October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தங்கம், இரத்தினக்கல் தொழில்கள் மீதான வரிகள் நீக்கம்!

இலங்கையில் தங்க நகைகள் மற்றும் இரத்தின வியாபாரிகள் ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 வீத வரியையும் தங்க இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 15 வீத வரியையும் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

.1971-ம் ஆண்டிலிருந்து தங்கநகைகள் மற்றும் இரத்தின ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிற்துறைக்கு இருந்துவந்த வருமான வரிச்சலுகை 2017-ம் ஆண்டில் புதிய வரிக்கொள்கை காரணமாக நீக்கப்பட்டது. இதனால் இந்தத் தொழிற்துறையில் ஈட்டப்படும் உண்மையான வருமானம் மறைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல் 2018-ம் ஆண்டில் தங்க இறக்குமதிகள் மீது கொண்டுவரப்பட்ட 15 வீத வரியால் நகைகளின் விலை உயர்ந்ததாகவும் ஜனாதிபதி அலுவலகம் கூறுகின்றது.

இந்தக் காரணங்களால் குறித்த வரிகளை உடனடியாக விலக்கிக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தங்கநகை தயாரிப்பாளர்களுக்கும் பாரம்பரிய ஆபரணக் கலைஞர்களுக்கும் தங்கம் கொள்வனவு செய்வதற்காக 4 வீத சலுகை வட்டியுடன் 10 லட்சம் ரூபா கடனுதவி வழங்குமாறும் அரச வங்கிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், தோட்டக் கம்பனிகளின் கீழுள்ளபயிரிடப்படாத காணிகளையும் இரத்தினம் தோண்டக்கூடிய இடங்களையும் அகழ்வுக்காக கையகப்படுத்தவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். பொருளாதார மீளுருவாக்கத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ, அமைச்சர் விமல் வீரவன்ஸ, தங்கம் மற்றும் இரத்தினக்கல் தொழிற்துறை சார்ந்தவர்கள் என பலரும் இன்றைய கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தனர்.

இலங்கையில் தங்க நகையின் விலை பவுனுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.