
–குகா
இலங்கையில் கொவிட்-19 தொற்று மீண்டும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. முதலாவது அலையை விட இந்தத் தடவை சமூகத்தொற்று பரவல் வேகமடைந்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் முதலாவது கொரோனா அலை கடுமையாகத் தாக்கியது போன்று மீண்டும் தற்சமயம் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.
முதலாவது அலையின் போது ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்தது. மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் எடுப்பில் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது சமூகத்துக்குள் வைரஸ் பெரிதாகப் பரவவில்லை.
ஆனால் இம்முறை சமூகத்துக்குள் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் முதலாம் அலையின் போது பெற்ற அனுபவத்தைக் கொண்டும் இம்முறை வித்தியாசமான முறையில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
முதலாம் அலையின் போது சுவிஸில் இருந்து வந்த கிறிஸ்தவ போதகர் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்த மத வழிபாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சுவிஸ் திரும்பிய போதகர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக பின்னர் தெரியவந்ததை அடுத்து தாவடி, அரியாலை கிராமங்கள் முடக்கப்பட்டன.

வெலிசர கடற்படை முகாமில் 900 கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளான போதும், வெற்றிகரமாக பரவல் அடக்கப்பட்டது. சமூகத்தில் வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பரவலானது பொருளாதார-சமூக மட்டத்தில் தீவிரமாகியுள்ளது. எங்கே பரவல் காணப்படுகிறதோ அந்தப் பிரதேசம் மட்டும் முடக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்காமல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த முறை கொரோனா பரவலுக்கான மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பரவாமல் தடுக்கப்பட்டது.
முப்படையினரும் களம் இறக்கப்பட்டு முளையிலேயே கிள்ளி எடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தொற்றின் ‘மூலம்’ கண்டறியப்படவில்லை
இம்முறை நிலைமை வித்தியாசமானது. மினுவாங்கொடையில் இயங்கும் பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்மணியே இந்த இரண்டாவது அலையில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்.
அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன.
பணியாளர்கள் யாவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தொற்றுக்குள்ளானவர்கள் உடன் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
விடுமுறையில் சென்றவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்ட வாகனங்களில் பயணித்தவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள், பழகியவர்கள் என அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஆனாலும், தொழிற்சாலைப் பணியாளர்கள் மேலும் சிலர் சோதனைக்கு முகம் கொடுக்காமல் சமூகத்தில் மறைந்து இருப்பதாகவும், உடன் அவர்களை சோதனைக்கு ஒத்துழைக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக இருப்பவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வருமாறும் அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
முதலாவது அலையில் பரவிய வைரஸை விட இந்த முறை வீரியம் கொண்ட வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கும் நாட்டின் தலைமை தொற்றுநோய் நிபுணர் சுதத் சமரவீர, இம்முறை பரவல் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வந்த இலங்கையைச் சேர்ந்த பிராண்டிக்ஸ் தொழிலாளர்களாலேயே கொரோனா பரவியதாக முன்னர் தகவல்கள் வெளியாகிய போதிலும், கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவிலிருந்து வந்த விருந்தினர்களோ, தொழிலாளர்களோ தமது மினுவாங்கொடை தொழிற்சாலைக்குள் பிரவேசித்திருக்கவில்லை என்று பிராண்டிக்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
அந்தத் தொழிற்சாலையின் முதலாவது பெண்ணுக்கு எவ்வாறு கொரோனாத் தொற்று ஏற்பட்டது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. தொற்று மூலத்தை கண்டறிய பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் சமூக மட்டத்தில் தீவிரமாக பரவி விட்டது. அதில் இருந்து தங்களை பாதுகாக்கும் பொறுப்பு மக்கள் கையிலேயே உள்ளது.
சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நடைமுறைகளை முறைப்படி அனுசரித்து நடப்பதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து தப்ப முடியும் என்ற உண்மையை சகலரும் உணர்ந்து செயற்படுவதன் மூலமே சமூகத் தொற்றை முறியடிக்க முடியும்.
அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றுவதோடு வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் உள்ளனர்.