January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடித்தழிப்பு முதல் அடிக்கல் வரை: ‘மேலிடத்து அழுத்தத்தை’ தணித்த அந்த 60 மணிநேரம்

-யோகி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்…ஜனவரி 8 ஆம் திகதி – இரவு 8.30 மணி…

திடீரென கட்டடங்களை தகர்க்கும் இயந்திரம் உள்ளே செல்கின்றது. மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

பல்கலைக்கழக பதிவாளரின் வழிகாட்டலில் கட்டடமொன்றை தகர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களை நினைவு கூர்வதற்காக 2018ஆம் ஆண்டு மாணவர்களின் பெருமுயற்சியால் நிதி சேகரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தழிப்பதற்குரிய நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

அந்த செய்தி மாணவர்களிடத்தில் தீயாய் பரவியது. சொற்ப நேரத்தில் மாணவர்கள் பல்கலைக்கழக வளாக நுழைவாயிலில் கூடிவிட்டார்கள்.

பழைய மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என்று பெருங்கூட்டம் வளாகத்தைச் சூழ்ந்து கொண்டது.

ஆனால் எந்தவொரு நபரையும் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்காது பொலிஸாரும் இராணுவமும் மேலதிகமாக வரவழைக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினரும் ‘பாதுகாப்பு வளையத்தினை’ அமைத்திருந்தனர்.

“மேலிடத்து அழுத்தங்கள்”

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜாவுடன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உள்ளடங்கிய பிரதிநிதிகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.

“மேலிடத்து அழுத்தங்கள் அதிகமாக உள்ளதால் பல்கலைக்கழகத்தினுள் இருக்கும் சட்டவிரோத கட்டடங்களை அகற்ற வேண்டியுள்ளது” என்று பதிலளித்தார் துணைவேந்தர்.

இந்தப் பதில் ஒன்று கூடியிருந்த மாணவர்களுக்குள் எழுச்சியை எற்படுத்த நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கோசங்கள் எழுப்பப்பட்டன. அவற்றில் துணைவேந்தருக்கு எதிரான கோசங்கள் அதிகமாக இருந்தன.

இதற்குள் சட்டத்தரணி சுகாஸும் மாணவர்கள் சிலரும் பின்வழியாக பல்கலைக்கழகத்திற்குள் சென்று மீளத்திரும்பி ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி’ இடித்தழிக்கப்பட்டுவிட்ட செய்தியை வெளியில் வந்து பகிரங்கப்படுத்தினர்.

இதனால் அங்கு நள்ளிரவைத் தாண்டியும் பெருங்கூட்டம் திரளாக இருந்தது. பதிலுக்கு இராணுவமும் மேலதிகமாக குவிக்கப்பட்டது.

இதற்கிடையில் தமது பாதுகாப்பு வளையத்தினை கடந்து பல்கலைக்கழகத்திற்குள் சிலர் சென்று திரும்பியிருக்கின்றார்கள் என்ற தகவல் அவ்விடத்தில் சிவில் உடையில் இருந்த புலனாய்வாளர்களின் காதுகளுக்கு எட்டவும் தகவல் பொலிஸாருக்கு பரிமாற்றப்பட்டது.

அதனால் சினமடைந்த பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்தின் எல்லையில் அமர்ந்திருந்த இரு மாணவர்களை கைது செய்து கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழ்ந்த பகுதியெங்கும் கூட்டங்கூட்டமாக மாணவர்கள் குழுமியிருந்து போராட்டங்களை தொடர்ந்து கொண்டிருக்க பொழுதும் புலர்ந்தது.

இரண்டாம் நாளான ஜனவரி 9ஆம் திகதி மீண்டும் துணைவேந்தருக்கும் மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

தான் உடைக்காது விட்டிருந்தால் “வெளியிலிருந்து சில சக்திகள் வந்து உடைத்திருப்பார்கள். அது வேறு பல பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கும்” என்று துணைவேந்தர் குறிப்பிட்டார்.

எனினும், மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லை.

“மீண்டும் தூபி கட்டப்படுவது உறுதி செய்யப்படும் வரையில்” போராடப்போவதாக கூறிவிட்டு வெளியே வந்து துணைவேந்தருடனான சந்திப்பு பற்றி வெளிப்படுத்தினர்.

இதனால் நிலைமைகள் மோசமடைந்தன. பதற்றமான சூழல் மேலும் அதிகரித்தது.

உண்ணாவிரதப் போராட்டம்

நண்பகல் ஆகின்றபோது, இரவு கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் யாழ்.நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, அப்போது அப்பகுதியெங்கும் ஒலிபெருக்கி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.

“கொரோனா சட்டங்களின் பிரகாரம் சமூக இடைவெளிகள் பேணப்படாது ஒன்று கூடுபவர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைவாக நடத்தப்படுவார்கள். நாங்கள் இங்குள்ளவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்” என்பதே அந்த அறிவிப்பாக இருந்தது.

அதுமட்டுமன்றி, பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் நின்றிருந்த மாணவர்களின் விபரங்களும் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டன.

பொதுச் சுகாதார துறையினரும் கொரோனா பாதுகாப்புச் சட்டங்களை அமுலாக்கும் விசேட பொலிஸாரும் அங்கு வந்திருந்தனர்.

கண்ணீர்ப்புகை இல்லை, தடியடி இல்லை. சொற்ப நேரத்தில் ‘நினைவுத் தூபி’ மீட்புக்காக கூடியிருந்த கூட்டம் கலைந்தது.

பிற்பகல் ஒன்றரை மணியளவில் “கொரோனா விதிகளுக்கு அமைவாக எங்களால் பெரியளவிலான போராட்டங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. நாம் அத்தகைய போராட்டத்தினை தற்காலிகமாக நிறுத்துகின்றோம்.

ஆனால் எமது மாணவர்கள் சிலர் நீதி கிடைக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்” என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இ. அனுசன் தெரிவித்தார்.

அதன்பிரகாரம் ஆரம்பத்தில் இரண்டு மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

பின்னர் அவர்களோடு மேலும் 7 பேர் ஒன்றிணைய 9 பேர் போராட்டத்தில் குதித்தனர். மாலையாகின்றபோது யாழ்.இந்துக்கல்லூரி மாணவனும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

இரவு கொட்டும் மழையில் தற்காலிக கொட்டகைக்குள் தங்கியிருந்த மாணவர்கள் போராட்டத்தினை தொடர்ந்தார்கள்.

அதிகாலை மூன்று மணியளவில் திடீரென மாணவர்களின் உண்ணாவிரத களத்திற்கு வருகைந்திருந்த துணைவேந்தர் பேச்சுக்களை நடத்தினார்.

மீண்டும் நினைவுத்தூபி கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார். சொற்ப நேரத்திற்குள்ளேயே நினைவுத் தூபிக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டமும் கைவிடப்பட்டது. அதற்கு மறுநாளே அத்திவாரம் அமைக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்து கிளம்பிய அதிர்வலைகள் 

இந்த விவகாரம் இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் அழுத்தமான ஒருமித்த கோசத்தை ஏற்படுத்தியிருந்ததைப் போல தமிழகத்திலும் அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.

இதற்கு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலும் ஒரு காரணமாக உள்ளது.

தமிழக முதலமைச்சர் எடிப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், கமலஹாசன், பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், சீமான், வைகோ, ராமதாஸ், டிடிவி தினகரன் என்று கண்டனங்களை

வெளியிட்டோரின் பட்டியல் நீண்டது. இது இந்திய மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதாகவே இருந்தது.

தமிழகம் மட்டுமன்றி, பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனடா, நோர்வே, சுவிட்சர்லாந்து, ஜேர்மன் என்று இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

குறிப்பாக கனடாவின் ஒன்டாரியோவில் வாகனப்பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

இவ்வாறு நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை உலகளவில் எதிர்ப்புக்குள்ளான விவகாரமாகியதால், அது இலங்கை அரசாங்கத்திற்கு நிச்சயமாக ‘புற அழுத்தம் ஒன்றை’ கொடுப்பதாகவே இருந்தது.

துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா எதற்காக 8 ஆம் திகதியை தேர்வு செய்து இரவோடு இரவாக நினைவுத்தூபியை உடைத்தார். அவருக்கு அழுத்தங்கள் கொடுத்தது யார்?

மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கையில் வடக்கில் இத்தகையதொரு பதற்றத்தினை ஏற்படுத்துவதற்கு கோட்டாபய அரசு விரும்புமா? இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கையிலிருந்து புறப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்தமையால் அது இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் மறைமுக செய்தியா என்றெல்லாம் கேள்விகள் அடுக்காக உள்ளன.

ஆகவே இந்த தூபி அழிப்பின் பின்னணி பற்றியும் மீள நிர்மாணிப்பதற்கான தீர்மானம் பற்றியும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது.

நினைவுத்தூபியை தகர்ப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக, தொழில்நுட்ப பிரிவுடன் கலந்துரையாடி “சட்டவிரோதமான சில நிர்மாணங்கள் இருக்கின்றன அவற்றை தகர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் அனுமதி அளித்துள்ளதால் அதற்குரிய இயந்திரவசதிகளை ஏற்பாடு செய்து தாருங்கள்” என்று கோரியிருக்கின்றார்.

தொழில்நுட்ப பிரிவு அதற்கான அனுமதியை உடனடியாகவே வழங்கியதோடு இயந்திரத்தினை வாடகைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துவிட்டது.

இருப்பினும் பல்கலைக்கழக வளாகத்தினுள் குறித்த இயந்திரம் எப்போது வரவேண்டும் என்பதை தான் பின்னர் அறிவிப்பதாக துணைவேந்தர் கூறியிருக்கின்றார்.

அதற்கமைவாக ஜனவரி எட்டாம் திகதி இரவு இயந்திரத்தினை பல்கலைக்கழகத்தினுள் வரவழைத்திருக்கின்றார்.

நினைவுத்தூபியை அழிப்பதற்குரிய வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கு பதிவாளரின் உதவியை நாடியிருக்கின்றார் துணைவேந்தர். அவரும் இட்டபணியை செவ்வனே செய்து முடித்தார்.

தனக்கு “மேலிடத்து அழுத்தங்கள் இருந்தன’ என்று கூறினாலும் அழுத்தங்களை வழங்கியிருக்கும் சக்திகளாக கருதப்பட்ட படைப்பிரிவும் பல்கலைக்கழக ஆணைக்குழுவும் அரசாங்கமும் கைவிரித்துவிட்டது.

அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல “நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை முழுக்க முழுக்க துணைவேந்தர் எடுத்த தீர்மானம்” என்று கூறினார்.

“நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. துணைவேந்தரின் அழைப்பிலேயே பல்கலைக்கழகத்திற்கு பாதுகாப்பு வழங்குகின்றோம்” என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் தெரிவித்தார்.

ஆனால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாத்திரம், “அண்மைய காலங்களில் நான்கண்ட சிறந்த நிர்வாகியும் துணைவேந்தரும் ஸ்ரீசற்குணராஜாவே.

அவர் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தமில்லாதது என்ற அடிப்படையில் நிர்மாணமொன்றை நீக்கியுள்ளார். வடக்கு – தெற்கு ஐக்கியம் பற்றி அவர் சிந்திக்கின்றார்.

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி, சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும். இதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் எமது மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

‘உயர்மட்ட அழுத்தங்கள்’ என்று கூறிவிட்டு இலகுவாக தப்ப நினைத்த துணை வேந்தர், செய்வதறியாது சிக்கிக்கொண்டார் என்றே கூறப்படுகின்றது.

திடீரென அதிகாலையில் மாணவர்களுடன் பேச்சுக்களை நடத்தியதும் தொடர்ந்து அடிக்கல் நாட்டலை அவசரமாகச் செய்ததும் ஏற்பட்ட பதற்றத்தினை தணிப்பதற்காக துணைவேந்தர் எடுத்த ஒரு உத்தியா என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கின்றன.

நினைவுத்தூபி கட்டி முடிக்கப்படும் வரையில் இந்தக் கேள்விகள் நீடிக்கப்போகின்றன.

இதேநேரம், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவரும் நினைவேந்தல் தூபியை தகர்ப்பதற்கான உத்தரவினை யார் வழங்கியது என்று துணைவேந்தரிடத்தில் கோரியுள்ளார்.

அதன்போது அவரிடம் தான் அளித்த பதிலை பகிர்வதற்கு தயாரில்லாத துணைவேந்தர் “சம்பவத்தின் அனைத்து விடயங்களையும் முழுமையாக அந்த அதிகாரியிடத்தில்” கூறிவிட்டேன் என்று மட்டும் பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் தலையீடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்த 24 மணிநேரத்தில் பல்கலைக்கழக சம்பவம் நடைபெறுகின்றது என்றால் ஜெய்சங்கர் வடக்கு கிழக்கு தமிழர்களை மையப்படுத்தி அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சந்தேகமொன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஜெய்சங்கரின் வருகைக்கும் நினைவுத்தூபி அழிப்புக்கும் இடையில் தொடர்பில்லை என்றே தோன்றுகின்றது.

உண்மையில், யாழ். பல்கலைக்கழக நினைவேந்தல் தூபி அழிக்கப்பட்ட பின்னர் இந்த விடயத்தில் தலையீடுகளைச் செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற மறுதினமான ஜனவரி 9ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தொடர்பு கொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் முயற்சி மேற்கொண்டிருந்தது.

அப்போது பிரதமர் தனது தேர்தல் தொகுதியான குருணாகலையில் இருந்தமையால் உடனடியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.

எனினும் அவர் ஜனவரி 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு திரும்பியதையடுத்து விஜேராமையிலுள்ள அவரது வாசஸ்தலத்திற்கு விரைந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவடைந்த மறுதினம் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தமிழ் நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுவதற்கு வழிகோலும் எனவும் பிரதமரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் கூறியிருக்கின்றார்.

இந்தியத் தூதுவரின் கரிசனையை அடுத்தே பிரதமர் மஹிந்த உடனடியாக செயலில் இறங்கி உத்தரவுகளை பிறப்பத்திருக்கின்றார்.

அதுமட்டுமன்றி பிரதமரும் இந்திய உயர்ஸ்தானிகரும் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவும் ஜனவரி 11ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை வரையில் தொடர்பாடலில் இருந்ததோடு பதற்றநிலையை தணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஒக்டோபரிலேயே ஆரம்பமான திட்டம்

யாழ்.பல்கலைக்கத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை தகர்க்கும் திட்டமானது ஒக்டோபரிலேயே ஆரம்பமாகியிருந்தது.

யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிவைத்திருந்த இரகசிய அறிக்கையில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கைகளையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த இரகசிய அறிக்கையானது ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்புபட்டுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவுத்தூபி இருக்கின்றமையை விரும்பாத மாணவர்களும் உள்ளதால் நினைவுத்தூபியானது அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அதனை தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை’ எடுக்குமாறும் அதில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் ‘தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவு தினங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளின்போது பல்வேறு நிகழ்ச்சியை நடத்தும் இடமாக இந்த நினைவுத்தூபி இருப்பதால் அதனை நிர்மூலமாக்க வேண்டும்’ என்றும் அழுத்திக் கூறப்பட்டுள்ளது.

இதனைத்தவிர யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பல்வேறு கருத்தரங்குகளில் இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்திக்கும் போதும் அவர்கள் எழுப்பிய விடயமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விடயமே காணப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு துறையின் புலனாய்வுப்பிரிவுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஆகவே நினைவுத்தூபி தகர்ப்பிற்கு காரணம் பாதுகாப்புத் தரப்பினரை மையப்படுத்திய அரசாங்கமே என்பது தற்போதைக்கு தெளிவாகின்றது.

ஸ்ரீஜெயவர்த்தன புர, வயம்ப, மொரட்டுவ பல்கலைக்கழங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி செய்த மக்கள் விடுதலை முன்னணியினரின் நினைவுத்தூபிகள் தாபிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகளும் கிரமமாக நடைபெற்று வருகின்றன.

அவ்வாறிருக்ககையில் வெறுமனே உயிர்நீத்தவர்களின் நினைவேந்தலைச் செய்வதற்காக தாபிக்கப்பட்ட தூபியை இடித்தழிப்பது எந்தவகையில் நியாயமாகும் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

இது தமிழினத்தினை இலக்கு வைத்து ‘அவர்கள் கையாலே அவர்கள் கண்ணைக் குத்தும்’ ஒரு செயற்பாடு என்றும் விமர்சனங்கள் உள்ளன.

இவ்வாறான நிலையில் இடிக்கப்பட்ட நினைவுத்தூபி மீளக்கட்டப்பட்டாலும் அது ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி’ என்ற படிமத்தினைக் கொண்டிருக்குமா என்பது தற்போது எழும் கேள்விக்குறியாகும்.

தற்போது கட்டப்படும் தூபி அனைவருக்கும் பொதுவான ‘அமைதித்தூபி’ என்றே இருக்கும் என்ற வியாக்கியானங்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

அதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் உடன்பட போவதில்லை என்று தெரிகின்றது.

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இருந்த இடத்தில் வேறு தூபிகள் அமைக்கப்படாது என்பது மாணவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

தற்போது நிலைமைகள் அமைதியாகிவிட்டதைப் போன்று காண்பிக்கப்பட்டாலும் நினைவுத்தூபியை இடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த சக்திகள், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி கட்டப்பட்டு விட்டது – மாணவர்கள் போராட்டமும் எழுச்சியும் வெற்றி கண்டுவிட்டது என்று காட்டப்படுவதை ஒருபோதும் விரும்பப்போவதில்லை.

அந்த சவால் எப்படி எதிர்கொள்ளப்படப் போகின்றது என்பது இனிவரும் களச்சூழ்நிலைகளைப் பொறுத்தே அமையும்.