photo: society of editors.org
– வேதநாயகம் தபேந்திரன்
சலூன் என்றவுடன் தலைமுடி வெட்டுதல், “சேவ்” எடுத்தல் போன்றவை தான் எமது நினைவுக்கு வரும். ஆனால் வாசிப்புப் பழக்கம் அதிகம் இருந்த காலத்தில் சலூன்கள் அவற்றுக்கு உயர்வான பங்களிப்பை வழங்கின.
முன்னைய காலங்களில் நாளாந்தம் பத்திரிகையை வாங்கும் வசதி பலருக்கு இருக்கவில்லை. இதனால் பத்திரிகைகளை நாளாந்தம் வாங்கும் சலூன்களுக்கு பேப்பர் பார்ப்பதற்கென ஒரு கூட்டம் போகும்.
சிகை அலங்ககாரத்துக்கென வந்து தனது முறை வரும் வரை காத்திருக்கும் வாடிக்கையாளரது நேரத்தைப் பயனுள்ளதாக்கப் பத்திரிகைகள்,சஞ்சிகைகள் உதவின.
1950, 1960 களில் சலூன் எனப்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்கள் யாழ். குடாநாட்டில் பரவலாக ஆரம்பிக்கப்பட்டன.
1960 களின் முற்பகுதியில் சாதிப் பாகுபாடுகளுக்கெதிரான போராட்டங்கள் உச்சம் பெற்ற போது வீடுகளுக்குச் சென்று தலைமுடி வெட்டுதல், சவரம் எடுத்தல் போன்ற குடிமை முறைமை ஒழிக்கப்பட்டது.
அப்போது சலூன் அமைப்பு நிறுவனமயப்பட்டு ஒரு புது வணிக அமைப்பாக உருவாகியது. அக் காலத்தின் சலூன்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகை, கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி, தினபதி, தினபதியின் வாரமலர் சிந்தாமணி போன்ற பத்திரிகைகள் இருக்கும்.
அது போலத் தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு போன்ற சஞ்சிகைகளும் வாசிப்புக்கென வைக்கப்பட்டிருக்கும்.
சில சலூன் உரிமையாளர்கள் தமது கடைகளுக்கு அதிக வாடிக்கையாளரைக் கவர்வதற்காக பத்திரிகைகள், சஞ்சிகைகளை வைத்திருப்பதனை ஒரு உத்தியாகப் பயன்படுத்தினார்கள்.
பத்திரிகை, சஞ்சிகைகள் வாசித்து ருசிப்பட்டோர் தலைமுடி வெட்டாத நாட்களிலும் அவற்றை வாசிப்பதற்காகச் சலூன்களுக்கு வரத் தொடங்கினார்கள்.
வாசிப்பதுடன் மட்டுமல்லாது ஆக்கபூர்வமான கருத்தாடல்களைச் செய்யத் தொடங்கினார்கள்.
எமது நாட்டின் கட்சி அரசியல், சீனக் கம்யூனிஸம், ரஸ்யக் கம்யூனிஸம், தமிழக அரசியல், இந்திய அரசியல், சினிமாப் படக் கதைகள் மட்டுமல்ல ஊரின் விடுப்புகளும் கூட அலசப்படும்.
பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்களைக் கூட வாசித்து ஒரு அலசு அலசுவார்கள்.
சஞ்சிகைகளில், வார மலர்ப் பத்திரிகைகளில் வெளிவரும் தொடர் கதைகளை வாசிப்பதற்காக பலர் வருவார்கள்.
பல இடங்களில் சலூன்கள் ஒரு மினி நூலகமாகவே இயங்கின. இதனால் சலூனில் முடிவெட்டும் தொழிலாளிக்கும் வாடிக்கையாளருக்குமான சினேகபூர்வ உறவு ஒன்று இருந்தது.
இக் காலத்தைப் போல அக் காலத்துச் சலூன்கள் பெருமளவு அழகூட்டப்பட்டதாக இருக்கவில்லை.
ஏன் நிறையச் சலூன்கள் மின்சாரத்தைக் கூட எட்டிப் பார்க்கவில்லை. அதனால் சலூன்கள் பகல் நேரத்திலேயே களை கட்டும்.
சலூன்களது ஆதரவினால் பல சிற்றிதழ்கள் வெளிவர முடிந்தது. “சவரச்சாலையை சர்வகலாசாலை ஆக்கினேன் ” என மல்லிகை ஆசிரியர் அமரர் டொமினிக் ஜீவா கூறியிருந்தார்.
சலூன் உரிமையாளரின் மகனாக, பொருளாதாரப் பின்புலங்கள் எதுவுமற்ற நிலையில் மல்லிகையை ஒரு இலக்கிய சஞ்சிகையாக உருவாக்கினார் ஜீவா. யாழ் நகர் கஸ்தூரியார் வீதியில் இருந்த தனது சலூனில் மல்லிகையைக் கம்பீரமாகத் தூக்கி விடுவார்.
தனது சைக்கிளில் மல்லிகை சஞ்சிகைகளை ஒவ்வொரு சலூன்களுக்கும், புத்தகச்சாலைகளுக்கும், இலக்கிய நிகழ்வுகளுக்கும் எடுத்துச் சென்றார். அறிமுகம் செய்து விற்றார்.
யாழ்நகர் பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஒரு இடதுசாரியாக இருந்தமையால் டொமினிக் ஜீவாவின் மல்லிகைக்கு ஆதரவு தந்தார்.
இதனால் ஜீவா மல்லிகையை இடை விடாமல் மலரச் செய்தார்.
சலூன்களுக்கும் யாழ்ப்பாணத்தின் வாசிப்புப் பண்பாட்டிற்குமான ஆழமான உறவு இன்று அற்றுப் போய் விட்டது. இது ஆராய்ந்து ஆவணப்படுத்தப்பட வேண்டியவற்றில் ஒன்று.