பீச்சாங்கை என்ற வித்தியாசமான படத்தின் மூலம் நாயகனாக அறியப்பட்ட கார்த்திக் நடிப்பில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தப்படத்தின் படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியானது.
வெளியாகிய குறுகிய காலத்திற்குள் 11 இலட்சம் பார்வையாளர்களை கடந்து இன்னும் அதிக பார்வையாளர்களை கவர்ந்து கொண்டுவருகிறது.
ஃபேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை இறக்கி இருக்கிறார் இயக்குநர்.
அதற்கமைய கதாநாயகன் கார்த்திக்குடன் அயிரா, சௌந்தர்யா பாலா, தான்யா, சுபா மற்றும் மீராமிதுன், ரோகினி, ஜூனியர் பாலையா, பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர்.
மௌனகுரு படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த நாடகக் கலைஞர் விஜயன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒவ்வொரு ஜாதிக்கு என்று தனித்தனியாக படம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஜாதியில்லை மதமும் இல்லை என்ற இந்தப்படத்தின் விளம்பரமே வித்தியாசமானதாக இருக்கிறது.
இந்த படத்தை பற்றி இயக்குநர் பிரபு ஜெயராமன் கூறுகையில், இது இரண்டு கதைகளை கொண்ட ஒரு படம். முதல் பாதி ஒரு கதையாகவும் இரண்டாம் பாதி மற்றுமொரு கதையாகவும் இருக்கும்.
ஒரு கதை கலர்ஃபுல் ஆகவும் மற்றும் ஒரு கதை கல்வியில் நிகழும் ஜாதிய பாகுபாட்டின் ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகர சட்டம் குறித்து நடைமுறைச் சவால்களையும் அலசுவது ஆகவும் இருக்கும்.
மேலும் ஏதோ ஒரு ஜாதியை மட்டும் ஆதரிப்பதாக இல்லாமல் அனைத்து பக்கத்தில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களை இந்த படம் பேசும் என்றார்.
இந்த படம் உருவான விதம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராமன் சாப்ட்வேர் இன்ஜினியராக சிங்கப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், திரைப்படத்தின் மீதுள்ள ஈர்ப்பால் வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்து, ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற ஒரு குறும்படத்தை தயாரித்து இயக்குகிறார்.
இந்தப் குறும் படத்தை நடிகர் சூர்யா மற்றும் க்யூப் டிஜிட்டல் கம்பெனி (திரையரங்குகளில் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம்) இணைந்து,சிறந்த குறும்படமாக இதை தேர்வு செய்து, 140க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட்டது.
இதில் கிடைத்த ஊக்கத்தை வைத்துக்கொண்டு, தன்னுடைய சொந்தப் பணம் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இவர் தயாரிக்க ஆரம்பித்ததே என்னங்க சார் உங்க சட்டம் என்ற இந்த திரைப்படம்.
இதன் பின் இந்த படத்தின்பால் ஈர்க்கப்பட்ட பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபேஷன் ஸ்டுடியோ இந்தப் படத்தை கையகப்படுத்தியது.
சீரக பிரியாணி என்ற பாடலின் மூலம் இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்த பாடலை பிரபல பாடகர் பெனி தயால் பாடியிருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் மிக அருமையாக கையாண்டிருக்கிறார்.
கலை இயக்குனராக டிஜேவும், எடிட்டராக பிரகாஸும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்பதை ட்ரெய்லரை பார்ப்பதன் மூலம் காணமுடிகிறது.