October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்: ரியல் மெட்ரிட் அதிர்ச்சி தோல்வி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் யுக்ரேனின் சக்தார் டொனெஸ்ட்க் கழக அணியிடம் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழக அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

13 தடவைகள் ஐரோப்பிய சாம்பியனாகியுள்ள ரியல் மெட்ரிட் அணியின் இந்தத் தோல்வி சர்வதேச கால்பந்தாட்ட அரங்கையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

யுக்ரேனின் சக்தார் டொனெஸ்ட்க் கழக அணி வீரர்கள் 13 பேரும் கொரோனா பரிசோதனையில் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டதால் இரண்டாம் நிலை அணியே இந்தப் போட்டியில் விளையாடியது.

ஆனாலும், இளம் வீரர்களைக் கொண்ட சக்தார் டொனெஸ்ட்க் அணி போட்டியின் ஆரம்பம் முதலே சவாலாக விளையாடி முதல் பாதியில் 3 கோல்களைப் போட்டு அசத்தியது.

29 ஆவது நிமிடத்தில் கார்டோஸ் லெமோஸ் மார்டின்ஸ், 33 ஆவது நிமிடத்தில் வர்னே, 42 ஆவது நிமிடத்தில் சொலமன் ஆகியோர் அந்த கோல்களைப் போட்டனர்.

ரியல் மெட்ரிட் கழக அணியால் முதல் பாதியில் கோலடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் ரியல் மெட்ரிட் அணி சார்பாக லூகாமொட்ரிச் 54 ஆவது நிமிடத்திலும், வினிகஸ் ஜுனியர் 59 ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர்.

இறுதியில் 3-2 எனும் கோல் கணக்கில் யுக்ரேனின் சக்தார் டொனெஸ்ட்க்கழக அணி மெய்சிலிர்க்க வைக்கும் வெற்றியை ஈட்டியது.

இது 2000 ஆம் ஆண்டு ஜேர்மனியின் பயேன் மியூனிச் கழக அணியிடம் அடைந்த தோல்விக்கு பின்னர் ரியல் மெட்ரிட் அணி தனது சொந்த மைதானத்தில் அடைந்த மிக மோசமான தோல்வியாகும்.

இந்தத் தோல்வியின் இரவு மிகவும் கொடுமையானது என அணியின் முகாமையாளரும், பயிற்சியாளருமான ஸினெடின் ஸடேன் மனவருத்ததுடன் தெரிவித்துள்ளார்.