January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா 46: ‘இலவுகாத்த கிளிகளா’ பாதிக்கப்பட்டத் தரப்பினர்?- சிறப்புக் கட்டுரை

-யோகி

‘உலகம் முழுவதும் சிறுபான்மை சமூகங்களின் கலாசார மற்றும் மத அடையாளங்களை அழிக்க முற்படும் செயற்பாடுகளை அவதானிக்கின்றோம். சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்’ என்ற ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரெஸின் கூற்றுடன் ஆரம்பமானது ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுகின்றது.

பிரித்தானியா தலைமையில் கனடா, ஜெர்மனி, வடக்கு மசிடோனியா, மொன்டனீக்ரோ, மலாவி ஆகிய நாடுகளின் இணை-அனுசரணையுடன் அந்தப் பிரேரணை வருகின்றது.

அத்தோடு இலங்கையின் பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பச்சலெட் அம்மையார் மிகக் கடுமையாகவே கருத்து வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இலங்கையின் பொறுப்புக்கூறலைச் செய்விப்பதற்காக முதலாவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுதல், இரண்டாவதாக உறுப்பு நாடுகள் எல்லைகள் கடந்த- உலகம் தழுவிய நியாயாதிக்கத்தின் கீழ் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் சர்வதேச குற்றச் செயல்கள் தொடர்பாக புலன் விசாரணைகளையும் வழக்குகளையும் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை முன்மொழிந்திருக்கின்றார்.

அன்டோனியோ குத்தரெஸ்

இலங்கை விவகாரம் ஐநா மனித உரிமைகள் அரங்கிற்கு சென்று ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கை தொடர்பிலான தனது மீளாய்வு அறிக்கையில் மிகவும் காட்டமாக கூறியுள்ள அதியுச்ச பரிந்துரைகள் இவையாகத்தான் உள்ளன.

இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னரான விளைவுகள், இலங்கை ஆட்சியாளர்களுக்கும்- பிராந்தியத் தலைமை நாடாகக் கருதப்படும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள கீறல்கள், உலகை ஆளத்துடிக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இலங்கைத் தீவை மையப்படுத்தி ஏற்பட்டுள்ள ஆதிக்கப் போட்டி – இவ்வாறான பின்னணியில் தான் பச்சலெட் அம்மையாரின் அறிக்கை வந்துள்ளது.

அதனை விடவும், சிலியின் முன்னாள் அதிபரான பச்சலெட் அம்மையாரின் சொந்த பின்புலம்; இராணுவத்தின் துன்புறுத்தல்களுக்கு தனது தந்தையை பலிகொடுத்தவர்.

சர்வாதிகாரத்தின் அதியுச்ச மிலேச்சத்தனத்தை அனுபவித்தவர். இயல்பாகவே அவரிடத்தில் அவ்விதமான கொடூரங்களுக்கு எதிராக குரல்கொடுக்கும் மனோபாவத்தை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக் காரணமும் இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை வலுவாவதற்கு காரணமாக இருக்கின்றது.

இலங்கையின் பதில்

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் (மைத்திரி-ரணில் ஆட்சி) அனுசரணையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் மாதமே தற்போதைய ராஜபக்ஷக்களின் அரசாங்கம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில் வெளியான பச்சலெட் அம்மையாரின் இவ்விதமான அறிக்கையையும் இலங்கை உடனடியாகவே நிராகரித்துவிட்டது.

மனித உரிமைகள் பேரவையின் மீதும் ஆணையர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது இலங்கை.  உள்ளகப் பொறிமுறையை முன்னிலைப்படுத்தும் தனது 18-பக்க பதிலறிக்கையை அனுப்பியிருக்கின்றது இலங்கை.

அதுமட்டுமன்றி, இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற தீர்மானத்தை முழுமையாக நிராகரிக்குமாறும் சக உறுப்பு நாடுகளைக் கோரியுள்ள இலங்கை அரசாங்கம், உள்ளகப் பொறிமுறையில் தனது செயற்பாடுகளை விபரிக்கும் வகையில் புதிய தீர்மானமொன்றை ஐநாவில் சமர்ப்பித்து நிறைவேற்றுவது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

2009 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை, இலங்கை அப்போதிருந்த ஐநாவுக்கான தனது வதிவிடப்பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலகவின் பிரசாரத்தின் மூலம் தோற்கடித்திருந்தது.

ஐநா மனித உரிமைகள் அரங்கில் சுயமாக புதிய பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான முன் அனுபவம் எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.

ஆனாலும் சீனா, ரஷ்யாவின் துணையால் அதனை தன்னால் சாதிக்க முடியும் என்ற மனோநிலையில் இலங்கை அசராங்கம் இம்முறை இருக்கின்றது.

இதனைவிடவும், இம்முறை பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து நேரடி சாட்சியங்களோ, அத்தரப்பின் பிரதிநிதிகளோ நேரடியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்றமை தமக்கு சாதகமாக அமையும் என்றும் கணக்குப் போட்டியிருக்கின்றது இலங்கை.

ஏற்கனவே உலகின் சக்திவாய்ந்த நாடுகளுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கம், ஐநா மனித உரிமைகள் பேரவையின் இணை-அனுசரணை நாடுகள், ஆணையாளர், அவரது அலுவலகம் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சர்வதேச தரப்புக்களுடனும் ஏக நேரத்தில் முரண்பாடுகளை அதிகளவில் வளர்த்துள்ளது.

இவ்விதமான நிலைமையானது, நீதிகோரும் தரப்பான தமிழர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பது பலரதும் கணிப்பாக இருந்தது.

ஐநா மனித உரிமைகள் பேரவை விடயத்தினை கையாள்வதற்கு தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய பிரதான அரசியல் அணிகள்  ஒன்று பட்டிருந்தன. அவற்றுடன் சிவில் அமைப்புக்களும் மதத் தலைவர்களும் கைகோர்த்திருந்தனர்.

அவர்கள், ‘இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு மீண்டும் அனுப்புதல், அங்கிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தல். சாட்சியங்களை திரட்டுவதற்காக சிரியாவை மையப்படுத்திய பொறிமுறை போல் ஒருவருட அவகாசத்தை வழங்குதல், இலங்கையில் சிறப்பு ஐநா கண்காணிப்பகத்தை நிறுவுதல்’ ஆகிய கோரிக்கைகளை ஐநா உறுப்பு நாடுகளின் ஐநாவுக்கான தூதுவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இத்தகைய சூழல்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட நீதிகேரும் தரப்பினருக்கு வழமைக்கு மாறான எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தன.

‘பூச்சிய வரைவு’

கடந்த காலங்களில் ஐநா மனித உரிமைகள் அரங்கினை தண்டனை பெற்றுத்தரும் நீதிமன்றமாக காட்டும் பிம்பம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை விடயத்தில் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவை மீது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அதிருப்தியும் கடுமையான விமர்சனங்களும் உள்ளன.

ஆனால் இம்முறை அவ்விதமான மாயைத் தோற்றங்கள் களையப்பட்ட நிலையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அதிகார வரையறைகள் என்ன என்பதை பாதிக்கப்பட்ட தரப்பினர் வெகுவாகவே உணர்ந்துள்ளதாகவே தெரிகின்றது.

இருப்பினும் தமக்கான நீதி செயற்பாட்டிற்கான அடித்தளம் இம்முறை மனித உரிமைகள் பேரவையின் அமர்விலிருந்து ஆரம்பமாகும் என்ற எண்ணம் அவர்களிடம் அதியுச்சமாகவே ஏற்பட்டிருந்தது.

ஆனால் அத்தனை எதிர்பார்ப்புக்களையும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் ‘பூச்சிய வரைவு’ சிதறடித்துவிட்டது என்ற விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட தரப்பின் நீதிக்கான எதிர்பார்ப்புக்கள் ‘கானல் நீராகிவிட்டதாக’ சிலர் கூறியுள்ளனர்.

இதுகால வரையிலும் ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தலை’ மையப்படுத்தி நிறைவேற்றப்பட்ட 19/02 தீர்மானம், மார்ச் 2013 இலும் மார்ச் 2014 இலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மேலும் ஒக்டோபர் 2015, மார்ச் 2017 மற்றும் மார்ச் 2019 ஆகிய இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இம்முறை தீர்மானத்தின் முன்வரைவானது (‘பூச்சிய வரைவானது’) மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக, இந்த பூச்சிய வரையில் எங்குமே இறுதி யுத்தத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டத் தரப்பைக் குறிக்க ‘தமிழ் அல்லது தமிழர்கள்’ என்ற வார்த்தைகளே பயன்படுத்தப்படவில்லை.

‘தமிழினத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவர்களின் உரிமைகள் மீறப்பட்டன, குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன’ என்பது உள்ளிட்ட எந்த விடயங்களுமே சுட்டிக்காட்டப்பிவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டத் தரப்பை சார்ந்தவர்கள்.

இனப்படுகொலை, சித்திரவதைகள், சட்டம்-ஒழுங்கு மீறப்படுத்தல், பக்கச்சார்பான நீதி, ஜனநாயக மறுதலிப்பு, உரிமைகள் பறிக்கப்படுதல் உள்ளிட்ட எந்தவொரு விடயங்களும் பிரத்தியேகமாக சுட்டிக்காட்டப்படவில்லை என்ற கவலைகளும் எழுந்துள்ளன.

பொதுப்படையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றே காண்பிக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நிராகரிக்கப்பட்ட ‘காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறியவது பற்றிய அலுவலகம்’ ஸ்தாபிக்கப்பட்டமை வரவேற்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை வலிந்து எரியூட்டுவதற்கு மட்டுமே நேரடியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரவுள்ள பிரேரணையின் ‘பூச்சிய வரைவே’ இவ்விதமான உள்ளடக்கங்களை கொண்டிருக்குமாயின் இறுதித் தீர்மானம் இதனை விட மேம்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் கடந்த கால பட்டறிவு அவ்வாறு தான் உள்ளது.

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட ‘பூச்சிய வரைவுகள்’ எவையுமே அதிலிருந்து மேம்பட்டவையாக இருந்திருக்கவில்லை.

முன்வைக்கப்பட்ட பூச்சிய வரைவின் உள்ளடக்கங்கள் கலந்துரையாடல்களின் அடிப்படையில் ‘வலுக்குறைப்புச்’ செய்யப்படுவதே வழமை. குறிப்பாக உறுப்பு நாடுகளின் அனுசரணைகளைப் பெறுவதற்கு முனையும்போது அவ்விதமான நிலைமைகள் ஏற்படுவது இயல்பாகவும் இருக்கின்றது.

இதனால் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்தப் பூச்சிய அறிக்கை மீதான தங்களின் கடுமையான அதிருப்தியை பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் ‘மதில்மேல் பூனையாகவே’ உள்ளது.

அதிலும், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்ட சி.வி.விக்னேஸ்வரன் இத்தகைய வரைவில் இறுதி வடிவத்தினை ஊகித்தவராக, ‘இத்தகைய வரைவொன்றை இணை-அனுசரணை நாடுகள் தயாரித்தமைக்காக வெட்கித் தலை குனிய வேண்டும்’ என்று காட்டமான கருத்தினை பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டார்.

அதேநேரம், தமது அன்புக்குரியவர்களை தேடிப் போராடிக்கொண்டிருக்கும் உறவுகள் இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (21-02-2021) கிளிநொச்சியில் நடத்திய போராட்டத்தின் போது இந்த பூச்சிய வரைவின் மீதான தமது ஏமாற்றத்தினை பதிவு செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் தர்ம சங்கடம்

வடக்கு-கிழக்கில் உள்ள தரப்புக்களும் சரி, புலம்பெயர் தரப்புக்களும் சரி பூச்சிய வரைவு குறித்த தமது அதிருப்பதிகளை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன.

இதனால், இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை தலைமையேற்றுக் கொண்டுவரவுள்ள பிரித்தானியாவுக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த திங்கட்கிழமை (22-02-2021) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியேரை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் சந்தித்திருக்கின்றார்.

அதன்போது, ‘இலங்கைக்கு எதிரான பிரேரணையில் தாம் வெற்றி கொள்வோம். அந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம்’ என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கூறியிருக்கின்றார். ஆனால் வெளியாகியுள்ள பூச்சிய வரைவின் உள்ளடக்கம் பற்றி அவர் எதுவும் வாய்ந்திறந்ததாக தகவல்கள் இல்லை.

இவ்வாறான நிலைமையானது, இலங்கை மீதான புதிய பிரேரரணை வெறுமனே பெயரளவில் மட்டுமே இருக்குமா என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, பிரித்தானியாவுக்கு கூட புதிய பிரேரணையொன்றை இம்முறை நிறைவேற்றுவது சவாலான விடயமாகவே உள்ளது.

ஏனென்றால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர் முதன் முதலாக சர்வதேச அரங்கில் தனியாக செயற்படுகின்றது. குறிப்பாக இலங்கை விடயத்தில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருகின்றது.

அவ்வாறு கொண்டு வரப்படும் பிரேரணையானது தோல்வி அடைந்துவிடக்கூடாது என்பதில் அந்நாடு அதீத அக்கறையை நிச்சயம் கொண்டிருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரேரணைக்கு ஆதரவளித்தாலும், கடந்த காலத்தினைப் போன்று பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் இருந்த ‘பிணைப்பு’ மிக்க செயற்பாடுகள் குறைவாகத்தான் இருக்கும்.

ஆகவே சர்வதேச அரங்கில் தனி நாடாக முன்னெடுக்கும் முதல் முயற்சியொன்று தோற்றுப் போய்விடக் கூடாது என்பதில் பிரித்தானியா மிகக் கவனமாகவே இருக்கும்.

வல்லாதிக்க நாடென்ற வகையில் அதற்குள்ள இயற்கையான சுபாபமும் அதுதான்.

இலங்கை மீதான பிரேரணை வலுவானதாக இருக்க வேண்டும் என்பதை விடவும் தான் கொண்டுவந்த பிரேரரணை இத்தனை அதிக வாக்குகளால் நிறைவேறியது என்று மார்தட்டிக் கொள்வதற்கு பிரித்தானியாவும் முனையும்.

பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் இலங்கை மீதான பிரேரணை ஒரு ‘கௌரவம் சார் அம்சமாகும்’ . ஆனால் அது தமது நீதிக்கான போராட்டம் என்கின்றனர் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள்.

எனினும், இறுதித் தீர்மானம் வெளியாகும் வரையிலும், அது வெளியான பின்னரும், பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியை எதிர்பார்த்து ஏக்கங்களோடு  காத்திருப்பார்கள் என்பது உறுதி.

தமக்காகக் குரல் கொடுக்கும் உலக சக்திகள் பூகோள அரசியல் நலன்களை கடந்து தமக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதும் அதற்கான அழுத்தங்களை உள்ளூர் மற்றும் புலம்பெயர் பிரதிநிதிகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பதுமே பாதிக்கப்பட்டத் தரப்பின் கோரிக்கை.