இலங்கை அரசியலமைப்பின் 13 மற்றும் 19-ம் திருத்தங்களில் உள்ள சில நல்ல ஏற்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையிலேயே முன்னாள் துணை நீதியமைச்சர் டிலான் பெரேராவின் இந்தக் கருத்து வந்துள்ளது.
பதுளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிலான் பெரேரா,
“அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 20ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டு வரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அந்த உறுதிமொழி நிறைவேறப்போகின்றது. 19-இல் சில நல்ல விடயங்கள் உள்ளன. அவை பாதுகாக்கப்படவேண்டும். அதேபோல் 13ஆவது திருத்தச்சட்டத்திலும் நல்ல விடயங்கள் உள்ளன.
எனவே, புதிய அரசியலமைப்பை இயற்றும்போது மேற்படி திருத்தங்களில் உள்ள நல்ல விடயங்களை உள்வாங்கவேண்டும்.”
-என்று கூறியுள்ளார். ஆனால் 13-ம் திருத்தத்திலுள்ள அந்த ‘நல்ல’ விடயங்கள் பற்றி அவர் விரிவாக சொல்லவில்லை.
இந்திய – இலங்கை ஒப்பந்தம்
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கும் முயற்சியாக – 1987-ம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பலனாக – தமிழர்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு மாகாணசபை நிர்வாக முறையை வழங்கும் பொருட்டு 13-ம் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
பிரித்தானியர் காலம் தொட்டே இலங்கையில் மாகாண அலகுகள் இருந்த போதிலும் அவை பெயரளவு நிர்வாகங்களாகவே இருந்தன.
சுதந்திர இலங்கையில் 1978-இல் கொண்டுவரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் 1987-இல் கொண்டுவரப்பட்ட 13-ம் திருத்தமே 9 மாகாண அலகுகளுக்கும் நிர்வாக அதிகாரத்தை வழங்கியது.
இந்திய-இலங்கை ஒப்பந்த விதியின்படி, வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தற்காலிக ஏற்பாடாக 1988-இல் ஒரே நிர்வாக அலகாக இணைக்கப்பட்டன. ( தொடர்ந்தும் ஒரே நிர்வாகமாக இருக்க வேண்டுமா என்பது கிழக்கு மாகாணத்தில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடும் இருந்த போதிலும் அதற்கான வாய்ப்புகள் உருவாகவில்லை)
1988-இல் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காத வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபை, கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது.
பின்னர், வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்த அப்போதைய ஜனாதிபதியின் (ஜே.ஆர். ஜயவர்தன) நடவடிக்கை சட்டப்படி செல்லாது என்று 2006 இல்- உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, அடுத்த வருடமே இரண்டு மாகாணங்களும் தனித்தனி நிர்வாகங்களாக பிரிக்கப்பட்டன.
பின்னர் 2008-இல் கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டது. 2013-இல் தேர்தல் நடக்கும் வரை வடக்கு மாகாணசபையும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது.
காணி, பொலிஸ் அதிகாரங்கள்
13-ம் திருத்தப்படி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்க வேண்டிய பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இன்னும் வழங்கப்படாமல் அந்த நிர்வாகங்கள் மத்திய அரசின் பிடியிலேயே தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதாக தமிழர்கள் தரப்பில் தொடர்ச்சியாக விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் வடக்கு, கிழக்கு உட்பட தற்போதுள்ள 9 மாகாணசபைகளுக்கும் ஆதாரமாகவுள்ள 13-ம் திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று இப்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின் பல தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள சரத் வீரசேகர, “13-ம் திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டும்” என்று அண்மையில் கூறியிருந்தார்.
ஆனால், 13-ம் திருத்தத்தைக் கொண்டுவந்த இந்திய- இலங்கை ஒப்பந்தம் “வெறும் காகிதமாகி விடக்கூடாது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை அண்மையில் சந்தித்திருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்திருந்தார்.
அவ்வாறே, 13-ம் திருத்தத்தை புதிய அரசாங்கம் ஒழிக்கக் கூடாது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் கோரிவருகின்றனர்.
“ஒரே நாடு ஒரே சட்டம்”
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, “13-ம் திருத்தத்தை ஒழிப்பது என்பது வீண்வேலை, வடக்கு மற்றும் கிழக்குக்கு சமச்சீரற்ற அதிகாரப் பரவலாக்கல் அத்தியாவசியமானது” என்று அண்மையில் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்திலும், அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ஷவின் முதல்-தவணை ஜனாதிபதி ஆட்சியிலும் வெளியுறவு அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, தற்போதைய அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். (நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் அவர் அறிவித்திருந்தார்.)
“ஒரே நாடு- ஒரே சட்டம்” என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை வைத்திருக்கின்ற ராஜபக்ஷ அரசாங்கம் உறுதியாகக் கூறுகின்றது.
இனி, புதிய அரசியலமைப்பில் 13ம் திருத்தம் அப்படியே நீடிக்க வாய்ப்பில்லை என்றே அவதானிகள் கருதுகின்றனர்.
அப்படியானால், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, 13-ம் திருத்தத்தையும் தாண்டிய -“13 பிளஸ்”- தீர்வு தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று இந்தியாவுக்கு அளித்த உறுதிமொழி என்னவாகும்?
இனி, புதிய அரசியலமைப்பில் சில மாறுதல்களோடாவது 13-ம் திருத்தத்தின் அம்சங்கள் நீடிக்குமா அல்லது அப்படியே காணாமல்போய் விடுமா என்பது தான் இப்போது உள்ள கேள்வி.