January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆப்கான்-பாக். எல்லைப் பகுதியில் அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கலாம்’: ஐ.நா தகவல்

அல்-கொய்தா அமைப்பின் தலைவரான அய்மான் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கலாம் என்று  ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

அல்-கொய்தாவின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அந்த அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி தலைவராக பொறுப்பேற்றார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற அவர், அமெரிக்காவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததையடுத்து, அல்-ஜவாகிரியை ‘கொல்வோம்’ என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக அண்மைக் காலமாக தகவல் வெளியாகியிருந்தது. எனினும் அல்-கொய்தா அமைப்பு அதனை  உறுதிப்படுத்தவில்லை.

இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பது தொடர்பில் பல சந்தேகங்கள் எழுந்திருந்தது.

இந்த நிலையில் அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஐநா தற்போது தெரிவித்துள்ளது.

அத்தோடு அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான எல்லை பகுதியில் வசித்து வருகிறார்கள் எனவும் ஐநா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் பட்டியலில் அல்-கொய்தா அமைப்பின் தலைவரான அய்மான் அல்-ஜவாகிரியும் உள்ளார்.

அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் பயங்கரவாதிகளின் பிரசார வெளியீடுகளில் பங்கேற்கவில்லை என்றும் ஐநாவின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அல்-கொய்தா, தலிபான் தலைவர்களின் உரையாடல்களை சில நாடுகள் இடைமறித்து கேட்டுள்ளதாகவும் சமீப காலமாக இந்த உரையாடல்கள் குறைந்துள்ளதாகவும் இதன்போது ஜநா சுட்டிக்காட்டியுள்ளது.