January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்”: கனடாவின் ஒன்ராரியோ நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது!

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றம், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 திகதியுடன் முடிவடையும் 7 நாட்களை “தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக” பிரகடனப்படுத்தி சட்டமியற்றியுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக அங்கீகரிக்கும் உலகின் முதல் சட்டம் இதுவென்று ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்திற்கான மசோதாவை 2019 இல் தனிநபர் பிரேரணையாக விஜய் தணிகாசலம் கொண்டுவந்திருந்தார்.

அனைத்துக் கட்சி உறுப்பினர்களினதும் ஆதரவுடன் அந்த சட்டமூலத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு நிறைவேறியிருந்த போதிலும், நீண்ட தாமதத்தின் பின்னரே மூன்றாவது வாசிப்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்றைய மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போதும், அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர்.

“இலங்கையில் போரின் போது இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி உலகத்துக்கு தெளிவூட்டுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும் இந்த மசோதா வழிவகுக்கும்” என்று இந்த சட்டத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டவர்களில் பலர் கூறியுள்ளனர்.

இதனிடையே, கடந்த ஆண்டில் இந்த சட்ட மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இலங்கை கருத்து வெளியிட்டிருந்தது.

ஒட்டாவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “இனப்படுகொலை” தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒன்ராரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுகின்ற சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானவை என்றும் அந்த அறிக்கையில் இலங்கை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.