November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘குரோதி’ தமிழ் புத்தாண்டை சிறப்பாக வரவேற்போம்!

“முத்தமிழ் போல் முக்கடல் சூழ் குமரி முனை வளரும்
உத்தமியே ஸ்ரீ சக்கரன் தன்னில் உதித்தவனே
 அத்தருணத்திலும் எனைப் பிரியாமல் எனக்கிரங்கி   சித்திரைத் திங்களில் வந்தருள் செவ்வாய் சிவக்கொழுந்தே”      

                                                                                                                       -அகத்தியர்

சூரியன் மேட இராசிக்குள் பிரவேசிக்கும் நாளை அடிப்படையாகக் கொண்டு சித்திரைத் தமிழ் புத்தாண்டுப் பிறப்பு கொண்டாடப்படுகின்றது.

ஆறு பருவ காலங்களில் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து நறு மணம் வீசும் இளவேனிற் காலத்தின் முதல் மாதமே சித்திரை.

மாவும் பலாவும் நற்கனிகளைத் தந்து மக்களுக்கு அருஞ்சுவை கொடுக்கும் இக்காலத்தில் தான் புத்தாண்டு பிறக்கின்றது.

வசந்த காலத்தில் தொடங்கும் சித்திரை வருடப் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினால் ஆண்டு முழுவதும் வாழ்வில் வசந்தம் பொங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.

புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து தலையில் மருத்து நீர் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து அன்றைய நாளை தொடங்க வேண்டும்.

சுவாமி அறையில் மா, பலா,வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகை, மங்களப் பொருட்கள் உள்ள தட்டை காலையில் முதலில் காண்பது தெய்வீகமானது, மகிழ்ச்சிகரமானது.

வழிபாடு முடிந்தபின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுதல் வேண்டும். இந்நாளில் பெரியோர் இளையவர்களுக்கு கைவிசேடம் கொடுப்பர்.

வெற்றிலையில் பணம்,நெல், மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை வைத்து பணம் கொடுப்பது கைவிசேடமாகும். பின்னர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு இறையருள் பெற்று குருமாரின் ஆசியும் பெறுதல் வேண்டும்.

வீட்டில் அறுசுவை உணவை எல்லோரும் சேர்ந்து உண்ண வேண்டும். மாலை வேளையில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று இனிப்புப் பலகாரங்கள் கொடுத்து பரிமாறி பகிர்ந்து உண்ணுதல் தமிழர்களின் தலைசிறந்த பண்பாகும்.

புத்தாண்டு கொண்டாடுவதால் உள்ளம் மகிழ்வடைகின்றது. ஒற்றுமை மேலோங்குகின்றது. சமய, கலாசாரங்கள் பேணப்படுகின்றன.

பெரியோர்களை மதித்தல், விருந்தோம்பல், பரஸ்பரம் எல்லோருடனும் சேர்ந்து வாழ்தல் போன்ற உயரிய பண்புகளை புத்தாண்டு கற்றுக் கொடுக்கின்றது.

சித்திரைப் புத்தாண்டு 60 வருடங்களைக் கொண்டது. முதல் வருடம் பிரபவ என்ற பெயரில் ஆரம்பித்து 60 ஆவது வருடம் அட்சய என்ற பெயரில் நிறைவடைகின்றது.

புராணக் கதைகளின்படி, நாரதமுனிவர் திருமணம் செய்வதற்கு பெண்களை தேடினார். கிடைக்கவில்லை. பெருமாளிடம் சென்று முறையிட்டார்.

பெருமாள் மோகினி வடிவம் கொண்டு நாரதரை திருமணம் செய்ததாகவும், அவர்களுக்கு வருடத்திற்கு ஒரு பிள்ளையாக 60 பிள்ளைகள் பிறந்ததாகவும் 60 பிள்ளைகளும் 60 வருடங்களின் பெயரைக் கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

சித்திரைப் புத்தாண்டு இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு சித்திரையில் பிறந்துள்ள புத்தாண்டு ‘குரோதி’ என்ற பெயரில் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் மங்களத்தையும் கொடுக்க வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக, நோயற்ற வாழ்வும் – குறைவற்ற செல்வமும் பெற்று வாழ மலரும் சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக அமைய அருள் கிடைக்கட்டும்.