January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிழக்கு முனையத்தில்’ பறிபோகும் இந்தியாவின் ‘கௌரவம்’: சிறப்புக் கட்டுரை

-யோகி

‘கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் சம்பந்தமாக அமைச்சரவையில் எடுத்த முடிவினை ஒருபோதும் மாற்றிக்கொள்ளும் எண்ணமில்லை’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பகிரங்கமாக கூறியிருக்கின்றார்.

எனினும் ‘இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழாகவே இயங்கவுள்ளது. எங்கள் நாட்டின் உள்ளக நிலைமைகளையும் மக்களின் மனோநிலையையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களின் கோரிக்கைகளை நெகிழ்வுத் தன்மையுடன் மீளாய்வு செய்யுங்கள்.

மேற்கு கொள்கலன் முனையத்தின் 85 சதவீதமான உரிமத்தையும் உங்களுக்கே நாங்கள் வழங்குவதற்கு தீர்மானித்திருகின்றோம்’ என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருப்பதாக விஜேராம தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ‘கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய தீர்மானத்தில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. அதுபற்றிய நீண்ட பல கலந்துரையாடல்களின் பின்னரே  இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தயா  ரத்நாயக்க

ஆகவே அதனை மாற்றியமைக்க வேண்டியதில்லை. தொழிற் சங்கங்களும் இணங்கியுள்ள நிலையில் இப்பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வந்துவிட்டது’ என்று கூறுகின்றார் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க.

அத்துடன் அவர் ‘கிழக்கு முனையம் மட்டுமல்ல முழு கொழும்புத் துறைமுகமும் பிராந்திய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததும் இந்த விடயத்தில் இந்தியா தொடர்பு பட்டிருப்பதால் இராஜதந்திர ரீதியாக அவ்விடயம் கையாளப்பட வேண்டும் என்றும் அதனை ஜனாதிபதியும், பிரதமரும் முன்னெடுப்பார்கள்’ என்றும் கூறியிருக்கின்றார்.

ஆனால், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்னும் ‘ஏற்கனவே இணங்கிக் கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தினை அமுலாக்குங்கள்.

இலங்கை சர்வதேச ஒப்பந்தங்களுக்கு கொடுக்கும் மதிப்பினை நாங்கள் கரிசனையுடன் பார்க்கின்றோம்’ என்று அறிக்கைகளை அடுத்தடுத்து விடுத்துக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி, பிரதமரை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தனித்தனியாக சென்று சந்திக்கின்றார். பேச்சுக்களை நடத்துகின்றார்.

ஆனால் கடந்த காலங்களில் நடைபெற்ற சந்திப்புக்கள், பின்னர் வெளிவரும் புகைப்படங்களும் சொற்ப செய்திக் குறிப்புத் தகவல்களும் கூட இப்போது வெளிவருவதில்லை.

இந்திய உயர்ஸ்தானிகர் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதை விடவும், முன்னேற்றம் கூட அடையவில்லை என்பதையே இது வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்நிலையில் பிரதமர் மஹிந்தவினதும், ஜெனரல் தயா ரத்நாயக்கவினதும் கூற்றுக்கள் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் இலங்கை அதிகார சபையின் கீழ் தொடர்ந்தும் இருக்கும் என்பதையும், அது ஒருபோதும் இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது என்பதையும் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன.

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி இலங்கையின் அப்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இனி கணக்கில் எடுக்கப்படமாட்டாது என்பதையும் திடமாக கூறியுள்ளன.

இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைச்சர்களான விமல் வீரவங்ஸவும் உதய கம்மன்பிலவும் ‘அமைச்சரவையில் 95 சதவீதமானவர்கள் இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தினை வழங்குவதை விரும்பவில்லை’ என்று வெளியிட்டுள்ள கருத்துக்களும் காணப்படுகின்றன.

இலங்கை அரசாங்கத்தின் இவ்விதமான பகிரங்கமான வெளிப்பாடுகளின் பின்னரும்கூட, ‘கிழக்கு கொள்கலன் முனையம் தங்கள் கைவிட்டு முழுமையாகவே சென்றுவிட்டது’ என்பதை புரிந்துகொள்வதற்கோ ஏற்றுக்கொள்வதற்கோ கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் டெல்லியும் தயக்கம் காட்டிவருவது தான் வேடிக்கையாக உள்ளது.

காலதாமதம் செய்து, கவனத்தினை திசை திருப்பி கிழக்கு கொள்கலன் முனைய விடயத்தில் இலங்கை தம்மை ‘நன்றாகவே ஏமாற்றி’ விட்டது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா இன்னும் தயங்கி நிற்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

கிழக்கு கொள்கலன் முனைய விடயத்தில் இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவினை ஏற்கவும் முடியாத, நிராகரிக்கவும் முடியாத இரண்டும் கெட்டான் நிலைமை தான் இந்தியாவுக்கு உள்ளது.

ஏற்றுக்கொண்டால் பிராந்தியத்தில் தன் ‘சுயகௌரவம்’ என்னாவது என்று கவலைப்படும் இந்தியா, முரண்பட்டால் இலங்கை கைமீறி சீனா பக்கம் முழுமையாகவே சென்றுவிடும் என்றும் யோசிக்கிறது. அதனால் தான் ‘அழுத்தங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்’ என்ற தோற்றப்பட்டை வெளிப்பகட்டுக்கு காண்பித்துக் கொண்டிருக்கின்றது இந்தியா.

இலங்கை மீது தமது ‘பிடி’ இன்னமும் உள்ளது என்ற கருத்தியலை சிதறவிடாதிருப்பதற்கே முனைந்து கொண்டிருக்கின்றது இந்தியா.

கிழக்கு கொள்கலன் முனைய விடயத்தில் நிகழ்ந்த மற்றொரு விநோத நிகழ்வையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

இந்தியத் தரப்பை பொறுத்தவரையில் ஜனாதிபதி கோட்டாபயவை கையாள்வது கடினம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகின்றது.

இதனால் மாற்று உபாயமாக 10 வருடங்கள் தாம் கையாண்ட அனுபவங்களை நிறையவே கொண்டிருக்கும் நபரான பிரதமர் மஹிந்த ஊடாகவே அண்மைக்கால நகர்வுகளை செய்து வருகின்றது இந்தியா.

இதில் கிழக்கு முனைய விவகாரம் பிரதானமானது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய, கிழக்கு கொள்கலன் முனைய விடயத்தில் இணக்கபாடு எட்டியபடி 51 சதவீதத்தினை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு பகிரங்க மறுப்பினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவித்திருக்கவில்லை.

தொழிற்சங்கங்களுடான பேச்சுவார்த்தையின் போதும் இந்தியாவின் சார்பாகவே பேசியுள்ளார். அவரின் இந்திய சார்பான நிலைப்பாட்டுக் கருத்துக்களால் தான் கிழக்கு கொள்கலன் முனையத்தினை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்த 23 தொழிற்சங்கங்களுடான ஜனவரி 13 பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருந்தது.

கோட்டாபய அவ்விதமாக நடந்து கொண்டிருக்கின்றார் என்பதற்காக, அதனை கண்ணை மூடிக் கொண்டு நம்புவதற்கும் இல்லை.

ஏனெனில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவின் வெற்றிக்காக இதே துறைமுக தொழிற்சங்கங்கள் தான் செயற்பட்டிருந்தன. தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது எந்தவிதமான ‘பலப்பிரயோகமும்’ இன்றி சுதந்திரமாக செயற்பட இடமளித்திருக்கின்றார் ஜனாதிபதி.

ரத்துபஸ்வல சுதந்திர வலயத்தில் போராட்டம் நடத்தியவர்களை எவ்வாறு கோட்டாபய அடக்கினார் என்பதும், தற்போது பதவியில் அமர்ந்த பின்னர் போராட்டங்களை கொரோனா சட்டங்களைப் பயன்படுத்தி நீதிமன்ற தடை உத்தரவுகள் மூலம் கையாள்கின்ற விதமும் போராட்டங்கள் மீது அவருக்குள்ள ‘ஒவ்வாமையை’ வெளிப்படுத்துகின்றன.

அத்தகையவர், மிக முக்கியமான துறையான துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை நடத்துவதற்கு இடமளிப்பாரா என்ற கேள்வி எழுகின்றது.

மேலும் துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் அறிவிக்கப்பட்டபோது, உடனடியாக அவர் ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டியிருக்கின்றார்’ என்று தான் சொல்லப்படுகின்றது.

ஆனால் பிரதமர் மஹிந்தவோ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கையில் இருக்கும் போதே பாராளுமன்றத்தில் ‘கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது’ என்றார்.

அதன் பின்னர் ஜனவரி 31ஆம் திகதி 23 தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பிரதான கோரிக்கையான கிழக்கு முனையத்தினை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் வைத்திருக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு,  முனையத்தினை அபிவிருத்தி செய்வதற்கான சங்கங்களின் திட்ட வரைபினையும் இணங்கிப் பெற்றுக்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று பகிரங்கமாகவும் அறிவித்தார் பிரதமர் மஹிந்த.

இந்தியா, இலகுவாக கையாள முடியும் என்று கருதுகின்ற பிரதமர் மஹிந்தவே முழுமையான கிழக்கு கொள்கலன் முனையத்தினை வழங்க முடியாது என்று உத்தியோக பூர்வ அறிவிப்பை விடுத்தவராக இருக்கின்றார்.

இந்தியாவுடனான ஒப்பந்தத்தினை துக்கியெறிந்தவராக இருக்கின்றார் பிரதமர். ஒருவகையில் ‘தன்கையை வைத்து தன் கண்ணையே குற்றிக்கொண்ட நிலைமை தான்’ இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

வழமையாக இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக வாக்குறுதிகளை அள்ளிவழங்கும் பிரதமர் மஹிந்த இந்தியாவின் அடிமடியில் கைவைக்கும் வகையில் கிழக்கு முனைய ஒப்பந்த விடயத்தில் தீர்மானம் எடுத்திருக்கின்றார்.

‘2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் புலனாய்வு பிரிவான ‘றோ’வே தன்னை தோற்கடித்தது என்று தற்போது வரையில் வெகுவாக நம்பிக்கொண்டிருக்கின்றார் பிரதமர் மஹிந்த. ஆகவே கிழக்கு முனைய விடயத்தில் தனக்கு சாதகமாக ஏற்பட்ட சந்தர்ப்பத்தினை வைத்து இந்தியாவை ‘பழி’ தீர்த்திருக்கின்றார் என்ற வாதத்தையும் மறுப்பதற்கில்லை.

இந்தியாவுக்கு ஏமாற்றம் புதிதல்ல

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏமாற்றங்கள் புதியவை அல்ல. 1962 இல் இந்திய சீனாவுடன் போர் மூண்டபோது இலங்கை இந்தியா சார்பு நிலைமையை எடுக்கும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது பிரதமராக இருந்த சிறிமாவோ நடுநிலையை வகித்தார். பின்னர் இருநாடுகளையும் அரவணைக்க கொழும்பு மாநாட்டை நடத்தினார். இது இந்தியாவுக்கு ஏற்பட்ட முதல் ஏமாற்றம்.
இதன் பின்னரும் ஏமாற்றங்கள் தொடர்ந்தன.

சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தின் தோல்வி, பலாலி விமான நிலையத்தின் நிச்சயமற்ற எதிர்காலம், வடக்கில் சீனா காலடி பதிக்க இடமளிக்கவே கூடாது என்றிருந்த இந்தியாவுக்கு கவலை தரும் விதமாக நெடுந்தீவு, அனலைதீவு, புங்குடுதீவு ஆகியவற்றில் இயற்கை வள மின்திட்டங்களை சீனாவுக்கு வழங்கியமை, புதிய அரசியலமைப்பின் பெயரால் 13 ஆவது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கே சாவு மணி அடிக்கப்படவுள்ளமை என்று இந்தியாவின் கசப்பான அனுபவங்கள் நீண்டு செல்கின்றன.

தற்போது கிழக்கு முனையமும் இந்த பட்டியலில் இணைந்திருக்கின்றது.

இந்தத் தருணங்களில் எல்லாம் இந்தியா, போர்க்கொடி தூக்கியதோடு, விசேட பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்ததே தவிர எந்தவொரு இடத்திலும் தனது ஏமாற்றத்தை உணர்ந்து இலங்கையின் தீர்மானத்தினை மாற்றி அமைத்திருக்கவில்லை.

கிழக்கு கொள்கலன் முனைய விடயத்திலும் இந்தியா அமைதியாக அடங்கிவிடும் என்றே பொதுப்படையில் கொள்ள முடியும்.

ஆனால் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ இந்த விடயத்தில் ஏதாவது செய்தாக வேண்டிய நிலைமைக்குள் இந்தியா தள்ளப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே அமெரிக்காவுடனான எம்.சி.சி.ஒப்பந்தத்தை இலங்கை நிராகரித்தமையால் சினமடைந்திருக்கும் அத்தரப்பு இந்தியா ஊடாகவே இலங்கையை கையாள முனைகின்றது.

தற்போது இந்தியாவுக்கும் பின்னடைவு ஏற்படுகின்றது என்றால் அது மறைமுகமாக அமெரிக்காவுக்கும் விழுந்த பலத்த அடியாக மாறிவிடும்.

ஆகவே கிழக்கு கொள்கலன் முனைய விடயத்தினை இந்தியா கைவிட்டாலும் அமெரிக்கா கைவிடுவதாக இல்லை என்பது இராஜதந்திர மட்டங்களின் நிலைப்பாடாக உள்ளது.

கிழக்கு முனையம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்?

அதேநேரம், கிழக்கு கொள்கலன் முனையம் என்பது இந்தியாவுக்கு மூன்று விடயங்களில் முக்கியமாகின்றது; முதலாவது வர்த்தக ரீதியில், இரண்டாவது தேசிய பாதுகாப்பு ரீதியில், மூன்றாவது பிராந்தியத்தில் இந்தியாவின் கௌரவத்தை நிலை நிறுத்துவதற்கு முக்கியமாகின்றது.

ஆண்டொன்றுக்கு இந்தியாவின் 60 சதவீதமான கப்பல்கள் இந்த முனையப் பகுதிக்கு வருகின்றன. அத்துடன் இந்த முனையத்தின் ஆழம் 18 மீட்டர்களாக இருப்பதால் நவீன சர்வதேச கப்பல்கள் இங்கு வருதை தவிர்க்க முடியாது.

ஆகவே இந்த முனையத்தினை பொறுப்பெடுகின்றபோது நிகர இலாபத்தில் அதிக வருமானத்தினை இந்தியாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், தனியார் நிறுவனம் ஒன்றின் வசமுள்ள இன்னும் 9 ஆண்டுகளில் இந்த முனையத்தின் மறுபக்கத்தில் உள்ள ‘தெற்காசிய நுழைவாயில் முனையத்தின்’ உரிமம் துறைமுக அதிகாரசபையிடத்தில் வரவுள்ளது.

அவ்வாறு வருகின்றபோது அதனையும் இணைத்து இந்தியா பயன்படுத்தவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். இது இந்தியாவுக்கு இரட்டை வர்த்தக, வருமான நன்மையை பெறுவதற்கு வழிசமைப்பதாக உள்ளது.

அடுத்து தேசிய பாதுகாப்பு விடயத்தினை கருத்திற் கொண்டால், இந்த முனையத்தில் மூன்று சீன பாரந்தூக்கிகள் காணப்படுகின்றன.

அவை டாங்கிகளையே நகர்த்தவல்லன என்று இந்தியா நம்புகின்றது. இந்த முனையத்தின் உரிமத்தினை இந்திய பெறுமிடத்து அந்த பாரந்தூக்கிகளை அவசரத் தேவைக்கு கூட சீனாவினால் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படும்.

அதேநேரம் தற்போது 450 மீட்டர்களாக இருக்கும் கிழக்கு முனையத்தினை மேலும் நீட்டுகின்றபோது அருகில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தினை அல்லது தெற்கு கொள்கலன் முனையத்தினை (சி.ஐ.சி.ரி) அண்மித்து விடலாம்.

இவ்வாறு அண்மிப்பதன் ஊடாக அந்த முனையத்தினை முழுமையான காண்காணிப்புக்கு உட்படுத்துவது இந்தியாவுக்கு இலகுவாக அமையும்.

கடந்த காலங்களில் இந்தியக் கரையோரங்களில் அநாமதேயமாகவும், நீண்டகால ஆழ்கடல் மீன்பிடி என்ற பெயரிலும் தரித்து நிற்கும் கப்பல்கள், படகுகளின் மீது இந்தியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு ஆய்வு செய்கின்றபோது அவை சொற்ப நேரங்களில் காணாமல் போய்விடும்.

அவ்வாறு காணாமலாகின்ற கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்கு மிக அருகில் உள்ள கொழும்புத் துறைமுகத்திற்குள் தான் பதுங்கிக்கொள்கின்றன என்பது இந்தியாவின் நீண்டநாள் சந்தேகம்.

எனவே எதிர்காலத்தில் அவ்விதமான சம்பவங்கள் நிகழ்கின்றபோது, குறித்த முனையத்தினை பரிசோதித்து முடிவுகளை எடுப்பதற்கு இந்தியாவுக்கு பேருதவியாக கிழக்கு கொள்கலன் முனையமே இருக்கும் என்று கருதுகின்றது.

அதுமட்டுமன்றி சீனாவின் அண்மைக்கால நீர்மூழ்கி ரோந்துகளை அவதானிக்க வேண்டிய அவசியமும் இந்தியாவுக்கு உள்ளது.

இந்து சமுத்திரக் கடற்பிரப்பிற்கு வரும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்று அம்பாந்தோட்டைக்கோ அல்லது மிக நவீனமயப்படுத்தபட்டுள்ள சீனாவின் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திற்கோ தான் வந்தாக வேண்டும்.

அவ்வாறு வருகின்றபோது இந்தியாவினால் அதனை இலகுவாக அடையாளம் கண்டு தன்னை உசார் படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் இந்தியா தனது தென்கோடி எல்லையை பாதுகாப்பதற்கு சீனாவின் நடமாட்டத்தினையும் அதற்கு துணையாக இருக்கும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தினையும் தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஆகவே இந்தக் காரணங்களுக்காக கிழக்கு கொள்கலன் முனையத்தினை இந்தியா தன்னகப்படுத்தாது விட்டாலும் ஆகக்குறைந்தது தனது பிரசன்னத்தையாவது அங்கு வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகின்றது.
மூன்றாவது கௌரவப் பிரச்சினை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தானே தலைமகன் என்று உலகிற்கு காண்பித்துள்ளது. உலகமும் அவ்வாறு தான் நம்புகின்றது. இந்தியாவை மையப்படுத்தியே தெற்காசிய அரசியலை உலகம் கணக்கிடுகின்றது.

அவ்வாறு இருக்கையில் இலங்கை போன்ற மிகச் சிறிய நாடொன்றினால் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தமொன்றைக் கூட நடைமுறைப்படுத்த முடியாது ஏமாந்து நிற்பது மிகப்பெரும் அவமானமாகவே இருக்கும்.

அதுமட்டுமன்றி ஏற்கனவே தெற்காசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நோபாளம், மியன்மார், பூட்டான் என்று அனைத்து நாடுகளும் சீனச் சார்பு நிலையை எட்டியுள்ளன.

இலங்கை மீதான ‘பிடி’யும் தளர்கின்றபோது நிச்சயமாக அதுவும் சீனா சார்பு நிலையையே எடுக்கும். அவ்வாறு எடுக்குமாக இருந்தால் தெற்காசியவின் ‘தலைமகன்’ என்ற அந்தஸ்தும் பறிபோகும் அவலமே இந்தியாவுக்கு ஏற்படும். மேற்குலகமும் இந்தியாவைப் புறந்தள்ளி பிறிதொரு ‘சக்தியை’நோக்கி நகர தலைப்படும்.

இந்த நிலை பிராந்திய தலைமை, வல்லரசுக் கனவு என்று அனைத்தையும் சூனியமாக்கிவிடும் என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்துள்ளது.

ஆகவே தான் கிழக்கு கொள்கலன் முனையத்தினை இந்தியா பெற்றே ஆக வேண்டும் என்று துடியாய் துடித்துக்கொண்டிருக்கின்றது.

அவ்வாறாயின் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தினால் கட்டியெழுப்பட்டுள்ள ராஜபக்ஷவினரின் ஆட்சியை இந்தியத் தேசியவாதம் வெற்றி கொள்ள வேண்டும்.

அவ்வாறு வெற்றி கொள்வதாயின் ஆட்சிமாற்றமே ஒரே வழி. எதிர்க்கட்சிகள் பலமில்லாத நிலையில் அதற்கு உடனடிச் சாத்தியப்பாடுகள் மிகமிக குறைவாகும்.

ஆகவே இந்திய தேசிய வாதமும் சிங்கள-பௌத்த தேசிய வாதமும் முட்டி மோதிக் கொள்ளப்போகும் களத்தில் காய்கள் எப்படி நகர்த்தப்படப் போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.