January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டொமினிக் ஜீவா: கல்லும் முள்ளும் கடந்து வளர்ந்த மல்லிகை

– வேதநாயகம் தபேந்திரன்

மல்லிகை என்றால் மலரை மட்டும் நினைத்திருந்த ஈழத்தில், மலர் மட்டுமல்ல இலக்கியமும் தான் என நினைக்க வைத்தவர் மூத்த இலக்கியவாதி டொமினிக் ஜீவா.

சாமானியன் சரித்திரம் படைக்கலாமென்பதற்கு உதாரண புருஷனாக வாழ்ந்து மறைந்துள்ளார் . அதற்கு அவர் கடந்து வந்த பாதைகள் கல்லும் முள்ளும் தான்.

“மல்லிகை” சஞ்சிகையை அச்சடித்த பின் தனது சைக்கிளில் ஒவ்வொரு இடமாகக் கொண்டு சென்று விற்று அதன் உயிர் வாழ்தலை நீடிக்கச் செய்த சாதனையை வெறுமனே எழுத்துகளால் சொல்லி விட்டுப் போக முடியாது.

யாழ்ப்பாண நகரச் சூழலில் 1927 ஆம் ஆண்டு பிறந்தது 94 ஆண்டுகள் வாழ்ந்து இலக்கியச் சாதனையாளராக தனது பூவுலக வாழ்வை 28.01.2021 ஆம் திகதியுடன் நிறைவு செய்துள்ளார்.

சாமானியக் குடும்பத்தில் பிறந்த இவர் பழைமைவாதிகளைக் கடந்து இலக்கியம் படைத்து சர்வதேசமெங்கும் பேசப்படும் ஒருவராக உள்ளார்.

இன்று ஈழத்தில் மட்டுமல்ல முழு தமிழ்கூறும் நல்லுலகிலும் கொண்டாடப்படும் ஒருவராக அவரைக் காண்கின்றோம்.

சர்வதேச ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்கள் யாவும் அவரைக் கொண்டாடுவதிலிருந்து இதனைக் கண்டு கொள்ளலாம்.

எனது அறிவுக்கு எட்டிய வகையில் இவ்வாறு கொண்டாடப்படும் ஒருவராக இவரே உள்ளார். மல்லிகை என்ற கலை இலக்கிய மாதாந்த சஞ்சிகையை 50 ஆண்டுகள் வரையில் வெளியிட்டு வந்தார்.

ஓயாது சுழன்றடித்த போரிலும் மூழ்கி விடாமல் இவர் மல்லிகையை வெளியிட்டது உண்மையிலேயே சாதனை தான்.

முப்பத்தாறு இயக்கங்கள் தாயக விடுதலைக்காகப் போராடிய ஒரு காலம் இருந்தது.  இயக்க முரண்பாடுகளால் இலக்கியவாதிகள் மீது துப்பாக்கி முனையை நீட்டிய காலங்கள் இருந்தது.

ஆனால் யாவராலும் மதிக்கப்பட்டுச் சுதந்திரமாக இயங்கிய ஒருவராக டொமினிக் ஜீவா ஐயா தான் இருந்தார்.

தனது கொள்கையை உறுதியுடன் உரைத்து எப்போதுமே நிமிர்ந்து நின்றார். அவர் கம்யூனிஸ சித்தாந்தத்தை தனது ஒரு கண்ணாகவும் முற்போக்கு இலக்கியத்தை மறு கண்ணாகவும் கொண்டிருந்தார்.

தனது கொள்கையை எந்தவித சமரசங்களுக்கும் இடமின்றி ஓயாது உரைத்தவர்.
அவரை ஒரு முறை கேட்டார்கள்,  “நீங்கள் ஒரு இடதுசாரி. ஆனால் இந்துப் பாடசாலையான யாழ். இந்துக் கல்லூரியில் உங்கள் மகன் திலீபனைச் சேர்த்திருக்கிறீர்களே ?

அதற்கு அவர் சொன்ன பதில் “எனது அரசியல் குரு கம்யூனிஸ்ட் கார்த்திகேயன் யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர். சமூக மாற்றத்திற்காக உண்மையாக உழைத்தவர்.

அப்படிப்பட்ட ஒரு பாடசாலையின் வளாகத்தில் எனது மகனது பாதம் பட்டால் அவனும் இந்தச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஒரு பிரசையாக வருவான்”என்றார்.

கோட்பாடுகளைத் தமக்கு விளம்பரமாகப் பாவிக்காது உண்மையாக வாழ்ந்த ஒருவர் தான் டொமினிக் ஜீவா.

மல்லிகை சஞ்சிகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களை அட்டைப் படமாகப் பிரசுரித்துக் கௌரவித்துக் கொண்டிருந்தார்.

அது குறித்து அவரைக் கேட்டனர். “வாழும் போதே ஒரு எழுத்தாளனைக் கௌரவிக்க வேண்டும். அதனை அவன் பார்த்து மகிழ வேண்டும். அதுவே அவன் அடையும் பேறு” என்றார்.

சிபாரிசு ஏதுமில்லாமல் தரமான எழுத்துகளையும் மல்லிகை ஊடாக வளர்த்து எடுத்தார்.
அவரால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர் தலைமுறைகள் உள்ளனர்.

‘மல்லிகைப் பந்தல்’ என்ற வெளியீட்டகம் ஊடாக பல தரம் வாய்ந்த நூல்களை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிய மல்லிகை அலுவலகம் 1990 ஜுன் மாதம் ஆரம்பித்த போருக்குப் பின்பாக கொழும்பில் இயங்கத் தொடங்கியது.விடாப்பிடியாக நின்று மல்லிகையைக் கொண்டு வந்தார்.

தனது எழுத்துகளுக்காக இருமுறை சிறந்த சிறுகதைத் தொகுதிகளுக்கான அரச சாகித்திய விருதையும் பெற்றவர். தாயக நிலத்திலும் புலத்திலும் பல கௌரவிப்புகளைப் பெற்றவர்.

தனது குடும்பச் சூழல், அந்நாளைய சமூக அடக்குமுறைகள் காரணமாக யாழ் நகரில் “OLR” என அழைக்கப்படும் சென். மேரிஸ் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

ஆனால் பின்னாளில் தனது இலக்கிய தாகத்தால் எழுத்துகளால் உலகெங்கும் பேசப்பட்டார். யாழ்.பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ இலக்கிய கலாநிதி பட்டத்தை வழங்காமல் கௌரவ இலக்கிய முதுகலைமாணி பட்டத்தை வழங்க முன் வந்தபோது மறுத்தார்.

ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினாலும் தனது தேடல்களால் ஆளுமையை வளர்த்துக் கொண்ட படிக்காத மேதை.

குடும்பப் பின்னணி, வறுமை, கல்வித் தகைமை என்பவை முன்னேறுவதற்குத் தடையல்ல. கடின உழைப்பு உயர்த்தும் என்பதற்கு உதாரணம் இவர் தான்.

ஈழத்து இலக்கிய உலகின் உன்னதமான ஒரு சகாப்தம் அவர். காலங்கள் பல கடந்தாலும் தமிழ் கூறும் நல் உலகால் போற்றப்படுவார் என்பது திண்ணம்.