November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கும் தைப்பொங்கல் திருநாள்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர் பழமொழியாகும். தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த தை மாதத்தின் முதலாம் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தைப்பொங்கல் திருநாளாக கொண்டாடுகின்றனர்.

சங்க காலத்தில் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த தமிழர்கள் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமிக்கும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் படைத்து வழிபட்டமைக்கு சான்றுகள் உள்ளன. இதுவே நாளடைவில் மாறி தைப் பொங்கல் திருநாளாக மாறியது.

தைப்பொங்கல் பண்டிகை நான்கு நாட்களாக கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது.

முதல் நாள் போகிப் பண்டிகை என்றும், இரண்டாம் நாள் தைப்பொங்கல் என்றும், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என்றும் நான்காம் நாள் காணும் பொங்கல் என்றும் கொண்டாடப்படுகின்றது.

போகிப் பண்டிகை

போகி என்பது இந்திரனைக் குறிக்கும் சொல். வடநாட்டில் மக்கள் இந்திரனுக்கு வழிபாடு ஆற்றும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். வடநாட்டு மக்கள் விவசாய முறைக்கு இந்திர வழக்கத்தை ஏற்படுத்தினர்.

இந்திரன் மேகங்களுக்கு தலைவன் என்று புராணம் கூறுகிறது. மழையைத் தருவிக்கும் கடவுளாக வணங்கி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

போகியை மார்கழி மாதத்தின் இறுதி நாளாக கருதுவர். ‘பழையன கழிதல்’ என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி இல்லங்களை தூய்மைப் படுத்துவதையே போகி குறிக்கும்.

வீட்டில் உள்ள மாசுக்களை போக்குவது போல நாம் உள்ளங்களில் உள்ள மாக்சுகளையும் போக்கி நல்ல எண்ணங்கள் பொங்கி பிரகாசிக்க வேண்டிய நாளே போகிப் பண்டிகையாகும்.

தைப்பொங்கல்

தை மாதம் முதல் நாள் தைப்பொங்கல் நாள், உழவர் உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாள். தமது முதற் பயனை இறைவனுக்குக் கொடுத்து அதன்பின் தாமும் உண்டு சுற்றத்தவருக்கும் கொடுப்பது தொன்றுதொட்டு வந்த தமிழரின் பண்பாடாகும்.

வீட்டில் பெரியவர்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி, புத்தாடை அணிந்து வீட்டு முற்றத்தில் சாணத்தால் மெழுகி கோலமிட்டு வாழை, தோரணம் கட்டி, கரும்பு நாட்டி அவ்விடத்தை அலங்கரிப்பர்.

பூரண கும்பம் வைத்து, புது அடுப்பு வைத்து, அதற்கு மேல் புதுப்பானை வைத்து அதைச் சுற்றி நூல் கட்டி, மஞ்சள், இஞ்சி, மாவிலைகளால் பானையின் வாயைச் சுற்றி கட்டி அலங்கரிப்பர்.

பானைக்குள் நீரும் பசும்பாலும் ஊற்றி. பால் பொங்கி வரும் நேரம் ‘பொங்கலோ பொங்கல்’ என்று ஆரவாரம் இட்டு சூரியனை பார்த்து வணங்குவர்.

அதன்பின் புத்தரிசி பானையில் இட்டு சர்க்கரை பொங்கல் பொங்குவர்.

பொங்கி முடிந்ததும் தலை வாழையிலையில் பொங்கல், முக்கனிகள், பணியாரங்கள், கரும்பு என்பவற்றை படைத்து சூரியனை வழிபடுவர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வழிபடுவர். குழந்தைகள் வெடி வெடித்து ஆரவாரம் செய்து பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவர்.

பொங்கி முடிந்ததும் அயலவர்களுக்கும் கொடுத்து தாமும் உண்டு மகிழ்வார்கள். ஆலயங்களுக்கும் சென்று வழிபடுவர்.

மாட்டுப் பொங்கல்

இது மனிதர்கள் தாம் வளர்த்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா. இது பட்டிப் பொங்கல் என்றும் கூறப்படும்.

பட்டிப் பொங்கலன்று பட்டியை சுத்தப்படுத்தி காளைகளையும் பசுக்களையும் கன்றுகளையும் குளிர்ப்பாட்டி, விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிப்பர்.

மாடுகளின் கொம்புகளை அலங்கரித்து மாலையணிவித்து அழகுபடுத்துவர். பட்டியில் ஓரிடத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு வாழை இலையில் படைத்து தீபம் காட்டி தெய்வத்தை போல வழிபடுவார்கள்.

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதால் அது தெய்வமாக கருதப்பட்டது. தங்களுக்கு உதவி செய்த காளையையும் பால் தந்த பசுக்களையும் நன்றி உணர்வுடன் பாராட்டி கொண்டாடும் நாள் தான் பட்டிப்பொங்கல் எனப்படும்.

காணும் பொங்கல்

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என்று கூறுவர். தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று உற்றார்க்கும், அற்றார்க்கும் உதவும் காட்சியே காணும் பொங்கல் ஆகும்.

இந்த நாளில் தம்மை நாடி வருபவர்களுக்கு உணவு கொடுத்து சிறப்பிப்பார்கள். மணமான புதுமணத் தம்பதிகளுக்கு புத்தாடை வழங்கி நல்விருந்திட்டு மகிழ்விப்பார்கள்.

காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் சிலர் கூறுவர். அன்று பெண்கள் கூடி கும்மியடித்து ஆற்றங்கரைக்கு சென்று பொங்கல் பொங்கி மகிழ்வார்கள்.

ஆற்றுக்கு கன்னி என்றும் பெயருண்டு. யமுனை, கங்கை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, நர்மதை, துங்கபத்ரா, சரயு ஆகிய இந்த 9 ஆறுகளும் நவ கன்னிகள் என்று அழைக்கப்படுகின்றன.

தைப்பொங்கல் பண்டிகை நமக்கு பல செய்திகளைக் கூறி நிற்கின்றது. நன்றி உணர்வு, ஒற்றுமை, விருந்தோம்பல், இறை உணர்வு, இயற்கையோடு ஒட்டி வாழ்தல் என்பவற்றை பிரதிபலிக்கின்றது.

சூரியனுக்கு மட்டுமல்ல நமக்கு உணவு தருகின்ற விவசாயிகள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதையும் உணர்த்துகின்றது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று வள்ளுவப் பெருந்தகை விவசாயிகளையும் விவசாயத்தையும் போற்றுகின்றார்.

வீர விளையாட்டுக்கள்

தைப்பொங்கல் நாளில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் என்ற பெயர்களில் இளம் காளையர்கள் காளைகளை அடக்கும் விளையாட்டு, மாட்டுவண்டி ஓட்டப் பந்தயம் போன்றன தைப்பொங்கல் பண்டிகைக் காலத்தில் பிரபல்யம் பெற்ற வீர விளையாட்டுக்கள்.

சங்க இலக்கியங்கள் கூறும் தைப்பொங்கல்

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்”
என்று குறுந்தொகையும்
“தைஇத் திங்கள் தண்கயம் போல்”
என்று புறநானூறும்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ”
என்று கலித்தொகையும் அழகாக தைத் திங்கள் பற்றி கூறுகின்றன.

மலர்ந்துள்ள தைத் திங்களில் தரணி எங்கும் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கட்டும்.