முதல் பாதியில் ஒரு கதை, இரண்டாவது பாதியில் வேறு ஒரு கதை என இரண்டு கதைகளை கொண்ட படமாக, புதியமுறையில் வந்திருக்கும் இந்தப் படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படம்.
புதுமுக இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் என்னங்க சார் உங்க சட்டம்.
இந்த படத்திற்கு குணா பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளதுடன், கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர்களுடன் ரோகிணி, சௌந்தர்யா பாலா, நந்தகுமார், மீராமிதுன், பகவதி பெருமாள் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், சில பிரிவு மக்களிடமும், விமர்சகர்களிடமும் பெரிய எதிர்ப்பையும் ஒருங்கே சம்பாதித்து இருக்கிறது இந்தத் திரைப்படம்.
முதல் பகுதியில் வரும் அதே கலைஞர்களை வைத்து, இரண்டாம் பகுதியில் வித்தியாசமான கதையோட்டத்தில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இதில் முதல் பாதியில் வரும் கதை சாதியே வேண்டாமென, பருவ வயதில் இருக்கும் கார்த்திக் என்ற பையனின் வாழ்க்கையில் நடக்கும் காதல், முடிவில் நடக்கும் திருமணம் அவனுடைய வேலை என போகிறது. இதில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இருக்கிறது.
இரண்டாவது பாதி கதை மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்தக் கதையைப் பார்ப்பதற்கு முன்னர் இந்தியாவில் இருக்கும் மதம் மற்றும் அதற்குள் இருக்கும் சாதிய பிரிவினைகளையும் இட ஒதுக்கீட்டு முறையும் சற்றே தெரிந்து கொண்டால் மட்டுமே இந்த கதையை புரிந்து கொள்ள இயலும்.
இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பான்மையான மதமாக இந்து மதம் இருக்கிறது. அதேநேரம் கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் என நிறைய மதங்களும், இந்த மதங்களுக்குள்ளாக நிறைய சாதிகளும், உட்பிரிவுகளும் இருக்கிறது.
இப்படி நிறைய மதங்களும் நிறைய ஜாதிகளும் இருக்கின்ற இந்தியாவில் சுமார் 28 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் அதற்குள்ளாக சற்று ஏறக்குறைய 150 கோடி மக்களும் இருக்கிறார்கள்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் தவிர மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன.
இப்படியான நிலையில் இங்கு இரண்டு விதமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன ஒன்று அரசு வேலைவாய்ப்பு மற்றொன்று தனியார் வேலைவாய்ப்பு.
இதில் அரசு வேலைவாய்ப்பு என்பதும் இரண்டு விதமாக இருக்கிறது ஒன்று மத்திய அரசு பணிக்கான வேலைவாய்ப்பு
மற்றொன்று மாநில அரசுகளுக்கான வேலைவாய்ப்பு. இரண்டிலுமே இட ஒதுக்கீடு முறை என்று ஒன்று இருக்கிறது. அது ஜாதி அடிப்படையில் இருக்கிறது. எந்த மதமாக இருந்தாலும், 1.முன்னேறிய வகுப்பு -(FC), 2.பிற்படுத்தப்பட்ட வகுப்பு- (BC), 3.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு- (MBC), 4.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு -(Sc & St) என நான்கு பிரிவுகளாக எல்லா மதங்களிலும் உள்ள ஜாதிகளை பிரித்து வைத்திருக்கிறார்கள்.
மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தங்கள் அலுவலக மற்றும் பணியிடங்களில் காலியாகும் இடங்களுக்கு தேர்வு செய்யும்போது, ஒவ்வொரு ஜாதியினருக்கும் என இட ஒதுக்கீட்டை வைத்திருக்கிறார்கள்
அதேநேரம் வழக்கறிஞர்,மருத்துவர், கணக்காளர்,நீதிபதிகள் வேலையைப் போன்றது தான் கோவிலில் பூஜை செய்யும் குருக்கள் வேலையும், ஆகவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த புரட்சிகர சட்டத்தின் மூலம் இந்து மதத்திற்குள் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆகம விதிகளை படித்துத் தேர்ந்தால்,அவர்களும் கடவுளுக்கு அருகில் நின்று பூஜை செய்யும் வேலையை பெறலாம் என்பதே.
இந்த சட்டத்தை இந்து மதத்திற்குள் முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தாலும், கடவுளுக்கும் மக்களை நிர்வாகிக்கும் அரசுக்கும், அனைத்து ஜாதியினரும் ஒன்றே என்ற அரசின் உத்தரவால் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் இரண்டாம் பாகத்தை பற்றி நாம் பார்க்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கோவிலின் அர்ச்சகர் வேலைக்கு, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனும், மாநில அரசின் வேலைக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நரேனும் முயற்சி செய்வதாக பிற்பாதியில் இருக்கிறது.
இதில் இயக்குநர் சமரசம் செய்து கொள்ளாமல் இரண்டு பக்கத்திலும் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்
அதேபோல பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் உயர்ந்த ஜாதியைச் சார்ந்த (FC) பிராமணர்களுக்கு உள்ளாகவே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சவுண்டி எனும் ஒரு பிரிவு பிராமணர்களை சார்ந்த, ஒரு கதாபாத்திரம்,என் ஜாதிக்குள் ஆகவே நான் ஒதுக்கப்படுகிறேன், அதேநேரம் பொருளாதாரத்திலும் பின்தங்கிய இருக்கிறேன்,
ஆனாலும் அரசு தேர்வுக்கு அதிக மதிப்பெண்ணை பெற வேண்டிய (FC) கோட்டவிற்கான கட்டாயத்தில் நான் மட்டும் ஏன் இருக்கிறேன் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
எது எப்படி இருப்பினும், தற்போது இந்தியாவில் மதங்களுக்கு உள்ளாக இருக்கும்,ஜாதிகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரசு வேலையில் இட ஒதுக்கீட்டினால் நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களை மிகச்சிறப்பாக இந்த படம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. என்னங்க சார் உங்க சட்டம் என்றால் மிகையில்லை.
பிரபு ஜெயராமனை போன்ற கலைஞர்கள் என்னதான் சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்தாலும், மக்கள் தங்கள் மனங்களில் இருக்கும் மனிதநேயத்தை உணர்ந்தால் தான், கலைஞர்களின் கனவுகள் நடைமுறையில் சாத்தியப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள சிக்கல்களை படம் பிடித்துக் காட்டியிருக்கும் இந்த என்னங்க சார் உங்க சட்டம் பொது மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.