சினிமாத்துறைக்கு தொடர்பில்லாத ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, இன்று சினிமாத்துறையில் தன்னை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்திக் கொண்டவர் தான் தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 ல் மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ள ஆரி அர்ஜூனன்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 1985 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் தேதி பிறந்து வளர்ந்த ஆரி, பழனியாண்டவர் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சொந்த ஊரிலேயே உயர்கல்வியையும் நிறைவு செய்துள்ளார்.
பின்னாளில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற துடிப்போடு சென்னையை நோக்கி வந்தவர், ஆரம்ப காலகட்டங்களில் வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்பட்டுள்ளார். ஒருபுறம் பிட்னஸ் சென்டரில் ஜிம் மாஸ்டராக பணிபுரியத் தொடங்கியதோடு மறுபுறம் சினிமாவுக்கான தேடலையும் தொடர்ந்துள்ளார்.
பன்முகத் திறமையாளர்
பின்னாளில் சினிமாப் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு உடலை வடிவமைப்பது, படத்துக்கான உடல் கட்டமைப்பை பேண பயிற்சியளிப்பது போன்ற பணிகளை செய்துவந்த ஆரி, அரங்கக் கலைப் பயிற்சியையும் பெற்று தனது நடிப்புத் துறைக்கான தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
பன்முகத் திறமைகளைக் கொண்ட ஆரி ஒரு நடிகராக மட்டுமல்லாது, சமூகப் பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வந்துள்ளார்.
குறிப்பாக, மரபணு மாற்றமில்லாத விவசாயம், நாட்டு விதைகள் குறித்த விழிப்பணர்வுகளில் நாட்டம் உள்ளவரான ஆரி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தனது குரலை ஓங்கி ஒலித்திருந்தார்.
‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அமைப்பின் மூலமாக தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு, ‘ஆரி முகம்’ என்ற அமைப்பைத் தொடங்கி சினிமாவில் சாதிக்க விரும்பும் உதவி இயக்குனர்களுக்கு ஊக்குவிப்பு என ஆரியின் முயற்சிகள் பல கோணங்களிலும் உள்ளன.
நெடுஞ்சாலை நாயகன்
ஆரிக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது 2014- இல் வெளியான நெடுஞ்சாலை தான். இந்தப் படத்திற்காக ஆரிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அடுத்த ஆண்டு வெளியான மாயாவும் அவருக்கு புகழைத் தேடித்தந்தது.
ஆனால், சினிமாவுக்கு அவரை அறிமுகப் படுத்திய படம் சேரன்- நவ்யா நாயர் நடிப்பில் வெளியானஆடும் கூத்து. ஆடும் கூத்து 2005 இல் வெளியாகி பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது.
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் 2010 இல் வெளியான இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அழுத்தமான கதைக்களத்தைக் கொண்டது.
அடுத்து ஆரிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த படம் தான் 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே.
தரணி, உன்னோடு கா உள்ளிட்ட படங்களிலும் நடித்த ஆரி அமானுஷ்ய கதையான மாயா படத்தில் நயன்தாராவுடன் நடித்தார்.
கடந்த பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியாவுடன் இணைந்து புதிய படமொன்றில் ஆரி ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் லொஸ்லியா மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இயக்குனர் ஆல்பர்ட் ராஜா இயக்கத்தில் உருவாகி வந்த இந்தப் படம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது ஆரியின் கைவசம், எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான், அலேகா, பகவான் என ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. சில படங்களின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் டீசர் போன்றன இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காதல் திருமணம்
2015ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த இலங்கைப் பெண்ணான நதியா என்பவரைத் திருமணம் செய்தார் ஆரி.
தங்களது காதல் வாழ்க்கை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருந்த ஆரியின் மனைவி நதியா, 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே திரைப்படத்தில் ஆரியைப் பார்த்ததையும் பின்னர் நண்பர் ஒருவரின் மூலமாக ஆரியின் நட்பு கிடைத்து, காதலாக மாறி திருமணபந்ததில் இணைந்ததையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தன்னை அறிமுகப்படுத்திய ஆரி, மிகவும் கஷ்டமான நாட்களில் தனது காதல் மனைவியே தனக்கு கை கொடுத்ததாக கூறியிருந்தார்.
பிக்பாஸ் போட்டியாளர்
தற்போது பிக்பாஸில் கலக்கி வரும் ஆரிக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உருவாகியிருப்பதைக் காணமுடிகிறது. சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாதவராக மாறியிருக்கிறார் ஆரி அர்ஜுனன்.
பிக்பாஸ் சீசன் 4 வீட்டிற்குள் அனைவரும் அவரை ஓரம்கட்ட முயன்றனர். இருந்தாலும் தனது இயல்பான செயல்களால் அவற்றை முறியடித்து தன்னை நிரூபித்து வருகிறார்.
ஆரி இயல்பாகவும், சில சமயங்களில் பொறுமையைத் தாண்டி கோபம் கொள்வதும், அறிவுறை வழங்குவதும் சக போட்டியாளர்களுக்கு பிடிக்காத விடயங்களாக உள்ளன. ஆனால் அதையும் தாண்டி, மக்களின் பேராதரவுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார் அவர்.
இம்முறை பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளர் பட்டத்தை ஆரி வெல்வாரா? இந்த வார-இறுதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.