Photo:BCCI/IPL
ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. ஆரம்பத்தில் வெற்றிபெற்ற அணிகள் தோல்வியடைய தோல்வியுற்ற அணிகள் வெற்றிபெற ஆரம்பித்துள்ளன.
இது பிளே ஓப் சுற்றுக்கு எந்த அணிகள் தெரிவாகும் எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. லீக் சுற்றில் 46 ஆட்டங்கள் முடிவடைந்தும் பிளே ஓப் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஓர் அணி கூட இன்னும் உறுதியாகத் தெரியாமல் உள்ளது.
இவ்வாறான நிலையில் டேவிட் வோனர் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடெல்ஸ் அணிகள் இன்று தமது 12 ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளன.
டெல்லி கெபிடெல்ஸ் அணி ஏழு வெற்றிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், ஹைதராபாத் அணி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை அடைந்து நான்காமிடத்திலும் உள்ளன.
எவ்வாறாயினும், இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் அது பிளே ஓப் சுற்று மீது நம்பிக்கை வைக்க முடியும். டெல்லி அணி வெற்றி பெற்றால் முதல் அணியாக பிளே ஓப் சுற்றை உறுதிசெய்யலாம்.
நெருக்கடியான நிலையில் டெல்லி:
டெல்லி அணியைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றாலும் கடைசியாக பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்து சற்று நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அணியில் ஷிகர் தவான், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்திவ் ஷா, அஜின் கெயா ரஹானே, ரிஷப் பாண்ட், ஷிம்ரோன் ஹெட்மயர் என இளம் நட்சத்திர துடுப்பாட்டக் கூட்டணி இருக்கின்றது.
வேகப்பந்து வீச்சாளரான கெகிஷோ ரபாடா, அனுபவமிக்க சுழல்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் பந்துவீச்சைப் பலப்படுத்தவுள்ளனர்.
இவர்கள் சிறப்பாக செயற்படும் பட்சத்தில் டெல்லி அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.
நம்பிக்கையளிக்கும் வோனரின் துடுப்பாட்டம்:
மறுபக்கம் அணித்தலைவர் டேவிட் வோனரின் துடுப்பாட்டத்தை மலை போல் நம்பிக் களமிறங்கும் ஹைதராபாத் அணி இந்த ஆட்டத்திலும் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மாத்திரமே பிளே ஓப் சுற்று மீது எதிர்பார்ப்பு வைக்க முடியும்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணி உள்ளது. ஜொனி பெயார்ஸ்டோ, மனிஷ் பாண்ட்டே ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தால் ஹைதராபாத் அணியால் வெற்றிபெற முயற்சிக்கலாம்.
ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சில் நம்பிக்கையளிக்கிறார். சுழல் பந்து வீச்சாளரான ரஷித் கானும் இருப்பதால் இன்று இரண்டு அணிகளினதும் சவாலான ஆட்டத்தை காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.