January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் ஆறுதல் வெற்றியைப் பெற்ற அதேவேளை, பிளே ஓவ் சுற்றுக்கு முன்னேறும் கொல்கத்தாவின் எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பாக சுப்மன் கில் மற்றும் நித்திஷ் ராணா ஜோடி முதல் விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

சுப்மன் கில் 26 ஓட்டங்களுடன் வெளியேறினார். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய நித்திஷ் ராணா 4 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 87 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்களும் ஓரளவுக்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

173 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஷேன் வொட்ஸன் – ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி சிறந்த ஆரம்பத்தை இட்டது. இவர்கள் 50 ஓட்டங்களைப் பகிர்ந்த போது ஷேன் வொட்ஸன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அம்பாட்டி ராயுடு 38 ஓட்டங்களுடன் வெளியேற அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியால் ஒரு ஓட்டத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ருத்துராஜ் கெய்க்வாட் 2 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

சென்னை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், வெற்றிபெற 12 பந்துகளில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19 ஆவது ஓவரில் ஜடேஜாவின் துடுப்பில் ஒரு சிக்ஸரும், 2 பௌண்டரிகளும் விளாசப்பட 20 ஓட்டங்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவையான நிலையில் ஜடேஜா இரண்டு சிக்ஸர்களை விளாசி வெற்றியை உறுதிசெய்தார்.

11 பந்துகளை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்களுடன் 31 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதிசெய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து கடைசி பந்தில் வெற்றியை சுவீகரித்தது.