‘மெட்டி ஒலி’ தொடர் நாடகத்தில் ‘விஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி காலமானார்.
உடல் நலக்குறைவினால் தனது 40 ஆவது வயதில் உமா மகேஸ்வரி, இன்று காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் வெளியாகி இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களை கவர்ந்த தொடராக ‘மெட்டி ஒலி’ இருந்தது.
அந்தத் தொடரின் வெற்றிக்கு பிறகு ‘உன்னை நினைத்து’, வெற்றிக்கொடி கட்டு, அல்லிஅர்ஜுனா போன்ற படங்களில் உமா மகேஸ்வரி நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாது ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர் நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார்.
‘மெட்டி ஒலி’ நாடகத்தில் சிதம்பரத்தின் 4 ஆவது மகளாகவும், திருமுருகனுக்கு ஜோடியாகவும் ‘விஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்தத் தொடரில் உமா மகேஸ்வரியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட உமா மகேஸ்வரி அதற்குப் பிறகு சீரியல்களில் நடிக்கவில்லை.
சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த உமா மகேஸ்வரி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
உமா மகேஸ்வரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இவரின் மறைவு இரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உமா மகேஸ்வரியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.