
வரலட்சுமி விரதம் மகாலட்சுமியை நினைத்து கடைபிடிக்கும் விரதமாகும்.
பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியே இந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறு அருளிய விரதமாகும்.
இந்த விரதம் தோன்றியதற்கு ஒரு வரலாறு உண்டு. சாருமதி என்ற ஒரு பெண் ஒரு நல்ல முறையில் வளர்க்கப்பட்டு திருமணம் பெற்றோரால் செய்து வைக்கப்பட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.
சாருமதி புகுந்த வீட்டிற்கு சென்று பிறந்த வீட்டின் பெருமையையும் புகுந்த வீட்டின் புகழையும் காப்பாற்றினாள்.
தாய் தந்தையரையும் மதித்தது போல் மாமன் மாமியாரையும் மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தினாள்.
உறவினர்கள் மீது பாசத்தைப் பொழிந்தாள். கடவுள் மீது மிகுந்த பக்தியுடன் விளங்கினாள். இவ்வளவு அன்பும் உபசரிப்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இப்பெண்ணின் அன்பைக் கண்டு மகாலட்சுமியே வியந்தாள்.
ஒருநாள் இரவு சாருமதியின் கனவில் தோன்றி,
”ஒரு குடும்பப் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாக தோன்றுகிறாய். நான் சொல்லும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பாயாக. இவ் விரதத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுவாயாக இவ்விரதத்தை யார் முறையாக கடைப்பிடிக்கின்றார்களோ அவர்களின் இல்லத்தில் நான் நிரந்தரமாக தங்குவேன்” என்று கூறி மறைந்து விடுகிறாள்.
சாருமதி மகிழ்ந்து தானும் அந்த விரதத்தை அனுஷ்டித்து மற்றவர்களுக்கும் கூறி இவ்விரதத்தை அனுஷ்டிக்குமாறு வேண்டினாள்.
இலக்குமியே இவ்விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறியதால் ‘வரலட்சுமி விரதம்’ என்று கூறப்படுகிறது.
வரலட்சுமி விரதம் ஒவ்வொரு ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
இம்முறை ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வருகிறது. இவ்விரதத்தை சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும் கன்னிப் பெண்கள் திருமணம் நடைபெற வேண்டியும் அனுஷ்டிப்பர்.
ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். தங்கள் தொழிலில் முன்னேற்றம் பெற தொழில் வளம் பெறவும் இவ் விரதத்தை கடைபிடிக்கலாம்.
இந்த விரத நாளில் வீட்டு பூஜை அறையில் பூரண கும்பம் வைத்து அதில் மகாலட்சுமியை நிலைநிறுத்தி விரதத்தை பிடிக்கலாம்.
கும்பத் தேங்காயில் மகாலட்சுமியின் உருவமாக நினைத்து வழிபடலாம்.
இல்லாவிட்டால் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை வைத்து வழிபடலாம்.
கும்பத்தில் நீர் நிறைத்து மஞ்சள் கலந்து அதற்குள் சில்லறை நாணயம் போட்டு கும்பம் வைக்கலாம்.
அல்லது கும்பத்தில் அரிசியை வைத்து அதற்குள் வாசனைத் திரவியம் போட்டு மஞ்சள் கட்டி, சில்லறை நாணயங்கள் இவற்றையும் போட்டு வைத்து வழிபடலாம். மகாலட்சுமிக்கு விருப்பமான நைவேத்தியம் வைத்து வழிபட்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.
அன்று விரதம் பூர்த்தியடையும் போது கையில் மஞ்சள் இளை கட்ட வேண்டும். அதன் பின் உணவு அருந்தலாம்.
ஆலயங்கள் சென்று விளக்குப் பூஜையில் கலந்துகொண்டு அந்தணர் கொடுக்கும் வரலட்சுமி நூலைக் கட்டி நிறைவு செய்யலாம்.
இவ்விரதம் இருப்பவர்கள் மகாலட்சுமியின் பூரண அருளைப் பெறுவர் என்பது நிச்சயமாகும்.
அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைப்பதாக…