January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னைக்கு கடைசி வாய்ப்பு: பெங்களூருடன் இன்று மோதல்

(Photo:BCCI/IPL)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட பிளேஓப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டதாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதற்காக முயற்சிப்பதற்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பம் பெங்களூருடனான இன்றைய ஆட்டமாகும்.

10 ஐ.பி.எல் தொடர்களிலும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்ற சென்னை அணி 8 தடவைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன் மூன்று தடவைகள் சாம்பியனாகியுள்ளது.

என்றாலும், இந்தமுறை சென்னை அணியின் நிலைமை பெரும் கவலைக்கிடமாகியுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக முதல் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டது.

ஆனாலும், அவர்கள் முயற்சித்தால் பிளேஓப் சுற்றில் நுழைவதற்கான அரிய வாய்ப்பும் இருக்கவே செய்கின்றது. இதுவரை 11 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மாத்திரம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் இருக்கிறது.

தடுமாறும் சென்னை வீரர்கள்

சென்னை அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளதுடன் அவற்றில் குறைந்தபட்சம் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.

பதிலளித்தாடும் பட்சத்தில் குறைந்த விக்கெட் வீழ்ச்சியுடன் பல ஓவர்கள் வித்தியாசத்தில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றிபெற்றாக வேண்டும். அப்போது அவர்களின் ஓட்ட வேகம் அதிகரிக்கும்.

அதேவேளை, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் எஞ்சியுள்ள ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் சென்னை அணியால் 12 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தை அடைந்து பிளேஓப் சுற்று மீது எதிர்பார்ப்பு வைக்க முடியும்.

(Photo:BCCI/IPL)

ஆனால், இதுவெல்லாம் சாத்தியமா என்பது கேள்விக்குறியானதே. ஏனெனில், சென்னை அணியின் விளையாட்டுத்திறன் அந்தளவுக்கு மங்கிப்போயுள்ளது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அத்தனையிலும் சென்னை அணி வீரர்கள் தடுமாறுகின்றனர்.

கிட்டத்தட்ட ஓட்டை விழுந்த கப்பல் போல சென்னை அணி இந்தமுறை திணறிக்கொண்டிருக்கிறது.

ஆரம்ப ஆட்டங்களில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய பெப் டு பிலெசியும் கடைசியாக நடைபெற்ற ஆட்டங்களில் பிரகாசிக்கத் தவறினார்.

அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி, ஷேன் வொட்ஸன், அம்பாட்டி ராயுடு, கேதர் ஜாதவ், ரவிந்ர ஜடேஜா ஆகியோரும் ஏமாற்றுகின்றனர்.

மொஹமட் ஸிராஜின் திடீர் எழுச்சி

இவ்வாறான நிலையில் பலம் வாய்ந்த விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி எதிர்கொள்கின்றது.

சென்னை அணி இருக்கும் இக்கட்டில் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவது என்பது குதிரைக் கொம்பாகவே தென்படுகின்றது.

ஆனாலும், புதுமுக வீரர்களான ருதுராஜ், ஜெகதீஸன் ஆகியோரும் ஏனைய நட்சத்திர வீரர்களும் சகலதுறைகளிலும் அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தி கைகொடுத்தால் சென்னை அணியால் நம்பிக்கையுடன் பெங்களூரை எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

(Photo:BCCI/IPL)

பெங்களூர் அணியைப் பொறுத்தவரை அணித்தலைவர் விராத் கோஹ்லி, ஏபி டிவிலியர்ஸ், தெவ்தத் படிக்கல், ஏரோன் பிஞ்ச் என அதிரடிக்கு பஞ்சமில்லாத துடுப்பாட்ட வரிசையை தன்னகத்தே கொண்டுள்ளது.

பந்துவீச்சில் மொஹமட் ஸிராஜின் திடீர் எழுச்சி எதிரணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது.

இத்தனை சவால்களையும் கடந்து தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய தினம் களமிறங்கவுள்ளது.

பெங்களூர் அணி 10 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் பிளேவ் ஓவ் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

இன்று வெற்றிபெற்றால் அவர்களால் அந்த இலக்கை அடைய முடியும் என்பதுடன் சென்னை முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேற்றப்படும்.

ஐ.பி.எல்லின் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் 26 ஆட்டங்களில் மோதியுள்ளதுடன் சென்னை 16 வெற்றிகளையும், பெங்களூர் 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இவ்வருடத் தொடரில் சென்னையுடனான ஆட்டத்தில் பெங்களூர் 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.