January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லண்டனில் அம்பிகைக்கு ஆதரவாக திரளும் தமிழர்கள்; போராட்டம் நடத்தியோரை கலைத்த காவல்துறையினர்!

இலங்கை மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக அவரது வீட்டுக்கு அருகே வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்துள்ளனர்.

லண்டன் ஹரோ- கென்டன் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கானவர்களை காவல்துறையினர் கலைக்க முற்பட்டபோது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகவும் இதன்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஒருவர் காயமடைந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் கூறினர்.

அம்பிகை செல்வக்குமாரின் “சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்” 16 நாட்களை கடந்துள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரின் அருகில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் அம்பிகையின் கோரிக்கைகளுக்கு பிரிட்டிஷ் அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும் எனக்கோரி பெருமளவிலான தமிழர்களும் சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களும் அவரது வீட்டின் அருகே கூடி வருகின்றனர்.

அம்பிகை செல்வக்குமாரின் போராட்டத்திற்கு இலங்கை மற்றும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் தமிழ்த் தேசிய ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையிலும் அவரது கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

பிரிட்டனிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.