April 29, 2025 17:00:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரங்கள் நல்கும் கேதார கௌரி விரதம்

சைவ சமயத்தில் விரதங்கள் நிறைய இருக்கின்றன.அவற்றில் கேதார கௌரி விரதம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

அம்பிகையே சிவனை நினைத்து அனுஷ்டித்த விரதமாகையால் இது சிவ விரதங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இவ்விரதம் புரட்டாதி மாதச் சுக்கில பட்சத்துத் தசமி முதல் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத்து தீபாவளி திருநாளான அமாவாசை வரை உள்ள 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படுவதாகும்.

இம்முறை ஐப்பசி 9 தசமி திதியில் (அக்டோபர் 25ஆம் திகதி) ஆரம்பமாகி ஐப்பசி 29 தீபாவளி அன்று (நவம்பர் 14 ஆம் திகதி) கேதார கௌரி காப்பு கட்டுதலுடன் விரதம் நிறைவெய்துகிறது. அடுத்த நாள் 15ஆம் திகதி அதிகாலை விரதத்துக்குரிய பாரணை நடைபெறும்.

இவ்விரதம் கடைபிடிப்பவர்கள் உடல் மற்றும் மனத் தூய்மையுடனும்,பக்தியுடனும் கடைப்பிடிக்க வேண்டும்.பெண்கள்,ஆண்கள் இருபாலாரும் இவ்விரதத்தை கடைப்பிடிக்கின்றார்கள்.

கன்னிப் பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்றும் சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் குடும்பம் நல்ல சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் என்றும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றார்கள்.

திருமணமாகாத ஆண்கள் தங்களுக்கு நல்ல மனைவி அமையவும் திருமணமான ஆண்கள் தங்கள் மனைவி, பிள்ளைகள் நலமுடன் வாழ வேண்டுமென்றும் இதை கடைப் பிடிக்கின்றார்கள்.

21 நாட்களும் லிங்கத்திற்கு அர்ச்சனை செய்து இருபத்தோர் இழையினால் ஒரு கயிறாக முறுக்கி எடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சு முடிந்து இருபத்தொரு நாள் இருபத்தொரு முடிச்சு முடிந்து இவ்விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

இருபத்தோராம் நாள் ஆடவர்கள் வலது கரத்திலும் பெண்கள் இடது கரத்திலும் காப்பு கட்டுதல் வேண்டும்.

20 நாட்கள் சிவனுக்குப் பூஜை செய்து பகல் ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும்.21ஆம் நாள் உபவாசம் இருந்து அடுத்த நாள் காலை பாரணை செய்தல் வேண்டும்.

விரதம் உருவாகிய கதை

இந்த கேதார கௌரி விரதத்துக்கு சிறப்புமிக்க பக்தி வரலாறு ஒன்று உண்டு.

ஒரு நாள் சிவனும் பார்வதியும் கைலாயத்தில் வீற்றிருந்தனர்.அப்பொழுது பிருங்கி முனிவர் சிவனை தரிசிக்க வந்தார்.சிவனுக்கு அருகில் உமாதேவியார் இருப்பதைக் கண்டார்.

சிவனை மட்டுமே வணங்கும் வழக்கமுள்ள பிருங்கி முனிவர் உமாதேவியை விலக்கி வணங்குவதற்காக வண்டின் உருவம் கொண்டு பறந்துவந்து சிவனை மட்டும் வலம் வந்து சிவனை வணங்கி நின்றார்.

உமாதேவியார் பிருங்கி முனிவர் சென்றதும் சிவனை நோக்கி “சுவாமி பிருங்கி முனிவர் உங்களை மட்டும் வணங்கி விட்டு என்னை வணங்காமல் சென்றதற்கு காரணம் என்ன” என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் சிவன் மட்டும்தான் பரம்பொருள் என்று நினைப்பவர் பிருங்கி முனிவர்.அதனால் உன்னை வணங்காமல் என்னை மட்டும் வணங்கி சென்றார் என்று கூறினார்.

அதைக் கேட்ட உமாதேவியார் கோபம் கொண்டார்.தன்னை அவமதித்துச் சென்ற முனிவருக்கு அவரது சக்தியாவும் இழந்து போக வேண்டும் என்று சாபமிட்டார்.அவர் தனது உடம்பில் உள்ள சதை,குருதி யாவும் இழந்து சக்தி அற்றவனானார்.

முனிவரால் நடக்க முடியாமல் போனது.சிவபெருமான் தன் பக்தன் வேதனையைக் கண்டு இரங்கினார்.ஒரு ஊன்றுகோல் கொடுத்தார்.

பிருங்கி முனிவர் ஊன்று கோலை ஊன்றி நடந்து சென்றார்.இதைக் கண்ட உமாதேவியார் கடும் சினமுற்றார்.சிவனும் தன்னை நிந்தித்துவிட்டார் என்று நினைத்தார்.

சிவனை விட்டு பூவுலகு வந்தார்.கேதாரம் என்ற மலைச்சாரலிற்கு வந்து ஒரு வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தார்.கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு அருகிலே உமாதேவியார் வருகை தந்திருந்தார்.

பொழிவின்றி கிடந்த நந்தவனம் பூத்துக் குலுங்கியது.பட்ட மரங்கள் தளிர்த்து பசுஞ்சோலையாக காட்சியளித்தன.கௌதம முனிவர் ஆச்சரியம் அடைந்தார்.தனது ஞானக் கண்ணால் உணர்ந்தார்.

உமாதேவியார் தான் வந்திருப்பதாக அறிந்த கௌதம முனிவர், அம்பிகை இருக்கும் இடத்திற்கு சென்று அவரை வீழ்ந்து வணங்கினார். “தாயே தாங்கள் இப்பூவுலகம் வந்த காரணத்தை அறியலாமா” என்று முனிவர் கேட்டார்.

அம்பிகை நடந்தவற்றைக் கூறினார்.கௌதம முனிவர் அவரை சாந்தப்படுத்தி அம்பிகைக்கு ஏற்ற உபசாரங்கள் அனைத்தும் செய்தார்.

உமாதேவியார் தான் சிவனை விட்டு வந்த தவறை உணர்ந்து கௌதம முனிவரிடம் கேட்கிறார்.“முனிவரே எனது கணவரை பிரியாமல் இருக்க எனக்கு ஒரு விரத முறையைக் கூற வேண்டும்” என்று அம்பிகை கேட்டார்.

முனிவரும் தாயே ஒரு புதிய விரதம் ஒன்று இருக்கிறது.இதை அனுஷ்டிப்பீர்களேயானால் நீங்கள் இருவரும் என்றுமே பிரியாத தம்பதிகளாய் இருப்பீர்கள்” என்றார்.“அப்படியா அது என்ன விரதம்? என்று உமை கேட்டார்.

முனிவரும் இவ்விரதம் கேதார கௌரி விரதமாகும்.இவ்விரதத்தை இருபத்தொரு நாட்கள் சிவனை நினைத்து விரதம் இருக்க வேண்டும் என்றும் அதனை அனுஷ்டிக்கும் முறையையும் விளக்கினார்.

உமாதேவியும் மகிழ்ந்து “இப்பொழுதே விரதத்தை ஆரம்பிக்கின்றேன்” என்று ஒரு சிவலிங்கம் அமைத்து புரட்டாதி வளர்பிறை தசமியில் ஆரம்பித்து 21 நாட்கள் முறைப்படி விரதமிருந்து சிவபூசை செய்து, சிவனை தியானித்து ஐப்பசி அமாவாசையில் நிறைவு செய்தார்.

இதைக் கண்ட சிவபெருமான் மகிழ்ந்து அன்னையின் முன் காட்சியளித்தார்.“தேவி இன்று முதல் என்னில் இடபாகத்தை உனக்கு தந்தோம்,இனி நான் இன்றி நீ இல்லை,நீ இன்றி நான் இல்லை என்று கூறி ஆண் பாதி பெண் பாதி என்னும் வடிவில் அர்த்தநாரீஸ்வரர் எனும் வடிவம் தாங்கினார்.

கௌரி கேதாரரை நினைத்து விரதம் இருந்ததனால் இவ்விரதம் “கேதார கௌரி விரதம்” என்ற பெயர் பெற்றது.“கௌரி நோன்பு” என்றும் இவ் விரதத்தை அழைப்பார்கள்.

திருக்கேதாரத்தில் கேதாரநாத் இறைவன் பெயர் கேதாரேஸ்வரர்.இறைவி பெயர் கேதாரகௌரி.

உமையம்மை வழிபட்டதால் கேதார கௌரி என்ற பெயரை அம்பாள் பெற்றார்.இத்தளத்தை ஆறுமாதம் தேவர்களும் ஆறு மாதம் மனிதர்களும் வழிபடுவதாகக் கூறப்படுகிறது.

 

      தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்

   இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்

வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்

              கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே

                                                       (சம்பந்தர் தேவாரம்)

இந்நாளில் கேதார கௌரி சமேத கேதாரேஸ்வர பெருமானை வணங்கி எல்லோரும் நோயற்று வாழ பிரார்த்திப்போமாக…

 

தமிழ்வாணி பிரான்ஸ்

(படங்கள்: நன்றி – கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில்)