January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது சிம்பாப்வே

(Photo:PCB/Twitter)

சிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றது.

இது ஓராண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராகும்.

தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இமாம் உல் ஹக் 58 ஓட்டங்களையும், ஹாரிஸ் சொஹைல் 2 சிக்ஸர்களுடன் 71 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்வரிசையில் இமாம் வசிம் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் முஸர்பானி, சிஸோரோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 282 ஓட்டங்களை நோக்கி பதிலெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பிரென்டன் டெய்லர் சதமடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுவந்தார்.

117 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்களுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார். பிரென்டன் டெய்லர் மற்றும் வெஸ்லி மெடவெரே ஜோடி ஐந்தாம் விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

எனினும், அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. கிரெய்க் ஏர்வின் 41 ஓட்டங்களைப் பெற்றார். ஸிம்பாப்வே அணி 49.4 ஓவர்களில் 255 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியுடன் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் எனும் ஆட்டக் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலைப் பெற்றுள்ளது.