October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

’20 ஆவது திருத்தம்’ நிறைவேறியது; அடுத்து என்ன?

-குகா

இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் “மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ” ஒருவாறாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தம் மூலம் கிடைக்கும் அதிகாரங்களைக் கொண்டு இந்நாட்டை சுபீட்சமான நிலைக்கு ஆளும் அரசு கொண்டு செல்லுமா என்பதுதான் இன்று எழும் முக்கிய கேள்வியாகும்.

பொது ஜன பெரமுன ஆட்சி பீடம் ஏறிய நாள் முதல் 20 ஆவது திருத்தம் குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

எதிர்க்கட்சிகள் இந்தத் திருத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. பௌத்த பீடங்கள், கத்தோலிக்கத் திருச்சபை, தமிழ்த் தரப்பு எல்லாம் எதிர்ப்பு வெளியிட்டன.

என்ன விலை கொடுத்தாவது 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என ஆளும் தரப்பு கங்கணம் கட்டி நின்றது.

நீண்ட இழுபறிகள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் புதிய திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இருநாள் விவாதத்துடன் குழு நிலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 156 பேரின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்ட போதும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் உட்பட 8 பேரின் ஆதரவு அரசுக்குக் கிடைத்தது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹபீஸ் நஸீர் அஹமட், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம், இஷாக் ரஹ்மான் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த்குமார், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயனா கமகே ஆகியோரின் ஆதரவுடன் 20 ஆவது திருத்தம் நிறைவேறியுள்ளது.

பெரும் சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, 19 ஆவது திருத்தம் மூலம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரங்கள் மீண்டும் கிடைத்துள்ளன. 

தனிமனிதனுக்கு இவ்வாறு அதிகாரங்கள் கைமாறுவதால் நாடு ‘சர்வாதிகாரப் போக்குடைய, இராணுவப் பின்னணி கொண்ட, ஜனநாயகத்துக்கு விரோதமான, காட்டாட்சிக்கு வழிவகுக்கும்’ என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.

மாறாக அபிவிருத்தி அடைந்த பொருளாதார மறுமலர்ச்சி கொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படுவதாக அரசாங்க தரப்பில் நியாயம் கூறப்பட்டது.

எதுவாக இருந்தாலும் நாடு எதிர்நோக்கும் இரு பெரும் சவால்களில் இருந்து நாட்டை மீட்க, இந்த அதிகாரக் குவிப்பு உதவுமா என்பதே இன்று எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தவிர ஏனைய எம்.பி.க்கள் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்தனர்

முதலாவது சவால் கொரோனா என்ற கொடூர நோயின் சமூக பரவலாகும். வருட ஆரம்பத்தில் சமூகத்தில் பெரும் தாக்கத்தை இது காட்டவில்லை.

ஆனால் கடந்த மாதங்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பெருக்கெடுத்த பரவல் நாடு முழுவதும் சமூகப் பரவலாக தீவிரமாகியது.

தினமும் பொதுச் சந்தைகள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டபோதும் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டு இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது.

இரண்டாவது சவால் பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளமை. கொரோனா தொற்றுக் காரணமாக பணிக்கு செல்வோர் தொகை 30,40 வீதத்திற்கு குறைந்துவிட்டது.

இறக்குமதி, ஏற்றுமதி வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதிக்கு தடை விதித்ததன் காரணமாக மூலப்பொருட்கள் இன்றி பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

அதேபோன்று ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுக்கும் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. உல்லாசப் பயணிகள் இன்றி ஹோட்டல் வியாபாரம் முடங்கிக் கிடக்கின்றன.

நாடு எதிர்நோக்கியுள்ள இந்த இரு சவால்களில் இருந்து விடுபட 20ஆவது திருத்தம் மூலம் கிட்டிய அதிகாரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பயன்படுத்துவாரா? அதற்கான காய்நகர்த்தல்களை ஆரம்பிப்பாரா? என்பனவே இன்று எழுந்துள்ள கேள்விகளாகும்.

ஜனாதிபதியின் புதிய காய்நகர்த்தல்கள் நாட்டை பாதுகாக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்….