December 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வையகம் போற்றும் ‘வைகாசி விசாகம்’

கை கால் நுடங்கியும் கண் பஞ்சடைந்தும் ஈகாகம் கொத்தி
மெய்தான் அழுகியும் மாள்வோரைக்கண்டு தமிகவும் நொந்தேன்
உய்கேனோ ஓவென்று உளலுகின்றேன். நீ உளமிரங்கி
வைகாசி எல்லாம் வருவாய் மதுரை மனோன் மணியே…

(அகத்தியர்)

இருபத்தேழு நட்சத்திரத்திரங்களில் ‘விசாகம்’ நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

முருகனின் அவதாரமாக வைகாசி விசாகம் தெய்வீக நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. விசாக நட்சத்திரத்தில் முருகன் அவதரித்ததால் விசாகன் என்ற பெயர் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

வைகாசி விசாகம் பூரணையுடன் சேர்ந்து வரும் மாதம் என்பதால் வைகாசி என்ற பெயர் பெற்றது. இந்த வருடம் வருகின்ற வைகாசி விசாகம் செவ்வாய்க்கிழமையில் வருவதால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உரிய நாளாகவும் வணங்கப்படுகின்றது. விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு, விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசையாகும்.

வைகாசி விசாகம் முருகப்பெருமானை நினைத்து அனுட்டிக்கப்படும் விரத நாளாகும். இந்நாளில் முருகனை மனமுருகி வழிபட்டு விரதமிருந்தால் நினைத்த வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முக்கியமாக குழந்தை இல்லாதவர்கள் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறுவர்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை நீங்க இவ்விரதத்தை அனுட்டிப்பர்.

கணவன், மனைவி பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காக இவ்விரதத்தை நோற்பர்.

வைகாசி விசாக தினத்தில் முருகனுக்கு விரதமிருப்பவர்கள் உபவாசம், இருக்கலாம். அல்லது முடியாதவர்கள் பால், பழம் அருந்தலாம்.

வீட்டில் சுவாமி அறையில் முருகனின் படம் இருந்தால் சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், பாயாசம், பழங்கள் ஏதாவது படைத்து வழிபடலாம்.

வீட்டில் முருகனின் சிலை இருந்தால் வேல் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். முருகனுக்கு உகந்த பாடல்கள் படிக்கலாம். ‘பஞ்சாமிர்த வர்ணம்..’ என்னும் பாடல் முருகன் விரும்பிக் கேட்ட பாடல் என்று கூறுவார்கள்.

இந்நாளில் முருகன் ஆலயங்களில் விசேட அபிஷேகங்கள், பூஜைகள், நடைபெறும் முருகனுக்கு காவடி, பால்குடம் போன்ற நேர்த்திகளை அடியார்கள் செய்வார்கள்.

சிவனின் அக்னியில் தோன்றிய முருகப்பெருமாளை குளிரவைக்க நிறைய அபிஷேகம் செய்து அவரது அருளைப்பெறுவர்.

வைகாசி விசாகம் இந்துக்களுக்கு மட்டுமல்ல பௌத்த மதத்தினருக்கும் விசேட நாளாக கருதப்படுகின்றது.

வைகாசி விசாகத்தில் தான் சித்தார்த்தன் என்ற பெயர் கொண்ட புத்தர் அவரித்த நாளாக கொண்டாடுகிறார்கள்.

புத்தர் ஞானம் பெற்ற நாளாகவும் பரிநிர்வாணம் அடைந்ததாகவும் பௌத்தர்கள் புனித நாளாகவும் கருதுகிறார்கள்.

வைகாசி விசாகத் திருநாளில் தான் நரசிம்ம அவதாரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. நம்மாழ்வார் அவதரித்த தினம் இந்த வைகாசி விசாகமாகும்.

பரசுராமரின் புத்திரர்கள் அவரால் சாபம் பெற்று மீனாக மாறினர். சாபவிமோசனம் பெற்று மீண்டும் மானிடராக உருவெடுத்தது  வைகாசி விசாக நாளில் ஆகும்.

பசுவால் வளர்க்கப்பட்ட ஆபுத்திரன் என்பவன் சிந்தா தேவியிடம் இருந்து அமுதசுரபி பாத்திரம் பெற்றான். அமுதசுரபியில் இருந்து கிடைக்கும் உணவு எல்லோருக்கும் பரிமாறினான்.

அவன் இறக்கும் தறுவாயில் அமுதசுரபி பாத்திரத்தை குளத்தில் எறிந்தான்.

உயிர் நீக்குமுன் இப்பாத்திரம் தன்னலங்கருதாத ஒருவரிடம் சேரவேண்டும் என எண்ணினான்.

தனது பழம் பிறப்புணர்ந்த மணிமேகலை மணி பல்லவத்தீவில் வைகாசி விசாகநாளில் அமுதசுரபியை பெற்றதாக மணிமேகலை காவியம் கூறுகிறது.

அர்ச்சுணன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெற்றதும் இந்நாளில் ஆகும்.

வைகாசி விசாகத்திருவிழா திருச்செந்தூரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதுபோல முருகன் ஆலயங்கள் அனைத்திலும் இந்நாள் விசேடமாக கொண்டாடப்படுகிறது.

”அருவமும் உருவமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்றசோதி பிழம்பதோர் மேனியாக
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பண்ணிரெண்டும் கொண்டு
ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தன் உலகமுய்ய”

என முருகனின் அவதாரச் சிறப்பை கூறும் இப்பாடலை அனைவரும் பாடுவோம்.

தமிழ்வாணி (பிரான்ஸ்)

(படங்கள்:  யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயில்)