October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

(photo:BCCI/IPL)

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்று டெல்லி அணியின் பிளே ஓவ் வாய்ப்பை திசை திருப்பியது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடெல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 7.2 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனாலும், அடுத்ததாக இணைந்த நித்திஷ் ராணா மற்றும் சுனில் நரைன் ஜோடி டெல்லி வீரர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. இவர்கள் 56 பந்துகளில் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து கொல்கத்தா அணியின் ஓட்ட எண்ணிக்கையை உச்சத்துக்கு கொண்டு சென்றார்கள்.

நித்திஷ் ராணா ஒரு சிக்ஸர், 13 பௌண்டரிகளுடன் 81 ஓட்டங்களையும், விஸ்வரூபமெடுத்த சுனில் நரைன் 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 64 ஓட்டங்களையும் விளாசினர்.

அணித்தலைவர் இயோர்ன் மோர்கன் 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களைக் குவித்தது.

அன்ரி நொர்ட்ஜி, கெகிசோ ரபாடா, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெற்றி இலக்கான 195 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணிக்கு ஆரம்பமே அச்சுறுத்தலாக இருந்தது. அஜின்கெயா ரஹானே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து இரண்டு சதங்களைக் கடந்த ஷிகர் தவானால் இன்று 6 ஓட்டங்களுக்கு மேல் பெற முடியவில்லை. அணித்தலைவர் ஸ்ரேயாஷ் ஐயர் 47 ஓட்டங்களையும், ரிஷப் பாண்ட் 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று ஆறுதல் அளித்தனர்.

ஏனைய சகல வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க பந்துவீச்சிலும் கொல்கத்தா அணியின் ஆதிக்கம் மேலோங்கியது. இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட வெற்றி கொல்கத்தா வசமானது.

பந்துவீச்சில் சிவி வருண் 5 விக்கெட்டுகளையும், பெட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இது இத்தொடரில் கொல்கத்தா அணி பெற்ற ஆறாவது வெற்றியாகும். அவர்கள் 11 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தில் இருக்கிறார்கள். டெல்லி கெபிடெல்ஸ் 11 ஆட்டங்களில் ஏழு வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்திலுள்ளது.