October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய லீக் கால்பந்து: ஆர்சனல் அபார வெற்றி

ஐரோப்பிய லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் டன்டல்க் கழக அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சனல் 3-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை சவாலாக ஆரம்பித்த ஆர்சனல் அணி முதல் பாதியின் இறுதியில் 2 கோல்களைப் போட்டு ஆதிக்கம் செலுத்தியது.

நிகிட்டா 42 ஆவது நிமிடத்திலும், வில்லொக் 44 ஆவது நிமிடத்திலும் அந்த கோல்களைப் போட்டனர்.

எதிராளியான டன்டல்க் கழக அணியால் கோல் எல்லையை நெருங்கவே முடியவில்லை. இதன்படி முதல் பாதியில் 2-0 என ஆர்சனல் அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் ஆர்சனல் அணி வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கிக் காணப்பட்டது.

ஆட்டம் ஆரம்பமான மறு நிமிடமே அதாவது 46 ஆவது நிமிடத்தில் நிகோலாஸ் பெபே கோலடித்தார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளினதும் கோல் போடும் முயற்சிகள் பலிக்கவில்லை. இறுதிவரை ஆட்டத்தை தன்வசம் வைத்திருந்த ஆர்சனல் அணி 3-0 என வெற்றியீட்டியது.

ஆர்சனல் அணி தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் “பி” குழுவில் முதலிடம் வகிக்கிறது.