July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய தாக்குதலுக்கு வைகோ கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமைக்கு மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ;

“மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை படகுகளில் இருந்து கற்களை வீசித் தாக்குதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மீனவர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், பலர் இரத்தக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்கள் விரித்திருந்த நூற்றுக்கணக்கான மீன் வலைகளையும் இலங்கைக் கடற்படையினர் அறுத்து எறிந்து உள்ளனர்.

இன்று நேற்று அல்ல கடந்த 40 ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள்.கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று இருக்கின்றது.

ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்து பல மாதங்கள் சிறையில் அடைத்து துன்புறுத்தியுள்ளனர். படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால் உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த்தாக்குதல் தொடுத்து விடும். ஆனால் தமிழக மீனவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகும் கூட இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூட செய்தது இல்லை என்பது வேதனைக்குரியது.இழப்பீடு எதுவும் பெற்றுத் தந்ததும் இல்லை

இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்  கச்சதீவை இலங்கையிடம் ஒப்படைத்ததுதான்.அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகின்ற குரலை இந்திய அரசு கண்டு கொள்வது இல்லை.தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கு, கச்சதீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.