January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஞ்சாபின் வெற்றி பயணத்தை தடுக்குமா ராஜஸ்தான்?: இன்று பலப்பரீட்சை

(Photo: BCCI/ IPL)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தீர்மானமிக்க ஆட்டமொன்றில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

பிளே ஓப் சுற்றின் வாசலுக்கே வந்துள்ள பஞ்சாப் அணி இன்று வெற்றிபெற்றால் கிட்டத்தட்ட அந்த வாய்ப்பை நெருங்கிவிடலாம். எனவே, அதற்காக முழு முயற்சியுடன் பஞ்சாப் அணி விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பிடிக்க முடியும்.

2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தால் பெரும்பாலும் பிளே ஓப் சுற்றுக்காக வாய்ப்பு அற்றுப் போகலாம்.

ஒருவேளை பஞ்சாப் அணி ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றால் 14 புள்ளிகளுடன் மற்றைய அணிகளின் தரநிலைக்கு அமைவாக பிளே ஓப் சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

கெய்லின் வருகைக்கு பின் எழுச்சிகொண்ட பஞ்சாப்:
தொடரின் ஆரம்பத்தில் துரதிர்ஷ்டவசமாக தோல்விகளைத் தழுவிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி கிறிஸ் கெய்லின் வருகைக்கு பின்னர் வீறுகொண்டெழுந்து அடுத்தடுத்து ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளது.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை அணித்தலைவர் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், கிளென் மெக்ஸ்வெல், ஜேம்ஸ் நீசாம், மயன்க் அகர்வால், மன்தீப் சிங் ஆகிய நட்சத்திர துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ளது.

இவர்களில் கிளென் மெக்ஸ்வெல் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத போதிலும் அவ்வப்போது சிறப்பாக பந்துவீசி அணிக்கு கைகொடுக்கின்றார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை மொசுமட் சமி, இளம் வீரரான பிஸ்னாய் ஆகியோர் தங்களின் பொறுப்பை சரிவர நிறைவேற்றுகின்றனர்.

இதனால் பஞ்சாப் அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்த வண்ணமுள்ளது. அதற்கு முடிவுகட்டும் எதிர்பார்ப்பில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இன்று களமிறங்குகின்றது.

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான்:

(Photo: BCCI/ IPL)

தொடரில் முதலிரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அதன் பிறகு தோல்விகளைத் தழுவி தற்போது 12 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று ஏழாமிடத்திலுள்ளது.

இதனால் அவர்கள் எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதுவுடன் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கான பிளே ஓப் சுற்று வாய்ப்பும் தீர்மானிக்கப்படும்.

ஏனெனில், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், டெல்லி கெபிடெல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே 14 புள்ளிகளைப் பெற்று பிளே ஓப் சுற்றின் வாயிலில் காத்துக்கொண்டிருக்கின்றன.

எனவே, ராஜஸ்தான் அணி இரண்டு ஆட்டங்களிலும் அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றாக வேண்டும்.

ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சம்ஸன், ஜோஸ் பட்லர் ஆகியோரின் கரங்களிலேயே வெற்றி தங்கியுள்ளது. இவர்கள் அபாரமாக செயற்பட்டால் ராஜஸ்தான் அணியால் வெற்றியின் மீது எதிர்பார்ப்பு வைக்க முடியும்.

இறுதியாக மும்பையுடனான ஆட்டத்தில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் இன்று களமிறங்குவதால் ராஜஸ்தான் அணி வீரர்களின் நம்பிக்கையுடன் விளையாடலாம்.