“இன-மத-மொழிகளுக்கு அப்பால், சாதாரண மக்களின் உரிமைகளுக்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவர்”
-இரா. சம்பந்தன்
மனிதநேயத்தை வாழ்நாளின் சேவையாய் முன்னெடுத்த மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவானது ஈழத் தமிழர்களிடையேயும் புலம்பெயர் உறவுகளிடையேயும் கனமான வலியை ஏற்படுத்தியுள்ளது.
அநீதிகளுக்கு எதிராகவும் தமிழரின் உரிமைகளுக்காவும் சர்வதேசம் வரை ஒலித்த ஒரு தனித்துவமிக்க குரல் அடங்கிவிட்டதன் பிரதிபலிப்பே இது.
இலங்கையின் யுத்தகாலத்தில் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆன்மீக ஆறுதலை வழங்கிய ஆண்டகை, தமது சேவையை கத்தோலிக்க மதத்தவர்களுக்கு மட்டும் வரையறுக்காது அனைத்து மக்களையும் அரவணைக்கும் விதமாக முன்னெடுத்திருந்தார்.
தமிழ் மக்களின் இன்னல்களைக் கண்டு வருந்திய ஆண்டகை அவர்களின் நீதிக்காக, தன் உயிரையும் துச்சமென்று எண்ணி யுத்த களத்தில் இறங்கி அகிம்சை வழி போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இவரது முயற்சிகளால் ஆயிரக் கணக்கான மக்களின் உயிர் யுத்த களத்திலிருந்து காப்பாற்றப்பட்டது.
யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பொது மக்களின் நலனுக்காகப் போராடிய ஆண்டகை ஒரு கட்டத்தில், போராளிகளைக் காட்டிக்கொடுப்பவராகவும் விமர்சிக்கப்பட்டார். பல சந்தர்ப்பங்களில் அரச தரப்பு அரசியல்வாதிகளால் ‘புலிகளின் தீவிர ஆதரவாளர்’ என்ற பழிச் சொல்லுக்கு ஆளானார்.
எனினும் தமது பாதையிலும் பணியிலும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்த ஆண்டகை நோய்வாய்ப்பட்டு அமைதியாகும் வரை அதற்காகப் பாடுபட்டார்.
யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்த ஆண்டகையின் வாழ்க்கை இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத ஒரு அத்தியாயமாகி விட்டது.
ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து வெள்ளிவிழாக் காணும் தருவாயில் இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81 ஆவது வயதில் மண்ணுலகை நீங்கியுள்ளார்.
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் ஆரம்ப வாழ்க்கை….
இராயப்பு ஜோசப் ஆண்டகை 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 இல் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்தார்.
தனது பாடசாலைக் கல்வியைத் நெடுந்தீவு றோ.க. பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் பயின்றுள்ள ஆண்டகை, கண்டி தேசிய குருமடம், திருச்சி புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியை நிறைவுசெய்தார்.
1967ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி அப்போதைய யாழ்.ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையினால் யாழ். மரியன்னை பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1984ம் ஆண்டில், உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
1992 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி முன்னாள் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்றார்.
அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஓய்வுநிலை ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையினால் மருதமடு அன்னை ஆலயத்தில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
தனது ஒப்பற்ற பணியின் மூலம் மக்களுக்கு சேவையாற்றிய ஆண்டகை 2016ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி, ஆயர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
அத்தோடு, யாழ்ப்பாணம் புனித சவேரியார் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
போர்ச் சூழலில் ஆண்டகை…
தனது ஆயர் பணியின் பெரும்பகுதியினை யுத்தத்திற்கு மத்தியில் ஆற்றிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, பாதிக்கப்பட்ட மக்களின் இன்னல்களைக் கண்டு இரங்கி அவர்களின் துயரங்களைத் துடைக்க அரும்பாடுபட்டார்.
இலங்கையில் அமைதி நிலவுவதற்காக, வத்திக்கான், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றோடு நெருக்கமாகப் பணியாற்றி மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்ச் சூழலில் மக்கள் எதிர்நோக்கிய துன்பங்கள் குறித்தும் எடுத்துரைத்து நீதி கோரினார்.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பேசாலையில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின்போது புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியிருந்த ஆண்டகை, குறித்த சம்பவம் தொடர்பில் வத்திக்கானுடன் தொடர்புகொண்டு சர்வதேசத்தின் கரிசனத்தை ஈர்த்திருந்தார்.
2007 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி இலுப்பைக்கடவை படகுத்துறைப் பகுதியில் விமானக் குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டபோது, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆண்டகை பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார்.
போரின் பின்னரான சூழலில் ஆண்டகை…
போரின் பின்னரான காலப்பகுதியில், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராமல் குரல் கொடுத்த ஆயர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலையும் கோரி நின்றார்.
யுத்தகாலத்திலும் பின்னரும் மன்னார் ஆயர் இல்லத்தைவிட்டு அவர் ஒருபோதும் பாதுகாப்பிற்காக வெளியிடங்களுக்குச் சென்றிருக்கவில்லை.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உறுதியாகவும் மிகத் துணிவோடும் அவர் செயற்பட்டிருந்தார்.
யுத்தத்தால் நிர்க்கதியான மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டார். முள்ளிக்குளம், விடத்தல்தீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும், காணிகளை, வீடுகளையும் பெற்றுக்கொடுக்க அரும்பாடுபட்டார்; யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக குரல்கொடுத்தார்.
இறுதிக்கட்டப் போரில் அவயவங்களை இழந்தவர்கள், படுகாயங்களுக்கு உள்ளானவர்கள், கைவிடப்பட்ட நிலைமைக்கு ஆளாகியிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு மன்னாரிலும் வவுனியாவிலும் துயர்துடைப்பு பணிகளை முன்னெடுத்தார்.
யுத்தத்தாலும், சுனாமியினாலும் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற பெண் சிறார்களுக்கு வவுனியாவில் சலேசிய அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இல்லத்தையும் மன்னாரில் ஆண் சிறார்களுக்கான இல்லத்தையும் ஆரம்பித்தார்.
வாழ்வோதய நிறுவனத்தின் உதவிக்கரம் பிரிவு மூலமாகவும் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தின் ஊடாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை தொடர்ந்து வழங்கினார்.
பெண்களுக்கான நிலையங்கள், முதியோர் இல்லங்கள், சிறுவர்களுக்கான நிலையங்கள், இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிக் கூடங்கள் என்பவற்றின் தோற்றத்திற்கு காரணமாக இருந்தார் ஆயர்.
தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய்…
தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையை உருவாக்கும் பணியிலும் ஆண்டகை தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்; இதற்காக தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளுடனும், அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான தொடர்புகளை மேற்கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அவரின் தலைமையில் வடக்கு-கிழக்கு சமூக அமைப்புகள், பொது அமைப்புக்கள் ஆகியவற்றுடனான முக்கிய சந்திப்பு ஒன்று மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றிருந்த போதிலும் அது சாத்தியப்படாது போனது.
எனினும் தமிழ் மக்களின் தீர்வுக்காக தமது முயற்சிகளை தொடர்ந்த ஆயர், மன்னாரில் 2011 ஜனவரியில் இடம்பெற்ற எல்.எல்.ஆர்.சி. அமர்வில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து எழுத்து மூலமாக அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இந்த அறிக்கையில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மக்கள் தொகைப் புள்ளிவிபரக் கணக்கெடுப்பையும், யுத்தம் முடிவுற்றதன் பின்பு வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகையையும் ஒப்பிட்டு வன்னியில் இருந்த மக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் நிலை குறித்து இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பினார்.
இவரின் இந்த ஆதாரங்கள் ஐநாவில் தமிழ் மக்களின் நீதி கோரலில் முக்கிய பங்கை ஆற்றியது. இறுதி யுத்தத்தின் போதான குற்றங்கள் தொடர்பில் அரசு பதில் கூறவேண்டிய முக்கிய கேள்வியாக இன்றும் இது இருந்து வருகின்றது.
அத்தோடு, காணாமலாக்கப்பட்டவர்கள், தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு போன்ற உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டிய பல விடயங்கள் மற்றும் அரசியல் தீர்வின் அவசியம் போன்றவற்றை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
உறுதியும், துணிவும், துன்பப்படுபவர்களுக்காக இரங்கும் மனமும் கொண்டிருந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை, மதபோதகர் என்பதற்கு அப்பால் மனிதத்தை நேசிக்கும் மாமனிதராக உயர்ந்து நிற்கின்றார்.
பல தசாப்தங்களாக பல்வேறு தளங்களில் குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்த குரல் 2021 ஏப்ரல் 1 ஆம் திகதி கிறிஸ்தவர்களுக்கு புனிதமான பெரிய வியாழன் நாளன்று ஓய்ந்துவிட்டது.
ஆண்டகையின் மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.
எனினும் தமிழ் மக்களின் தீர்வுக்காக தமது முயற்சிகளை தொடர்ந்த ஆயர், மன்னாரில் 2011 ஜனவரியில் இடம்பெற்ற எல்.எல்.ஆர்.சி. அமர்வில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து எழுத்து மூலமாக அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இந்த அறிக்கையில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மக்கள் தொகைப் புள்ளிவிபரக் கணக்கெடுப்பையும், யுத்தம் முடிவுற்றதன் பின்பு வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகையையும் ஒப்பிட்டு வன்னியில் இருந்த மக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் நிலை குறித்து இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பினார்