November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் ‘மார்பர்க் வைரஸ்’ தாக்கம்; எச்சரிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்!

(Photo: WHO African Region/Twitter)

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் எபோலா வைரஸை ஒத்த (Marburg)  ‘மார்பர்க் வைரஸ்’ தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த கொடிய நோய் கடந்த வாரம் மேற்கு ஆப்பிரிக்காவில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மார்பர்க் வைரஸால் உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

வேறு யாருக்கும் தொற்று பரவியுள்ளதா என்ற கண்காணிப்பும் தொடங்கியுள்ளது.

எபோலாவைப் போன்றதொரு கொடிய வைரஸ் நோய் என்பதுடன் கொவிட்-19 வைரஸ் போன்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியதாகும்.

குறிப்பாக வெளவ்வால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

இந்நோய் தாக்கினால் 88 வீதம் மரணமடைவதற்கான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையம்  எச்சரித்துள்ளது.

மேலும், “மார்பர்க் வைரஸ்” வேகமாகப் பரவக் கூடியது என்பதால் அதன் தாக்கத்தைக் கண்டறிந்து உடனடியாக தடுக்க வேண்டும் என உலக சுகாதார மையத்தின் பிராந்திய இயக்குநர் டாக்டர் மட்ஷிடிசோ மோட்டி கூறியிருக்கிறார்.

மேலும், சுகாதார அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே, எபோலா கட்டுப்பாடு தொடர்பில் பெற்றுள்ள அனுபவத்தைப் பயன்படுத்தி மார்பர்க் வைரஸை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குகைகள், சுரங்கங்களில் வாழும் வெளவ்வால்களிடமிருந்து இந்த வகை வைரஸ் பரவுகிறது.அத்தகைய குகை வாழ், சுரங்கங்கள் வாழ் வெளவ்வால்களுடன் மனிதன் நேரடித் தொடர்பில் வரும்போது மனிதனுக்கு வைரஸ் தொற்று உண்டாக வாய்ப்புள்ளது.

ரோஸெட்டஸ் வெளவ்வால்கள் (Rousettus bats) இந்த பாதிப்பை உருவாக்குகின்றன என்று உலக சுகாதார மையம் கணித்துள்ளது.

மார்பர்க் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் உமிழ் நீர், வியர்வை, சிறுநீர் மூலம் மற்ற மனிதருக்கு இந்த வைரஸ் பரவுகிறது.

அதேபோல் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய இடத்தையும், பொருளையும் மற்ற நபர் பயன்படுத்தினாலும் தொற்று ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, தலைவலி, வாந்தி இரத்தம், தசை வலி மற்றும் பல்வேறு துவாரங்கள் வழியாக இரத்தப்போக்கு ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும்.

கடந்த காலங்களில் தெற்கு ஆப்பிரிக்காவின் அங்கோலா, கென்யா, உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் மார்பர்க் வைரஸ் பரவியுள்ளது.

ஆனால், மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் மார்பர்க் வைரஸ் தாக்கம் கண்டறியப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.