November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஒப் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கியது பஞ்சாப்

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி இரண்டாவது பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. நித்திஷ் ராணா ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ராகுல் திரிபாத்தி 7 ஓட்டங்களுடனும், முன்னாள் அணித்தலைவர் டினேஷ் கார்த்திக் ஓட்டமின்றியும் வெளியேற, கொல்கத்தா அணி 2 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எனினும், சுப்மன் கில் 4 சிக்ஸர்களுடன் 57 ஓட்டங்களையும், அணித்தலைவர் இயோர்ன் மோர்கன் 2 சிக்ஸர்கள் 5 பௌண்டரிகளுடன் 40 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தினர்.

பேர்கஸன் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் மொஹமட் சமி 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டான், ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

150 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி சார்பாக முதல் விக்கெட்டுக்காக 47 ஓட்டங்கள் பகிரப்பட்டது. அணித்தலைவர் லோகேஸ் ராகுல் 28 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனாலும், மந்தீப் சிங்கும் கிறிஸ் கெய்லும் சிறப்பாக ஆடி வெற்றி இலக்கை இலகுவாக்கினர். இந்த ஜோடி 60 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மந்தீப் சிங் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் வானவேடிக்கை காண்பித்த கிறிஸ் கெய்ல் 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பௌண்டரிகளுடன் 51 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு 3 ஓட்டங்களே தேவையாக இருந்த போது கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் அவருடைய ஆட்டமிழப்பு பஞ்சாப் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இந்த வெற்றி மூலம் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியின் பிளே ஒப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

12 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியிருப்பதுடன், இந்த இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் பிளே ஒப் சுற்று
உறுதியாகிவிடும்.