January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

தென்மேற்கு பருவக்காற்று, ரேணிகுண்டா, பில்லா 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திய குணச்சித்திர நடிகரான தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

2 பிள்ளைகளின் தந்தையான தீப்பெட்டி கணேசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்  சிகிச்சை பலனின்றி காலமானார்.

கொரோனா பரவலால் சினிமாத் துறையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவும், அடுத்தடுத்த திரை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன் பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக்கூட பணம் இல்லை எனக் கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கவிஞர் சினேகன் இவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

இவரது மறைவுக்கு இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன், தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்பு நிறைந்த இதய அஞ்சலி கணேசா” என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.