ஆப்கான் தலைநகர் காபுலில் கல்வி நிலையமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் 20க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.
மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கும் தனியார் நிலையமொன்றிற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை குண்டுதாரியொருவர் கல்வி நிலையத்திற்குள் நுழைய முயன்றார் எனவும் அவர் தற்கொலை குண்டுதாரி என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்ததும் அவர் தன்னை வெடிக்கவைத்தார் எனவும் ஆப்கானின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி நிலையத்திற்குள் நுழைவதற்காக காத்திருந்த மாணவர்கள் இந்த தாக்குதலில் சிக்குண்டனர் என தெரிவித்துள்ள சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், நான் 100 மீற்றர் தூரத்தில் நின்றேன். பாரிய அதிர்வினால் தூக்கி எறியப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.