-யோகி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது.
கொரோனா நிலைமைகளால் ஜெனிவா நகர் அமைதியாக இருக்கையில் இணைய-வழியிலேயே தான் வாதங்களும், மோதல்களும், கருத்துரையாடல்களும், திருத்தங்களும், தீர்மானங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
‘இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை-அனுசரணை நாடுகளான கனடா, ஜேர்மன், மொன்டிநீக்ரோ, வடக்கு மசடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இலங்கை மீதான 46/1 பிரேரணையை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளன.
15 அவதானிப்பு பந்திகள் மற்றும் 16 செயற்பாட்டு பந்திகளுடன் உருவாக்கப்பட்ட ‘பூச்சிய’ முன்-வரைவு உறுப்பு நாடுகளுக்கு ஆரம்பத்திலேயே பகிரப்பட்டது. அதில் காணப்பட்ட உள்ளடக்கங்கள் தமக்கு ‘பேரிடியாக’ அமைந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறியிருந்தனர்.
2009 இற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள், மனிதநேயச் சட்ட மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று அமெரிக்காவினால் தீர்மானமொன்று முதன்முதலாக கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதன் மூலம், இலங்கைக்கு தண்டனை பெற்றுத்தரும் ஒரு தளமாக ஐநா மனித உரிமைகள் பேரவையை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் காட்டிவிட்டதாக ஒரு விமர்சனம் உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட, நீதியை எதிர்பார்த்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு அமர்வும் தீர்ப்பு அளிக்கப்படும் ‘நடுவம்’ என்ற எதிர்பார்ப்புக்கள் தான் நாளுக்கு நாள் அதிகரித்தன.
வல்லாதிக்க நாடுகளின் ‘பூகோள அரசியல் நலன்களை’ கடந்து மனித உரிமைகள் பேரவை அணுவளவும் அசையாது என்பதையும் ‘இறைமையின்’ பெயரால் எதற்குமே வரையறை உள்ளது என்பதையும் பாதிக்கப்பட்ட தரப்பு தற்போது வரையில் உணராதிருப்பது துரதிஷ்டம் தான்.
எதிர்பார்ப்புகள்
இந்தப் பின்னணியில் இம்முறை 46ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு ஓரிரு மாதங்கள் முன்னதாகவே இந்த அமர்வின் மீது பலத்த எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது.
இறுதிப் போரினை முன்னெடுத்த ராஜபக்ஷ சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியுள்ளமையும், அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பிராந்திய, சர்வதேச தரப்புக்களுடன் கொண்டிருந்த முரண்நகைகளும் ஐநாவின் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தினைச் செலுத்தும் என்றே கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.
அதற்கு அடுத்தபடியாக, தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புக்களும் சில சிவில் அமைப்புக்களும், மதத்தலைவர்களும், புத்திஜீவிகளும் ஒன்றிணைந்தனர்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்குள் தொடர்ந்தும் வைத்திருக்காது, அதனை மீண்டும் ஐநா பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைப்பதென்றும், அவரை பொதுச் சபையில் தீர்மானம் எடுத்து பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோருவதென்றும் அவர்கள் இணக்கப்பாட்டை எட்டினர்.
அத்தோடு, இலங்கையில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் சாட்சியங்களை சேகரித்து வைப்பதற்கு சிரியாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை’ (IIIM) போன்றதொரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு மனித உரிமைகள் ஆணையரையும், உறுப்பு நாடுகளையும் கோருவதென்றும் அவர்கள் தீர்மானித்தனர்.
இதற்கு அமைவாக ஆணையர் மிஷேல் பச்சலெட் அம்மையாருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் மேற்கண்ட விடயங்களை உள்ளடக்கிய எழுத்துமூலமான கோரிக்கை கடிதமொன்றை தமிழ்த் தலைவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று பல்வேறு அணிகளாக பிளவுபட்டு நிற்கும் புலம்பெயர் அமைப்புக்களும் தங்களது இயலுமைகளுக்கு அமைவாக ஜெனிவாவில் தமது பங்களிப்பினைச் செய்தன.
அதேநேரம், பச்சலெட் அம்மையாரும் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கையை ‘அதியுச்ச நிலைக்கு’ கொண்டு சென்றிருந்தார்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லுதல், அவ்வாறு முடியாது விட்டால் குற்றமிழைத்த தனிநபர்கள் தொடர்பில் ஒவ்வொரு நாடுகளிலும் வழக்கு தொடரப்பட்டு பயணத்தடைகளை ஏற்படுத்தல், சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட விடயங்களை பரிந்துரைத்தார்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் ஒருவர் இவ்வாறான ‘அதியுச்ச’ பரிந்துரைகளை முன்வைப்பது இதுவே முதல் தடவையாகும். அதுவும் இலங்கை விடயத்தில் இவ்வாறான நிலைப்பாட்டை ஆணையர் ஒருவர் பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் முதற் சந்தர்ப்பமாக இருந்தது.
அதேநேரம், பேரவையின் 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களை நிராகரிப்பதாகவும், ஆணையரின் மீளாய்வு அறிக்கையை அடியோடு மறுதலிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
இவ்விதமான நிலைமைகளால், தமிழ் மக்களுக்கு இம்முறை கூட்டத்தொடரின் மீதான எதிர்பார்ப்புக்கள் மிகுந்த உயர்மட்டத்திலேயே இருந்தன.
‘பூச்சிய வரைவு’
ஆனால் பிரித்தானியா தலைமையிலான இணை-அனுசரணை நாடுகளால் வெளியிடப்பட்ட ‘பூச்சிய வரைவு’ அனைத்தையும் சிதைத்திருந்தது.
அதில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் அரசியல் கூட்டணிகள், சிவில், மத தரப்பினரால் கோரப்பட்டதைப் போன்று ‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதென்றோ, விசேட விசாரணைப் பொறிமுறையை அமைப்பதென்றோ காணப்பட்டிருக்கவில்லை.
அவ்வளவு ஏன், தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்ட தரப்பினர் என்பது கூட இருக்கவில்லை.
மேலும், கடந்த காலங்களில் வெளியான தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில் ‘கணிசமான’ அளவில் நீர்த்துப்போன விடயங்களை உள்ளடக்கியதாகவே இது இருந்தது.
குறிப்பாக கூறுவதனால், இறுதிப்போரில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பான அம்சங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள், சட்டவிரோதச் செயற்பாடுகள், கட்டாய உடல் தகனம் என்று விடயப் பரப்புக்கள் மாற்றமடைந்திருந்தன.
இதனால், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் மீது எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்த மக்கள் அதிருப்தி கொண்டனர்; தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. உண்ணா நோன்பு போராட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் என்று போராட்டங்களின் வடிவங்கள் மாற்றடைந்தாலும், பல்வேறு தடைகளைக் கடந்து அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய அரசியல் கூட்டணிகளும் கைகளை விரித்துள்ளன. குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் ‘பூச்சிய வரைவினை’ கடுமையாக விமர்சித்தன. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையையும், அந்த வரைவினை தயாரித்த நாடுகளையும் விமர்சித்தன.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘பூச்சிய வரைவில்’ உள்ள அனைத்து விடயங்களுக்கும் பொருள் விளக்கம் செய்து அதனை வரவேற்றிருந்தது.
இதனிடையே, ஒன்றுபட்டு எழுத்துமூலம் ஆவணம் அனுப்பிய மூன்று கூட்டணிகளுக்குள் மீண்டும் குழப்பம் வெடித்தது. ஒன்றையொன்று பொதுவெளியில் விமர்சித்தன.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோவும், புளொட்டும் தமிழரசுக் கட்சியை கண்டித்தன.
இப்பொழுது பாதிக்கப்பட்ட மக்களிடத்தில், ‘பூச்சிய வரைவு’ மோசமடைவதற்கு அவை தான் காரணம், இவை தான் காரணம் என்று மூன்று தமிழ்க் கூட்டுக்களும் தனித்தனியாக சென்று விளக்கங்களை அள்ளி வழங்கி வருகின்றன.
அத்துடன் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இவ்விதமான பிரேரணை ஒன்றையே அதிகபட்சமாக கொண்டு வந்து இலங்கை விவகாரத்தினை சர்வதேச தளமொன்றில் வைத்திருக்க முடியும் என்றும் அர்த்தம் கற்பித்து வருகின்றன.
இக்கால கட்டத்தில் தான், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரதான அமர்வுகளுக்கு அப்பால் நடைபெற்ற முறைசார கூட்டங்களில் ‘பூச்சிய’ வரைவு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
பேரவையில் சமர்ப்பிக்கப்படும் ‘பூச்சிய’ வரைவுகள் அதனை தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ‘வலுக்குறைப்புச்’ செய்யப்படுவதே வழமையாகும். ஆனால் இம்முறை முதற்தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரைவு வலுவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவொரு சாதகமான முன்னேற்றம் தான்.
புதிய திருத்தங்கள்
‘பூச்சிய’ வரைவின் அவதானிப்புக்களின் ஆறாவது பந்தியில், ‘தகவல்களையும் சான்றுகளையும் திரட்டிப் பகுப்பாய்வு செய்து பாதுகாப்பதற்கும், பாரதூரமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றின் பொறுப்புக் கூறலுக்கான மூலோபாயங்களைத் தயாரிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உயிர்பிழைத்தோருக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கும், உரிய அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், மனித உரிமைகளுக்கான ஆணையரின் அலுவலகத்தின் வல்லமையை பலப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பந்தியில் ‘மனித உரிமை மீறல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய, ஆதாரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து பாதுகாப்பதற்கு’ என்று திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது புதிதாக ‘சேகரித்தல்’ என்ற பதம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆதாரங்களை மேலும் திரட்டிக் கொள்வதற்கான எல்லையை விரிவடையச்செய்துள்ளது.
ஆரம்பத்தில் இந்தத் திருத்தத்தினை மேற்கொள்வதில் இழுபறியான நிலைமைகளே காணப்பட்டன. ஏனெனில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் சாட்சியங்களை புதிதாக சேகரிப்பதற்கும் அதற்கான கட்டமைப்புக்களைச் செய்வதற்கும் நிதித்தேவை இருந்தது. அந்த நிதியைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் காணப்படுவதாகவே கூறப்பட்டு வந்தது.
எனினும் அவுஸ்திரேலியா இந்தச் செயற்பாட்டிற்கு தேவையான 2 மில்லியன் டொலர்கள் வரையிலான நிதியை வழங்குவதற்கு முன்வந்ததையடுத்து அந்தத் திருத்தம் இறுதி செய்யப்பட்டது.
அதனடிப்படையில் சாட்சியங்களை திரட்டுவதற்காக 6 முதல் 10 பேர் கொண்ட கட்டமைப்பொன்று ஆணையரால் நியமிக்கப்பட முடியும் என்பதோடு அதில் சட்டத்தரணிகள், ஆய்வாளர்கள், தகவல் முகாமை வல்லுனர்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உள்ளடக்கப்படவுள்ளனர்.
அதேநேரம் இதே பந்தியில் ‘மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ‘மனித உரிமை மீறல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குற்றங்கள்’ என்ற சொற்தொடர் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாஸாக்களை கட்டாயத் தகனம் தொடர்பான விடயத்தை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கமும், நட்பு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. அந்த விடயம் தொடர்ந்தும் வரைவில் காணப்படுகின்றது.
பூச்சிய வரைவின் 7ஆவது அவதானிப்பு பந்தி ‘இலங்கை அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, ஜனநாயக ஆட்சி, முக்கிய அமைப்புக்களின் செயற்பாடுகள் மீது சுதந்திரமான மேற்பார்வை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
இப்பந்தியில் ‘அதிகாரப் பகிர்வு’ தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுமாறும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதன் மூலமும், அனைத்து மாகாண சபைகளும் 13 ஆவது திருத்தத்தின்படி திறம்பட செயற்பட முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலமும், ‘உள்ளாட்சி நிர்வாகத்தை மதிக்க வேண்டும்’ என்றும் இலங்கை அரசிடம் கோரப்பட்டுள்ளது. அத்துடன் ‘வடக்கு மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு’ என்றும் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் நல்லிணக்கம், மோசமான மனித உரிமை மீறல்களுக்கான நீதியை அடைவது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம், வாய்மொழி அறிக்கையையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எழுத்து மூலமான அறிக்கையையும் ஆணையர் சமர்ப்பிக்க வேண்டும்; அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆணையாளர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் ‘ஒப்பீட்டளவில்’ முன்னேற்றமானவை தான். ஆனால் அத்திருத்தங்களை சற்றே ஆழமாக பார்த்தால் அவற்றின் பின்னால் பிராந்திய தலைமைத்துவ நலனில் அக்கறை காட்டும் இந்தியாவினதும், பூகோள வல்லாதிக்க நோக்கில் உள்ள அமெரிக்காவினதும் தலையீடுகளே இருக்கின்றன. ஆகவே பிராந்திய, வல்லாதிக்க நாடுகளின் ‘நலன்களே’ அத்திருத்தங்களின் பின்னால் ஒழிந்திருக்கின்றன.
இவ்வாறான நிலையில், இத்தகைய திருத்தங்களுடனான பிரேரணை மீதே எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பின்போது, தம்மால் வெற்றி பெறமுடியாது என்பதை இலங்கை அரசாங்கம் ஒருவாரத்திற்கு முன்னதாகவே ஏற்றுக்கொண்டு விட்டது. வெளியுறவு அமைச்சின் செயலார் அட்மிரல் கொலம்பகே அதனை பகிரங்கமாக கூறிவிட்டார்.
இந்நிலையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 10 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 10 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களிக்கவுள்ளன.
எஞ்சியுள்ள 17 நாடுகள் வாக்களிப்பின் போது நடுநிலை வகிக்கவுள்ளன. இந்த வகைக்குள்ளே இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகியன இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அந்த தீர்மானத்தினை அடியோடு நிராகரிப்பதென்றே இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தத் தீர்மானத்தினையும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் கொலம்பகே உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
ஐநா வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் தீர்மானத்துடன் சம்பந்தப்பட்ட நாடு அதனை நிராகரித்தால் நடக்கப்போவது என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கப்போகும் பதில்கள் என்ன? சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அதிகரிக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஆணையரின் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோதும், இலங்கை பற்றிய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டபோதும் ஜப்பான் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டியிருந்தது.
எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பொறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் அதனுடன் தொடர்புடைய நாடானது அவற்றை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வெறுமனே காலமும், நிதியும் மட்டுமே விரயமாகும் என்று கூறியுள்ளது ஜப்பான்.
ஜப்பானின் கருத்து பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் சிலவேளை இலங்கை அரசாங்கத்துடன் ஐநா மனித உரிமைகள் பேரவை இணங்கிச் செல்ல வேண்டும் என்பதை அடியொற்றியதாக இருக்கலாம்.
ஆனால் அதில் பொதிந்துள்ள யதார்த்தத்தினை புரிந்து கொள்வதன் மூலம் ஐநா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்திய அளவுக்கு அதிகமான ஏமாற்றங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.