January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதி பாதுகாப்பு டி-20 உலகத் தொடர்: இலங்கை லெஜண்ட்ஸ் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது

Photo: Twitter/ Road Safety World Series 

வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும், வீதி பாதுகாப்பு உலக டி-20 தொடரில், தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை லெஜன்ட்ஸ் அணி அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

ராய்ப்பூரில் உள்ள சாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று  இரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணி, தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி, களமிறங்கிய தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு, இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

ஆரம்பத்திலிருந்து நெருக்கடியை சந்தித்த தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாபிரிக்க அணிசார்பாக அதிகபட்சமாக என்ரு புட்டிக் மாத்திரம் 39 ஓட்டங்களை அதிபட்சமாக எடுத்தார்.

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், நுவன் குலசேகர, சனத் ஜயசூரிய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அஜந்த மெண்டிஸ், திலகரட்ன டில்ஷான் மற்றும் தம்மிக பிரசாத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த 90 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 13.2 ஓவர்கள் நிறைவில், ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சனத் ஜயசூரிய மாத்திரம் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், அணித் தலைவர் திலகரட்ன டில்ஷான் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

திலகரட்ன டில்ஷான் அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, உபுல் தரங்க 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணி சார்பில் கார்னெட் க்ரூகர் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை திலகரட்ன டில்ஷான் தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை லெஜன்ட்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இந்திய அணியை சமப்படுத்தி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அதேநேரம், இலங்கை லெஜன்ட்ஸ் அணி அடுத்தப்போட்டியில் பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணியை நாளை எதிர்கொள்ளவுள்ளது.