October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லியை வீழ்த்தியது சன் ரைசஸ்

Photo:BCCI/IPL

ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பலம் வாய்ந்த டெல்லி கெபிடெல்ஸ் அணியை 88 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் ஹைதராபாத் அணி பிளே ஓவ் சுற்றுக்கு முன்னேறும் எதிர்பார்ப்பு வலுவடைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெபிடெல்ஸ் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தடுப்பை தெரிவு செய்தார். என்றாலும், அவரது இந்தத் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் ஹைதராபாத் அணி அபாரமாகத் துடுப்பெடுத்தாடியது.

வாய்ப்புக்காக காத்திருந்த விருத்மன் ஷா மற்றும் அணித்தலைவர் டேவிட் வோனர் ஜோடி 9.4 ஓவர்களில் 97 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்து ஹைதராபாத் அணிக்கு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது. 25 பந்துகளில் அரைச்சதமடித்த டேவிட் வோனர் 2 சிக்ஸர்களுடன் 66 ஓட்டங்களைப் பெற்றார்.

கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொண்ட விருத்மன் ஷா 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 87 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆட்டமிழக்கும் போது ஹைதராபாத் அணி 14.3 ஓவர்களில் 170 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அடுத்து வந்த மனிஷ் பாண்ட்டேயும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களைப் பெற்றார். விருத்மன் ஷா – கேன் வில்லியம்ஸன் ஜோடி 49 ஓட்டங்களைப் பகிர சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களைக் குவித்தது.

இமாலய இலக்கான 220 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துக்குள்ளானது. ஷிகர் தவான் முதல் ஓவரிலேயே ஓட்டமின்றி ஆட்டமிழக்க, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்துவந்த வீரர்களும் ஓட்டங்களைப் பெற முடியாமல் திண்டாடினர். ஷிம்ரோன் ஹெட்மயர், அஜின்கெயா ரஹானே, அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டெல்லி கெபிடெல்ஸ் அணி 11.3 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ரிஷப் பாண்ட் 36 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் கொடுக்க டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ரஷிட் கான் 3 விக்கெட்டுகளையும், நடராஜன், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இது வெற்றி சன்ரைசஸ் அணி பெற்ற ஐந்தாவது வெற்றியாகும். அதன்படி அவர்கள் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று ஆறாமிடத்துக்கு முன்னேறினார்கள். இந்தப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ், பெங்களுர், டெல்லி ஆகிய மூன்று அணிகளும் தலா 14 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.