November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டொலர் நெருக்கடியில்’ இலங்கை; அண்மைய அறிவிப்புகளை மீளப் பெற்றது மத்திய வங்கி!

அமெரிக்க டொலர் இலங்கைச் சந்தையிலிருந்து வெளியில் செல்வதை தடுப்பதற்காக நாட்டின் மத்திய வங்கி வெளியிட்டிருந்த சில அறிவிப்புகளை மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையில் உள்ள வங்கிகளும் ஏற்றுமதியாளர்களும் ஈட்டுகின்ற அமெரிக்க டொலர்களில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை மூலம் நாட்டின் டொலர் கையிருப்பை பலப்படுத்துவதற்கு மத்திய வங்கி முடிவெடுத்திருந்தது.

ஆனால், இலங்கை ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரிக்கும் நிலை தொடரக்கூடும் என்ற அச்சத்தின் நடுவே மத்திய வங்கி தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

கடந்த வாரத்தின் முற்பகுதியில், டொலரின் மதிப்பு 200 ரூபாவையும் தாண்டியிருந்தது. இந்நிலையில், மத்திய வங்கி அதன் முடிவை ரத்துசெய்யும் அறிவித்தலை வெளியிட்டதும், டொலரின் விற்பனை விலை 198 ரூபாயாக குறைவடைந்தது.

வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் டொலர்களில் இருந்து வங்கிகள் 10 வீதத்தையும், ஏற்றுமதிகள் மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தில் இருந்து ஏற்றுமதியாளர்கள் 50 வீதத்தையும் மத்திய வங்கிக்கு விற்க வேண்டும் என்று கோரிய இரண்டு அறிவித்தல்களே இப்போது வாபஸ் பெறப்பட்டுள்ளன.

தமது வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள இலங்கையின் வங்கிகள், நாட்டில் டொலருக்கு நிலவிவரும் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே நெருக்கடியை சந்தித்துள்ளன.

இந்நிலையில், மத்திய வங்கிக்கு டொலர்களை விற்பனை செய்யுமாறு வெளியான அறிவிப்புகளால் மேலும் அழுத்தத்தை எதிர்நோக்கியிருந்த வங்கிகளும் ஏற்றுமதி நிறுவனங்களும் இப்போது வந்துள்ள முடிவை வரவேற்றுள்ளன.

இந்த ஆண்டில் மொத்தமாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இலங்கை அரசு டொலர்-தட்டுப்பாட்டால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

கொவிட் -19 தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் 4.5 பில்லியன் பெறுமதியான சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் பெருமளவு கடன் சுமை காரணமாக இலங்கையின் பொருளாதாரமும் மோசமான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பும் அண்மைய மாதங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்நிலையில், இந்த நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இலங்கை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மூன்றாண்டு கால நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை சீனாவுடன் செய்துகொண்டுள்ளது.

அவ்வாறே, அந்நிய செலாவணியில் ஏற்படக்கூடிய அழுத்தத்தை சமாளிப்பதற்காக, மார்ச் 23 முதல் ஏப்ரல் 9 வரை இலங்கையின் வங்கிகள் வெளிநாட்டு கடன் முறிகளை வாங்கமுடியாதவாறும் மத்திய வங்கி தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.