January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சைமா 2021’: 7 விருதுகளை பெற்ற சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

‘சைமா 2021’ விருது விழாவில் ஏழு விருதுகளை வென்றுள்ளது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது விழா ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

2021 சைமா விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது.

இந்நிலையில் சைமா விருதுகள் வழங்கும் விழாவில் 7 விருதுகளை அள்ளியுள்ளது இந்த திரைப்படம்.

சைமா 2021 விழாவில், சிறந்த நடிகர் விருதை சூர்யாவுக்கும் சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கராவும் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் கிடைத்துள்ளது.

அதேநேரம், சிறந்த திரைப்பட விருது தயாரிப்பாளர் ராஜசேகரன் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை நிகேத் பொம்மிரெட்டி பெற்றுள்ளார்.

ஏழு விருதுகளை பெற்ற ‘சூரரைப் போற்று’ படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஓ.டி.டி தளத்தில் வெளியான படங்களில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையும் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு கிடைத்தது.

சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த படத்துக்கான விருதை ‘சூரரைப்போற்று’ படமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.