமிழ் மூவாயிரம், தமிழ் ஆகமம், திருமந்திர மாலை என்று பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இந்நூலில் உலகவாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கங்கள், ஆன்மாக்கள் இறைவனை அடைவதற்கு உதவும் மார்க்கங்கள், சிவசின்னங்களின் முக்கியத்துவம், குருலிங்க சங்கம வழிபாடு, முத்தி முதலான விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
நீதி தவறாது நடுநிலைமையோடு வாழும் வாழ்வையே சமய வாழ்வாக வலியுறுத்துகிறார் திருமூலர்.
திருமந்திரப் பாடல்கள் சில:-
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே…
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறுவிரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
தமிழ்வாணி (பிரான்ஸ்)