January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெங்களூரை தோற்கடித்து பிளே ஒப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது மும்பை

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை வெற்றிகொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பிளே  ஒப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான இந்த ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. ஆட்டத்தில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கிணங்க களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜோஸப் பிலிபே மற்றும் தெவ்தத் படிக்கால் ஜோடி 7.5 ஓவர்களில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது. ஜோஸப் பிலிபே 33 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் விராத் கோஹ்லி, ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும், தனி ஒருவராகப் பிரகாசித்த தெவ்தத் படிக்கால் 74 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

பின்வரிசை வீரர்களும் தங்களால் முடிந்தளவு பங்களிப்பு வழங்க, பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும், தீபக் சகார், கிரான் பொலார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கான 165 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 10.4 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சற்று நெருக்கடிக்குள்ளானது. குவின்டன் டி கொக் 18 ஓட்டங்களுடனும், இஷான் கிஷான் 25 ஓட்டங்களுடனும், சௌரவ் திவாரி 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

எவ்வாறாயினும், சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினார். 43 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 79 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மும்பை அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

இது மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் பெற்ற 8 ஆவது வெற்றியாகும். இதன் மூலம் 16 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக பிளே ஒப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

பெங்களூர் அணி 14 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருப்பதுடன், அவர்களுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதனால் அவர்கள் ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றாலும் பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.