
நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுவருகிறது.
அதற்கமைய ‘வன்முறை இன்னொரு வன்முறையை மட்டுமே கொடுக்கும்’, ‘நல்ல பெயர் வாங்கனும்னு நினைக்கிறது கூட இலஞ்சம் தான் மச்சான்’ போன்ற வாழ்க்கை தத்துவங்களை உணர்த்தும் பஞ்ச் வரிகளுடன் வெளியாகியிருக்கிறது ‘உடன்பிறப்பே’ படத்தின் டிரெய்லர்.
சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் ஜோதிகாவின் 50ஆவது படமாகும்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சில்லுக்கருப்பட்டி புகழ் நிவேதிதா, நடிகர்கள் சூரி, கலையரசன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அதேபோல் டிரெய்லரில் வரும் நகைச்சுவை நடிகர் சூரியின் கதாபாத்திரம் ரசிகர்களை மகிழ்விக்கும் என நம்பலாம்.
கோபம், வெறுப்பு, மகிழ்ச்சி என எல்லாம் கலந்த கலவையாக இந்த உடன்பிறப்பே திரைப்படம் இருக்குமென ட்ரெய்லரை பார்க்கும் போது நமக்கு புரிகிறது.
படத்தின் ட்ரெய்லரை படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா – ஜோதிகா தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
2டி எண்டர்டெய்ன்மெண்ட் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில், ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குநர் சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் தான் உடன்பிறப்பே.
இதில் சசிகுமாரும் ஜோதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளதுடன் ஜோதிகா திருமணத்தின் பின்னர் நடித்த படங்களில் சற்று வித்தியாசமான படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
வன்முறைச் சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளையும், அதனால் பாதிக்கப்படுவோரின் உணர்வுகளையும் அதற்கான தீர்வு என்ன என்பதையும் எடுத்து இயம்புகிறது உடன்பிறப்பே ட்ரெய்லர்.
மேலும் இந்தப்படம் அண்ணன், தங்கை கொண்டிருக்கின்ற பாசப் பிணைப்பையும், ஒரு கிராம பின்னணியில் அங்கு நடைபெறும் பல்வேறு சம்பவங்களும், ஒரு கிராமத்துக்கே உண்டான மண் வாசனையையும் பிரதிபலித்திருக்கிறது.
இதேவேளை உடன்பிறப்பே படம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, ஒரே நேரத்தில் சிரிக்கவும், அழவும், மகிழவும் வைப்பார்கள் இவர்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.
படத்தின் டிரெய்லர் வெளியாகிய சில மணி நேரங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
ஆயுத பூஜையை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது.