
File Photo
நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் நோயாளர்களை வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2 முதல் 65 வயதிற்குட்பட்ட நபர்கள் வீடுகளில் வைத்து சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு தென்படும் அறிகுறிகளுக்கு அமைய மருத்துவ மேற்பார்வையின் கீழ் இவ்வாறு சிகிச்சை வழங்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த முறைமை மேல் மாகாணத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் இது நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது.
தற்போது நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வைத்தியசாலைகளில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இதன்படி பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளின் போது தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால், அந்த நபருக்கு ஆபத்தான நோய் அறிகுறிகள் இல்லாவிட்டால் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கமைய அவர் வீட்டில் வைத்து சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய 1390 என்ற தொலைபேசி இலக்கமும் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.