பிரித்தானியா-வாழ் 4 வயது சிறுமி இஷா, ஒருவகை எலும்பு மச்சை இரத்தப் புற்றுநோயினால் (acute myeloid leukaemia) பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ‘குருத்தணு தானம்’ (Stem Cell Donation) செய்யக்கூடிய பொருத்தமான கொடையாளிக்காக காத்திருக்கின்றார்.
கடந்த 15 வாரங்களாக லண்டன் கிரேட் ஆர்மண்ட் வீதி சிறுவர் மருத்துவமனையில் (Great Ormond Street Hospital) சிகிச்சை பெற்றுவந்த சிறுமி இஷாவுக்கு, இரண்டு சுற்றுக்களாக அளிக்கப்பட்ட தீவிர கீமோதெரபி சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை.
இஷாவின் நோயைக் குணப்படுத்த ‘குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை’ தேவைப்படுவதாக மருத்துவர்கள் தீர்மானித்துள்ளதால், அவரது மரபணுவுடன் பொருத்தக்கூடிய குருத்தணுவைக் கொண்டிருக்கும் கொடையாளி ஒருவர் தேவைப்படுகின்றார்.
சிறுமியின் உயிர்காக்க இந்த மாத இறுதிக்குள் (செப்டெம்பர்), பொருத்தமான ‘குருத்தணு கொடையாளியை (Stem Cell Donor) அடையாளம் காணவேண்டிய மிகவும் இக்கட்டான சூழ்நிலை நிலவுகின்றது.
இலங்கை வம்சாவளி பின்புலத்தைக் கொண்ட இஷா நடேஷ்வரன் தீவிர எலும்பு மச்சை இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது 2021-05-13 அன்று கண்டறியப்பட்டது.
சிறுமி இஷாவின் சமூகம்/இனம் சார்ந்த நபர்களிடம் இருந்தே பொருத்தமான கொடையாளியை தேர்ந்தெடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பிரிட்டனில் எலும்பு மச்சை மாதிரிகளை பதிவுசெய்யும் களஞ்சியத்தில் தெற்காசிய பின்புலம் கொண்டவர்களின் தரவுகள் மிகவும் குறைவாக இருப்பதால் இஷாவின் மரபணுவுடன் பொருந்தக்கூடிய கொடையாளிகளை கண்டறிவதில் மிகுந்த சிரமம் உள்ளது.
சிறுமி இஷாவிற்கு வாழ்வதற்கான மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க நீங்கள் விரும்பினால் ‘குருத்தணு தானம்’ செய்ய நீங்கள் பொருத்தமானவரா என்பதை பரீட்சித்துக் கொள்ள முடியும்.
‘குருத்தணு தானம்’ செய்ய நீங்கள் பொருத்தமானவரா என்பதை மிகவும் இலகுவான வழிமுறையில், வெறும் 2 நிமிடங்களில் கண்டறியலாம்.
கீழ் வரும் இணையதளத்திற்கு பிரவேசித்து உங்களை பதிவுசெய்து அதில் உள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் பொருத்தமானவரா என்பதை கண்டறிந்து, ‘குருத்தணு தானம்’ செய்வதன் மூலம் இஷாவின் உயிர் காக்க உதவமுடியும்.
https://for-esha.squarespace.com
https://www.dkms.org.uk/en/register-now
17-55 வயதுப் பிரிவுக்குட்பட்ட, நீண்டகால உடல் ஆரோக்கிய குறைபாடுகள் இல்லாத எவரும் குருத்தணு (stem cell) கொடையளிக்கலாம்.
பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யாமல் இருந்தால், லண்டனில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று இரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக வழங்கமுடியும்.